இன்றைய செய்தித்தாள் 17/09/2016 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

இன்றைய செய்தித்தாள் 17/09/2016

      

🌍சர்வதேச கத்திச் சண்டையில் பதக்கம் வென்ற ஒரே இந்திய வீரர் டெரில்!

நம் நாட்டில் விளையாட்டு என்றாலே கிரிக்கெட்தான். ஆனால் சென்னையைச் சேர்ந்த டெரில், ஃபென்சிங் (கத்திச் சண்டை) விளையாட்டில் அசத்தி வருகிறார். சமீபத்தில், ஜோர்டான் நாட்டில் நடந்த சர்வதேச ஃபென்சிங் போட்டியில் ஒன்றல்ல... இரண்டு வென்கலப் பதக்கங்களை வென்று, சாதனைப் படைத்துள்ளார்.


📡பெங்களூரு தமிழ்ச்சங்க தேர்தல் தலைவர் பதவிக்கு தாமோதரன்-ராசுமாறன் இடையே நேரடி போட்டி

பெங்களூரு: பெங்களூரு தமிழ்ச்சங்கத்தின் நிர்வாகிகள் இரண்டு வருடத்திற்கு ஒருமுறை தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள். கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் தாமோதரன் தலைவராகவும் துணை தலைவராக தி.கோ.தாமோதரன், பொருளாளராக சம்பத் மற்றும் பொது செயலாளராக தரன் உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர். 
இந்நிலையில் தமிழ்ச்சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவடைவதை தொடர்ந்து 2016-18ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகளை தேர்ந்து எடுப்பதற்கு வருகிற 25ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் அதிகாரியாக பேராசி. சீனிவாசன் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் செப்.11ம் தேதி வரை தலைவர் உள்ளிட்ட 6 பதவிகளுக்கு மொத்தம் 54 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

செப்.14ம் தேதி வேட்புமனு வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளில் 13 பேர் தங்களின் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றதை தொடர்ந்து இறுதியாக 41 பேர் களத்தில் உள்ளனர். 



🌍தனியார் எலக்ட்ரானிக் நிறுவனத்தில் தீ விபத்து: திருடுவதற்கு சென்ற வாலிபர் பலி?

பெங்களூரு: பெங்களூரு சிக்பேட்டையில் மின்கசிவால் விபத்து ஏற்பட்டதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாகியது. மேலும் துரதிஷ்டசமாக திருட சென்ற வாலிபர் ஒருவர் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தார். 


📡பண மோசடி வழக்கில் ஜாமீன் நிபந்தனையை தளர்த்த கோரி பச்சமுத்து மனு !

சென்னை: மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை மோசடி வழக்கில் ஜாமீனில் வெளிவந்துள்ள எஸ்.ஆர்.எம் பச்சமுத்து நிபந்தனையை தளர்த்தக் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

🌍உள்ளாட்சித் தேர்தலுக்கு போதிய அவகாசம் தேவை

உள்ளாட்சித் தேர்தல் தேதியை போதிய அவகாசத்துடன் வெளியிட வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.


📡சுங்கத்துறை சோதனையை விரைவுபடுத்த ரூ.35 கோடியில் புதிய ஸ்கேனர் வசதி: சென்னைத் துறைமுகத்தில் அறிமுகம்

சுங்கத் துறை சோதனையை விரைவுபடுத்தும் வகையில், ரூ. 20 கோடி மதிப்பீட்டிலான புதிய அதிநவீன ஸ்கேனர் வசதி சென்னைத் துறைமுகத்தில் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.


🌍பெட்ரோல், டீசலில் கலப்படம்: ஐஐடி சென்னை அளவிட தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

பெட்ரோல், டீசலில் கலப்படம் செய்யப்படுவதால் அவற்றின் தரக்குறைவு குறித்து ஐஐடி சென்னை கண்டறிய வேண்டும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி) அறிவுறுத்தியுள்ளது.


📡கன்னியாகுமரி அருகே பரபரப்பு.. காரில் வாலிபர்களுடன் வந்த இளம்பெண் திடீர் மாயம்?

கன்னியாகுமரி: கன்னியாகுமாரி, தென்தாமரைகுளம் அருகே சொகுசு காரில் வாலிபர்களுடன் வந்து இறங்கிய இளம் பெண் என்ன ஆனார்? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.




🌍11-ஆவது நாளாக பேருந்து போக்குவரத்து நிறுத்தம்

கர்நாடகத்தில் வன்முறை ஓய்ந்த நிலையிலும், ஒசூரில் இருந்து பெங்களூருக்கு தமிழக அரசுப் பேருந்துகள் 11-ஆவது நாளாக நிறுத்தப்பட்டுள்ளன.


📡வியாபாரிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: ஏ.எம்.விக்கிரமராஜா வலியுறுத்தல்

அசோக்பில்லர் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா.

கர்நாடகத்தில் பாதிக்கப்பட்ட தமிழக வணிகர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வலியுறுத்தினார்.


🌍செப். 20 முதல் மேட்டூர் அணை திறப்பு

சம்பா சாகுபடியை விவசாயிகள் மேற்கொள்ள ஏதுவாக, மேட்டூர் அணையில் இருந்து செப்டம்பர் 20 (செவ்வாய்க்கிழமை) முதல் தண்ணீர் திறந்து விட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பானதாக இருக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அணையிலிருந்து தண்ணீர் திறக்க ஆணையிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


📡மன்னார்குடியில் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது விக்னேஷ் உடல்
திருவாரூர்: காவிரி பிரச்னைக்காக தீக்குளித்து உயிரிழந்த நாம் தமிழர் கட்சி தொண்டர் விக்னேஷின் உடல் இன்று மன்னார்குடியில் அடக்கம் செய்யப்படுகிறது.



