இன்றைய செய்தித்தாள் 16/09/2016 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

இன்றைய செய்தித்தாள் 16/09/2016

         
🌍கோவை சிறையில் கழுத்தை அறுத்து கைதி தற்கொலை முயற்சி

கோவை : கோவை பன்னிமடை அருகேயுள்ள சஞ்சீவி நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (41). இவர், நகை பறிப்பு வழக்கில் மேட்டுப்பாளையம் போலீசாரால் கடந்த 9ம் தேதி கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். விசாரணை கைதியாக உள்ள இவர், நேற்று காலை திடீரென தனது கழுத்தை சாப்பாட்டு தட்டின் கூரிய முனையால் அறுத்துக்கொண்டார். முதலில் தனது வலது கை நரம்பையும் வெட்டியுள்ளார். அவரை உடனடியாக, கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவரது கழுத்தில் 6 தையல் போடப்பட்டுள்ளது. கையிலும் தையல் போட்டுள்ளனர். ``மேட்டுப்பாளையம் போலீசார் பொய் வழக்கு போட்டு கைது செய்ததால் கழுத்தை அறுத்துகொண் டேன்'' என செந்தில்குமார் கூறியுள்ளார்.

📡ஈரோடு அருகே ஜவுளி லாரிக்கு தீ வைப்பு

பவானி : ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் திருநகர் காலனியை சேர்ந்தவர் சேகர். இவரது கர்நாடக பதிவெண் கொண்ட லாரியில் ஜவுளி லோடு ஏற்றிக்கொண்டு காரமடையை சேர்ந்த சுரேஷ் (34) நேற்று முன்தினம் இரவு பெங்களூர் வழியாக சத்தியமங்கலத்துக்கு ஓட்டி வந்தார். நள்ளிரவில் சந்தைமேடு என்ற இடத்தில் காரில் வந்த 3 பேர் லாரியை வழிமறித்து தீ ை வத்தனர். தகவலறிந்து தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். 

🌍காவிரி: நாம் தமிழர் கட்சி பேரணியில் தீக்குளித்த விக்னேஷ்.. சோகத்தில் மூழ்கியது மன்னார்குடி !

மன்னார்குடி: காவிரி விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னையில் நடைபெற்ற பேரணியின் போது அக்கட்சியை சேர்ந்த விக்னேஷ் என்பவர் திடீரென தீக்குளித்த சம்பவம் மன்னார்குடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி கோபாலசமுத்திரம் மேலவீதியை சேர்ந்தவர் பாண்டியன் (விவசாயி). அவரது மனைவி கண்ணகி, இவரது மகன் விக்னேஷ் (26) இவர் மன்னார்குடி அர்பன் வங்கி பள்ளியில் 10ம் வகுப்பு முடித்துவிட்டு, லார்டு செவன் ஹில்ஸ் பள்ளியில் 12ம் வகுப்பு படித்தார்.

பின்னர் நாமக்கல் சுரபி பாலிடெக்னில் டி.எம்.இ. படித்துவிட்டு சென்னையில் சில ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தன்னை இணைத்து கொண்டு பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார். தற்போது திருவாரூர் மேற்கு மாவட்ட மாணவர் பாசறை செயலாளராகவும் உள்ளார்.

இந்நிலையில் சென்னையில் நேற்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் காவிரி உரிமை மீட்புப் பேரணி நடைபெற்றது. அதில் சீமான், அமீர், சேரன் உள்ளிட்ட பெரும் திரளானோர் கலந்து கொண்டனர். இந்தப் பேரணியில் கலந்துகொண்ட விக்னேஷ் திடீரென தன் மீது நெருப்பு வைத்து கொண்டார். தீயில் கருகிய அவரை அங்கிருந்தோர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவருக்கு உயிர்காக்கும் கருவி பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இச்செய்தி அறிந்த மன்னார்குடியில் உள்ள அவரது பெற்றோர்கள் அலறி துடித்தனர். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவர்களை சமாதானம் செய்தனர். மன்னார்குடியைச் சேர்ந்த இளைஞர் விக்னேஷ் தமிழர்களுக்காக சென்னையில் தீக்குளித்த சம்பவம் மன்னார்குடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

📡கேரள இளம் பெண் பலாத்கார - கொலை வழக்கு: விருதுநகர் வாலிபருக்கான மரண தண்டனை ரத்து

கேரள இளம் பெண் ஓடும் ரயிலில் இருந்து தள்ளி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்தது தொடர்பாக தமிழகத்தின் விருதுநகரைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பவருக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்கு தண்டனை 7 ஆண்டு சிறைத் தண்டனையாகக் குறைத்து உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கியது.

🌍டிஎன்பிஎஸ்சி குரூப்-1 அதிகாரிகள் 63 பேர் பணியில் தொடர அனுமதி

தமிழகத்தில் மாநில "குரூப் -1' அரசுப் பணியில் 2005-இல் சேர்ந்த 83 அதிகாரிகளின் நியமனத்தை "செல்லாது' என்று அறிவித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, அதை உறுதிப்படுத்தி உச்ச நீதிமன்றம் 2014-இல் பிறப்பித்த உத்தரவு ஆகியவற்றை உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை ரத்து செய்து தீர்ப்பளித்தது. இதையடுத்து, குரூப்-1 பணிக்குத் தேர்வான 83 பேரில் தற்போது பணியில் உள்ள 63 பேர் அரசுப் பணியைத் தொடரலாம் என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

📡டெங்கு காய்ச்சல் பாதிப்பு; டில்லியில் 14 பேர் பலி

புதுடில்லி: டில்லியில், சிக் குன் குனியாவுக்கு, 15 பேர் பலியாகியுள்ள நிலையில், டெங்கு காய்ச்சலும் வேகமாக பரவி வருகிறது. டெங்கு பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை, 14 ஆக உயர்ந்துள்ளது. 

🌍டிஎன்பிஎல்: முதல் அரையிறுதியில் திண்டுக்கல்-தூத்துக்குடி மோதல்

தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ்-தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிகள் இடையிலான முதல் அரையிறுதி ஆட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
திருநெல்வேயில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவதில் இரு அணிகளும் தீவிரமாக உள்ளன.
லீக் சுற்றில் திண்டுக்கல் அணி 7 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றிகளைப் பெற்றதோடு, 10 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 2-ஆவது இடத்தைப் பிடித்தது. தூத்துக்குடி அணி 4 ஆட்டங்களில் வென்று புள்ளிகள் பட்டியலில் 3-ஆவது இடத்தைப் பிடித்தது.
லீக் சுற்றில் சூப்பர் ஓவர் முறையில் தூத்துக்குடி அணியைத் தோற்கடித்தது திண்டுக்கல்.

அந்தத் தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் உள்ளது தூத்துக்குடி அணி. அதேநேரத்தில் திண்டுக்கல் அணியும் வலுவான அணியாக உள்ளது. எனவே இந்த அரையிறுதி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
போட்டி நேரம்: மாலை 6.30
நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

📡பாரா ஒலிம்பியன்கள் உயரிய விருதுக்கு தகுதியானவர்கள்

நாட்டின் உயரிய அங்கீகாரத்துக்கும், விருதுக்கும் பாரா ஒலிம்பியன்கள் தகுதியானவர்கள் என இந்திய தடகள ஜாம்பவான் மில்கா சிங் தெரிவித்துள்ளார்.
பிரேசிலின் ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன், ராஜஸ்தானைச் சேர்ந்த ஜஜாரியா உள்பட4 இந்தியர்கள் பதக்கம் வென்றுள்ளனர்.
இந்த நிலையில் மில்கா சிங் மேலும் கூறியிருப்பதாவது: பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றுள்ள வீரர்கள் உயரிய அங்கீகாரத்துக்கும், விருதுக்கும் தகுதியானவர்கள். கடின உழைப்பு, உறுதி, அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்கு அவர்கள் உதாரணமாக திகழ்கிறார்கள் என்றார்.

🌍சுமித்ரா மகாஜன் தலைமையில் எம்.பி.க்கள் குழு நாளை நியூஸிலாந்து பயணம்

மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜனின் தலைமையில் எம்.பி.க்கள் குழு வரும் சனிக்கிழமை முதல் நியூஸிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது.

📡விநாயகர் சிலை விசர்ஜனத்தில் 7 பேர் நீரில் மூழ்கி பலி

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் வியாழக்கிழமை விநாயகர் சிலை விசர்ஜனத்தின்போது 7 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 11 நாள்களாக விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாகக் கொண்டப்பட்டது. நாசிக் மாவட்டத்திலும் பல பகுதிகளில் பிரமாண்டமான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. விழா நிறைவடைந்ததை அடுத்து பல்வேறு நீர்நிலைகளில் அந்த சிலைகள் கரைக்கப்பட்டன.
முசால்கான் கிராமத்தில் உள்ள குளத்தில் நடைபெற்ற விநாயகர் சிலை விசர்ஜனத்தின்போது ராமேஷ்வர் (21), சந்தீப் (25) ஆகிய இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதே மாவட்டத்தின் வேறு சில இடங்களில் மேலும் 5 பேர் சிலை கரைப்பின் போது நீரில் மூழ்கி இறந்துவிட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🌍மும்பை தாக்குதல் விசாரணை: விரைவுபடுத்த பாகிஸ்தானுக்கு இந்தியா யோசனை

மும்பை பயங்கரவாதத் தாக்குதல் வழக்கின் விசாரணையை விரைந்து முடிப்பதற்கான வழிமுறைகளை பாகிஸ்தானுக்கு இந்தியா வழங்கியுள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தான் அரசுக்கு, இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் ஜெய்சங்கர் அண்மையில் கடிதம் எழுதியுள்ளார்.
பாகிஸ்தானில் இருந்து 2008-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு ஊடுருவி வந்த பயங்கரவாதிகள் மும்பையில் நுழைந்து பொதுமக்கள் மீதும், பாதுகாப்புப் படையினர் மீதும் கண்மூடித்தனமாகத் தாக்குதல்

நடத்தினர். இதில் 160-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்திய வரலாற்றில் மறக்க முடியாத கருப்புச் சம்பவமாக இது கருதப்படுகிறது. இந்தக் கொடூரத் தாக்குதலின் பின்னணியில் இருக்கும்பயங்கரவாதிகளைப் பிடிக்க பாகிஸ்தான் அரசு விசாரணை நடத்தி வருகிறது.

ஆனால், தாக்குதல் நடைபெற்று கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் ஆன நிலையிலும் விசாரணையை அந்நாட்டு அரசு

துரிதப்படுத்தாமல் மந்தமாகவே நடத்தி வருகிறது.
இந்நிலையில், அதனை விரைவுபடுத்துவதற்கான வழிமுறைகளையும், ஆலோசனைகளையும் இந்தியா தற்போது வழங்கியுள்ளது. 

📡மாயமான விமானத்தில் சென்ற 29 பேரும் இறந்துவிட்டனர்: விமானப் படை அறிவிப்பு

சென்னையில் இருந்து அந்தமானுக்கு சென்ற ஏஎன்-32 ரக விமானத்தில் பயணித்த 29 பேரும் இறந்துவிட்டனர் என்று இந்திய விமானப்படை வியாழக்கிழமை அதிகாரப்பூர்வமாகஅறிவித்தது.
இது தொடர்பாக தகவல் தெரிவித்து 29 பேரின் குடும்பத்தினருக்கும் விமானப்படை கடிதம் எழுதியுள்ளது. எனினும், தேடுதல் பணி தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

🌍சவூதியில் 62 மீனவர்களை மீட்கக் கோரிய வழக்கு: தமிழக மீன்வளத் துறைச் செயலர் நேரில் ஆஜராக உத்தரவு

சவூதி சிறையில் அடைக்கப்பட்டுள்ள 62 மீனவர்களை மீட்கக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைக்கு அதிருப்தி தெரிவித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, தமிழக மீன்வளத் துறைச் செயலர் நேரில் ஆஜராக வியாழக்கிழமை உத்தரவிட்டது.

📡பள்ளி மாணவியின் படத்தை முகநூலில் ஆபாசமாக வெளியிட்டவர் கைது

பள்ளி மாணவியின் படத்தை மார்ஃபிங் செய்து ஆபாச படமாக முகநூலில் வெளியிட்டதாக, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

🌍விஜயன் கொலை வழக்கு: ஆயுள் தண்டனையை எதிர்த்து பானு மேல்முறையீடு

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். உறவினர் விஜயன் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பானு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவுக்கு பதில் அளிக்கும்படிசிபிசிஐடி போலீஸாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

📡தனியார் மருத்துவ கல்லூரிகள்: நேரடியாக மாணவர் சேர்க்கை நடத்த தடை கோரி மனு

தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகங்கள் மாணவர் சேர்க்கையை நேரடியாக நடத்துவதற்கு தடை விதிக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளது.

🌍மத்திய அரசு நிறுவனங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

சென்னை: முழு அடைப்பால் சென்னையில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடக அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

📡பட்டாசு ஆலையில் தீ விபத்து

சிவகாசி அருகே விஸ்வநத்தத்தில் உள்ள பட்டாசு ஆலை உலர் மேடையில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. விஸ்வநத்ததில் சண்முகராஜ் (50) என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையில், வியாழக்கிழமை மதியம் பட்டாசு தயாரிக்கப் பயன்படும் மணி மருந்தை உலர் மேடையில் உலர வைத்துவிட்டு, தொழிலாளர்கள் மதிய உணவு சாப்பிடச்

சென்றுள்ளனர். அப்போது, உலர வைத்திருந்த மணி மருந்தில் உராய்தல் காரணமாக தீப்பற்றியது.
தகவல் அறிந்து சென்ற தீயணைப்பு படையினர், உலர் மேடையில் எரிந்துகொண்டிருந்த தீயை அணைத்தனர். தொழிலாளர்கள் சாப்பிடச் சென்றிருந்ததால், அதிர்ஷ்ட வசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. சம்பவ இடத்தை சிவகாசி வட்டாட்சியர் பாஸ்கரன், தீப்பெட்டி-பட்டாசுகளுக்கான தனி வட்டாசியர் முத்துலட்சுமி உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

இதுகுறித்து சிவகாசி நகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

🌍உள்ளாட்சித் தேர்தல் வரலாற்றில் முதல்முறை ஊராட்சிகளிலும் மின்னணு வாக்குப் பதிவு: குமரி மாவட்டத்தில் அறிமுகம்

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மாநிலத் தேர்தல் ஆணையர் பெ. சீத்தாராமன் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விக்ரமன். மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன், முதன்மைத் தேர்தல் அலுவலர் சம்பத்,

தமிழக உள்ளாட்சித் தேர்தல் வரலாற்றிலேயே முதல்முறையாக, ஊராட்சிப் பகுதிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்தும் முறை நிகழாண்டுஅறிமுகப்படுத்தப்படவுள்ளது. குமரி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சிகளில் மின்னணு இயந்திரங்கள் மூலம் வாக்குப் பதிவு நடைபெறும் என, மாநிலத் தேர்தல் ஆணையர் பெ.சீத்தாராமன் தெரிவித்தார்.

📡இளம்பெண் கொலை செய்யப்பட்ட விவகாரம்: கேரள இளைஞர் தற்கொலை முயற்சி

கோவை மாவட்டம், அன்னூரில் ஒருதலைக் காதலால் இளம்பெண் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் கேரள இளைஞர் சாணி பவுடர் குடித்துதற்கொலைக்கு முயன்றுள்ளார். 

🌍கணினி வாயிலாக பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி: தேர்வுத் துறை பரிசீலனை

தமிழகத்தில், பத்தாம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியை கணினிமயமாக்குவது குறித்து தேர்வுத் துறை பரிசீலித்து வருகிறது.

📡காவிரி: எம்.பி., எம்எல்ஏ.க்களுடன் பிரதமர் இல்லத்தை முற்றுகையிட வேண்டும்

காவிரி பிரச்னையில் தமிழகத்தின் உரிமையை மீட்கும் வரை, எம்.பி., எம்எல்ஏக்களுடன் சென்று தில்லியில் உள்ள பிரதமர் இல்லத்தை முற்றுகையிட வேண்டும் என, பாமக தலைவர் ஜி.கே.மணி கூறினார்.

🌍உணர்வுகளைத் தூண்டும் திரைப்பட காட்சிகளால் இளம் தலைமுறை பாதிப்பு

திரைப்படம் மற்றும் சின்னத்திரையில் வரும் உணர்வுகளைத் தூண்டும் காட்சிகளால் இளம் தலைமுறையினர் பாதிக்கப்பட்டுள்ளனர் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.

📡மதனை கைது செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

மோசடி வழக்கில் தலைமறைவாகி இருக்கும் திரைப்பட தயாரிப்பாளர் மதனை கைது செய்யுமாறு காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

🌍உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும்

உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கண்டிப்பாக போட்டியிடும் என்று அக்கட்சியின் தமிழகத் தலைவர் சு.திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

📡பேரறிவாளனை 3 மாதங்கள் பரோலில் விடுதலை செய்ய வேண்டும்

சிறையில் உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கும் பேரறிவாளனை 3 மாதங்கள் பரோலில் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும்

🌍காரைக்கால் மாவட்டத்தில் 2000 கடைகள் அடைப்பு

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து 2000 கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. தனியார் பேருந்துகள், வேன்கள் மற்றும் ஆட்டோக்கள் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளன. 

📡சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன்

ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை தள்ளுபடி செய்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன் என்று அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா தெரிவித்தார்.

🌍144 தடை உத்தரவு 25-ந்தேதி வரை நீட்டிப்பு

144 தடை உத்தரவு 25-ந்தேதி வரை நீட்டிப்பு

தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் கடந்த 12-ந்தேதி வன்முறை ஏற்பட்டதால் 144 தடை உத்தரவும், 16 போலீஸ் நிலைய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. நேற்று முன்தினம் அமைதி திரும்பியதை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு வாபஸ் பெறப்பட்டது.

இந்த நிலையில், சில தவிர்க்க முடியாத காரணங்களால் வருகிற 25-ந்தேதி நள்ளிரவு 12 மணி வரை பெங்களூரு நகர் முழுவதும் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளதாக மாநகர போலீஸ் கமிஷனர் என்.எஸ். மேகரிக் தெரிவித்து உள்ளார்.

📡கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து இன்று நடைபெற்று வரும் முழு அடைப்பு போராட்டம் காரணமாக கோயம்பேடு சந்தை நள்ளிரவு முதல் மூடப்பட்டுள்ளது. சுமைதூக்கும் தொழிலாளர்களும் இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் கோயம்பேடு காய்கறிச் சந்தை வெளிச்சோடி காணப்படுகிறது.

🌍முழு அடைப்பு போராட்டதில் மீனவர்கள் திரளாக பங்கேற்பு

கர்நாடகாவை கண்டித்து நடைபெறும் முழு அடைப்பு போராட்டதில் மீனவர்கள் திரளாக பங்கேற்றுள்ளனர். 15,000க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இன்று கடலுக்கு மீனவர்கள் செல்லவில்லை. 

📡சிவகங்கையில் திமுக ரயில் மறியல்

சிவகங்கையில் திமுக ரயில் மறியல்

சிவங்கையில் திமுகவினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசை கண்டித்து தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இதற்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது. சிவகங்கையில் ராமேஸ்வரம் செல்லக் கூடிய ரயிலை தடுத்து நிறுத்தி திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரயில் மறியலில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

🌍தமிழகம் முழுவதும் கடையடைப்பு

சென்னை: காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக மாநிலத்தில் நடந்த வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று மாநிலம் முழுவதும் முழு கடையடைப்பு நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பெரும்பாலான மாவட்டங்களில் ஆதரவு கிடைத்தது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, தஞ்சை , திருவாரூர், நாகை உள்ளிட்ட பெரும் பகுதிகளில் கடைகள் 90 சதவீதம் அடைக்கப்பட்டுள்ளன. அரசு பஸ்கள் இயங்கின, ஆட்டோக்கள் ஓடவில்லை. அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இயங்கின. சில பகுதிகளில் தனியார் பள்ளிகள் மூடப்பட்டு கிடந்தன. காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று ( 16ம் தேதி )முழுக்கடையடைப்பு நடத்த பல்வேறு வணிகர் சங்கங்கள், விவசாய அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளன.

காவிரியில் தண்ணீர் திறந்து விட சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதை அடுத்து கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தின. தொடர்ந்து பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட நகரங்களில் தமிழர்களின் வர்த்தக நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 80 க்கும் மேற்பட்ட தமிழக வாகனங்கள் தீக்கிரையாகின. இது போன்ற தமிழர்கள் எதிரான சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் கடைகளை அடைக்க , விவசாய சங்கத்தினர் , வணிகர் சங்க பல்வேறு அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன, இதனை ஏற்று பல்வேறு கடைகளும் முழு அளவில் அடைக்கப்படவுள்ளன.

இதற்கு தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ., இடது சாரிகள், தொ.மு.ச.., சிஐடியு., உள்ளிட்ட கட்சிகள் , அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

📡பெண்களுக்குத் தொல்லை கொடுப்போர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை தேவை

பெண்களைத் தொடர்ந்து சென்று தொல்லை கொடுப்பவர்களுக்கு குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் தண்டனை வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

🌍வியாபாரி கொலை வழக்கில் மூவருக்கு ஆயுள்

காட்பாடி அருகே பருத்தி வியாபாரியைக் கொலை செய்த வழக்கில் இளைஞர்கள் மூவருக்கு ஆயுள் தண்டனை விதித்து வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது.
காட்பாடி அருகே சஞ்சீவிராயபுரத்தைச் சேர்ந்தவர் பருத்தி வியாபாரி விநாயகம் (30). இவருக்கு மனைவி மீனா, இரு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 2012-ஆம் ஆண்டு, மே மாதம் 14-ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த தனவேல் (31), துரைசாமி(33), ஸ்ரீரங்கன் (30) ஆகியோருடன் விநாயகம் மது அருந்தி சூதாடியுள்ளார்.
அப்போது அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் மூவரும் சேர்ந்து விநாயகத்தை தாக்கி கொலை செய்து ராமாபுரம் பகுதியில் தண்டவாளத்தில் வீசிச் சென்றனர்.
இதுகுறித்து காட்பாடி ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து மூவரையும் கைது செய்து முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.நடராஜன்,குற்றம் சாட்டப்பட்ட தனவேல், துரைசாமி, ஸ்ரீரங்கன் ஆகிய மூவருக்கும் ஆயுள் சிறைத் தண்டனையும், தலா ரூ. 1,500 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

📡தேசிய அளவில் நீர்க் கொள்கை: சரத்குமார் வலியுறுத்தல்

தேசிய அளவில் தண்ணீருக்கென தனிக் கொள்கையை உருவாக்க வேண்டுமென அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் வியாழக்கிழமை தெரிவித்தார்.

🌍எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் விருதுகள்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

பள்ளிப் பருவத்திலேயே இசையில் திறமைமிக்கவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு, எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் விருதுகள் வழங்க வேண்டும் என்று தமாகா தலைவர்ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்

📡உச்ச நீதிமன்ற விதிகள்படியே அரசு வழக்குரைஞர்கள் நியமனம்: அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள சட்ட விதிகளைப் பின்பற்றி, மாநில அரசு தயாரிக்கும் வரைவு விதிகளுக்கு உட்பட்டுத்தான் எதிர்காலத்தில் அரசு வழக்குரைஞர் நியமனங்கள்,இருக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

🌍வெப்பச்சலனம்: மழைக்கு வாய்ப்பு

வெப்பச்சலனத்தின் காரணமாக தமிழகத்தில் இடியுடன்கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கக் கடலில் ஆந்திர, ஒடிஸா கடற்கரைப் பகுதியில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆந்திரத்தை நோக்கி நகர்ந்தது. இதன் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்து வந்தது.
வியாழக்கிழமை காலை நிலவரப்படி அதிகபட்சமாக மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் 50 மி.மீ, காஞ்சிபுரத்தில் 30 மி.மீ, அரக்கோணத்தில் 20 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது. இதுதவிர, திருப்பூர்,

திருவாரூர் மாவட்டம் குடவாசல், கிருஷ்ணகிரி மாவட்டம் தளி, திருப்பூர் மாவட்டம் காங்கேயம், வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் - வாலாஜா, ஊட்டி, சிவகங்கை, வேலூர், நீலகிரி மாவட்டம்நடுவட்டம் ஆகிய இடங்களில் 10 மி.மீ.

மழை பதிவாகிவுள்ளது. 
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது:
தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பில்லை. இருப்பினும், வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடும்.

📡உள்ளாட்சித் தேர்தல்: அரசிதழில் வெளியீடு

உள்ளாட்சித் தேர்தல் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என்று தமிழக அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலர் டி.எஸ்.ராஜசேகர் வெளியிட்ட அறிவிப்பாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-
பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் பதவி இடங்களுக்கான தேர்தல், தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் சின்னங்கள் முன்பதிவு மற்றும் ஒதுக்கீடு ஆணை 2016-ன்படி, அரசியல் கட்சிகளின்அடிப்படையில் நடத்தப்படும். மேலும், உள்ளாட்சித் தேர்தல் காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணிக்கு நிறைவடைய உள்ளது.
தேர்தல் தேதி அறிவிப்பின் போது அது குறித்த விரிவாக
தெரிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

🌍முழு கடையடைப்புப் போராட்டம்: வன்முறையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (செப்.16) நடைபெறும் முழு கடையடைப்புப் போராட்டத்தின்போது யாரேனும் வன்முறையில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை எச்சரித்துள்ளது.

📡பெட்ரோல் 58 காசு அதிகரிப்பு டீசல் 31 காசு குறைப்பு

புதுடெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு 58 காசு அதிகரித்துள்ளது. இந்த ஒரு மாதத்தில் இரண்டாவது முறையாக பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதே சமயம் டீசல் லிட்டருக்கு 31 காசு குறைக்கப்பட்டுள்ளது. 

🌍அண்ணா பல்கலை.யில் "ராகிங்' தடுப்புக்கு புதிய செயலி!

பல்கலைக்கழக வளாகத்தில் "ராகிங்கை' தடுக்கவும், பல்கலைக்கழகம், மாணவர்கள் குறித்த முழு விவரங்களை அறிந்து கொள்ளவும் புதிய செல்லிடப்பேசி செயலியை (ஆண்ட்ராய்ட்அப்ளிகேஷன்) அண்ணா பல்கலைக்கழகத்தின் கணிணி அறிவியல் துறை உருவாக்கி வருகிறது.
மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் மிகுந்த பயனுள்ள இந்தச் செயலியை பல்கலைக்கழகம் விரைவில் அறிமுகம் செய்யவிருக்கிறது.

📡கர்நாடகத்தை கண்டித்து இன்று தமிழகம், புதுவையில் முழு அடைப்பு- இயல்பு வாழ்க்கை முடக்கம்!

சென்னை: கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து தமிழகம் மற்றும் புதுவையில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் இரு மாநிலங்களிலும் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

🌍வன்முறைகளைத் தடுக்க வேண்டும்: தமிழக, கர்நாடக அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

காவிரி விவகாரத்தால் கர்நாடகம், தமிழகம் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் அரங்கேறும் வன்முறைகளைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இரு மாநிலஅரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

📡பரவலான 'டிஜிட்டல்' தொழில்நுட்பம் பயன்படுத்த டாடா ஆர்வம்

மும்பை : டாடா சன்ஸ் தலைவர் சைரஸ் மிஸ்திரி கூறியதாவது: டாடா குழுமம், அதன் கீழ் உள்ள பல்வேறு நிறுவனங்களின் வளர்ச்சிக்கும், அதன் மூலம், அதிகளவில் வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கவும் திட்டமிட்டுள்ளது. இதையொட்டி, தற்போது அனைத்து செயல்பாடுகளும், 'டிஜிட்டல்' முறைக்கு மாறி வருவதால், அத்தொழில்நுட்பத்தை, டாடா குழும நிறுவனங்களில் பரவலாக பயன்படுத்த உள்ளோம். இதன் மூலம், அடுத்த, 150 ஆண்டுகளுக்கு தேவையான, வலுவான டிஜிட்டல் தொழில்நுட்ப அடித்தளத்தை கொண்டதாக, டாடா குழுமம் உருவெடுக்கும்.தற்போது, டாடா குழுமத்தில், முழுமையான டிஜிட்டல் தொழில்நுட்பத்தில், டாடா கிளிக், டாடா ஐக்யூ மற்றும் டாடா டிஜிட்டல் ஹெல்த் என்ற மூன்று நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிறுவனங்களின் தொழில்நுட்ப உதவியால், வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கேற்ப சேவைகளை வழங்கி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

🌍வேளாண் துறை வளர்ச்சிக்கு சர்வதேச கூட்டமைப்பு

சிங்கப்பூர் : சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத, வேளாண் துறை வளர்ச்சி, கிராமப்புற முன்னேற்றம் உள்ளிட்டவற்றுக்காக, தனியார் நிறுவனங்கள் இணைந்து, சர்வதேச கூட்டமைப்பை உருவாக்கி உள்ளன. ஜி.ஏ.ஏ., என, சுருக்கமாக அழைக்கப்படும், சர்வதேச வேளாண் வர்த்தக கூட்டமைப்பின் துவக்க விழா, சிங்கப்பூரில் நடைபெற்றது. இதில், பல்வேறு நாடுகளில் இருந்து, 300க்கும் அதிகமான வேளாண் வர்த்தக பிரதிநிதிகள் பங்கேற்றனர். உலகளவில், உணவு தானியங்கள், சமையல் எண்ணெய், பருப்பு, ரப்பர் உள்ளிட்ட விவசாயப் பொருட்களின் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள, 36 முன்னணி நிறுவனங்கள் இணைந்து, ஜி.ஏ.ஏ.,-வை உருவாக்கி உள்ளன. இந்த அமைப்பு, சர்வதேச வேளாண் நிறுவனங்களை ஒன்றிணைத்து, சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத விவசாய நடைமுறைகள், ஊட்டச்சத்துள்ள உணவுப் பொருட்கள் உற்பத்தி உள்ளிட்ட, பல்வேறு அம்சங்களில் பயனுள்ள ஆலோசனைகள், வழிகாட்டுதல்களை வழங்கும்.

📡புதுச்சேரியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

புதுச்சேரி : கர்நாடகாவுக்கான முழு அடைப்பால் புதுச்சேரியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.கறர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. 40 ஆயிரம் கடைகள் மூடப்பட்ட நிலையில் அரசு பஸ்கள் குறைந்த அளவிலேயே இயக்கப்படுகின்றன. தனியார் பஸ்கள், ஆட்டோ மற்றும் சரக்கு வாகனங்கள் இயக்கப்படவில்லை. இதனால் மக்களில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

📡🌍📡🌍📡🌍📡🌍📡🌍📡

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here