🌍ஐஏஎஸ் முதல்நிலை தேர்வு முடிவு தமிழகத்தில் இருந்து 950 பேர் தேர்ச்சி

சென்னை : காலியாக உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ் பணியிடங்களுக்காக நடந்த முதல்நிலை தேர்வில் தமிழ்நாட்டை சேர்ந்த 950 பேர் தேர்வாகியுள்ளனர். ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட இந்திய ஆட்சி பணிக்கான தேர்வுகள் (யுபிஎஸ்சி) கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி நாடு முழுவதும் நடந்தது. நாடு முழுவதும் காலியாக உள்ள 1200 ஐஏஎஸ், ஐபிஎஸ் பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முக தேர்வு என மூன்று கட்டமாக நடைபெறுகிறது. முதற்கட்டமாக முதல்நிலை தேர்வை இந்தியா முழுவதும் இருந்து 5.5 லட்சம் பேர் எழுதினர். தமிழகத்தில் இருந்து 30 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். இதில் 18 ஆயிரம் பேர் மட்டுமே முதல்நிலை தேர்வு எழுதினர். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் நேற்று இரவு வெளியானது.

5 1/2 லட்சம் பேர் எழுதி முதல்நிலை தேர்வில் 15,445 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 950 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதுகுறித்து சங்கர் ஐஏஎஸ் அகடாமி தலைவர் சங்கர் கூறியதாவது: ஐஏஎஸ், ஐபிஎஸ் பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் நாடு முழுவதும் 15,445 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 950 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். இதில் 490 பேர் எங்கள் அகாடமியில் பயின்றவர்கள். தற்போது முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதன்மை தேர்வு டிசம்பர் 3ம் தேதி நடைபெறும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு நேர்முக தேர்வு நடைபெறும் என்றார்.


📡சேலம் அருகே அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு

சேலம் : சேலம் அருகே அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பெட்ரோல் குண்டு வீசியவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 


🌍காவிரி நீர் பிரச்னைக்காக இளைஞர் தீக்குளித்து இறந்தது வேதனை அளிக்கிறது : மு.க.ஸ்டாலின் அறிக்கை

சென்னை : காவிரி நீர் பிரச்னைக்காக இளைஞர் தீக்குளித்து இறந்த சம்பவம் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்


📡ஜெயலலிதா அறிவிப்பு 5 தாலுகா உதயம்

சென்னை : தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோயில் வட்டத்தை பிரித்து முஷ்ணத்தில் ஒரு புதிய வட்டம், அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் வட்டத்தினைப பிரித்து ஆண்டிமடத்தில் ஒரு புதிய வட்டம், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் வட்டத்தை பிரித்து கூத்தாநல்லூரில் ஒரு புதிய வட்டம், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி மற்றும் ஒட்டப்பிடாரம் வட்டங்களை சீரமைத்து கயத்தாரில் ஒரு புதிய வட்டம், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் வட்டத்தினை பிரித்து சிங்கம்புணரியில் ஒரு புதிய வட்டம் என மொத்தம் 5 புதிய தாலுக்காக்களை உருவாக்க உத்தரவிட்டுள்ளேன்.


🌍திருட்டு வழக்கில் போலீசிடம் கணவர் சிக்கியதால் 3 மகள்களுடன் பெண் தற்கொலை

ஸ்ரீவைகுண்டம் : ஸ்ரீவைகுண்டம் அருகே ஆழ்வார்திருநகரியில் நகை திருட்டு வழக்கில், கணவர் மும்பை போலீசிடம் சிக்கியதால் அவமானம் தாங்காமல் 3 மகள்களுடன் தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.


📡மும்பை பள்ளிகளில் யோகா: தடை விதிக்க கோர்ட் மறுப்பு

மும்பை : மும்பை மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு யோகா மற்றும் சூரிய நமஸ்கார பயிற்சிகளை அளிப்பதற்கு இடைக்காலத் தடை விதிக்க மும்பை கோர்ட் மறுத்துள்ளது.


🌍ராணுவத்தினருக்கு புதிய சம்பளம்

புதுடெல்லி : ஏழாவது சம்பள கமிஷன்படி, முப்படை வீரர்களுக்கு இம்மாதத்திலேயே உயர்த்தப்பட்ட புதிய சம்பளத்தை வழங்க விமானப்படை தளபதி அரூப் ராஹா உத்தரவிட்டுள்ளார். முப்படை வீரர்களுக்கு 7வது சம்பள கமிஷன்படி, சம்பளத்தை உயர்த்துவது தொடர்பாக, கடந்த வாரம் பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரை, விமானப்படை தளபதி அரூப் ராஹா, கடற்படை தலைமை அட்மிரல் சுனில் லம்பா ஆகியோர் சந்தித்து பேசினர். இதைத் தொடர்ந்து, 7வது சம்பள கமிஷனை அமல்படுத்தும்படி, அனைத்து படைப்பிரிவு தலைமையகத்துக்கும் தலைமை அதிகாரி அரூப் ராஹா நேற்று உத்தரவிட்டுள்ளார். இதன்படி, முப்படை வீரர்கள் இனி புது சம்பளம் பெறுவர். 


📡கேரள பெண் பலாத்கார வழக்கில் மரண தண்டனை ரத்து : உச்சநீதிமன்றம் தவறு செய்துவிட்டது

திருவனந்தபுரம் : கேரள பெண் பலாத்கார வழக்கில் விதிக்கப்பட்ட மரணதண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்ததன் மூலம் உச்சநீதிமன்றம் கொடிய தவறை செய்துவிட்டதாக முன்னாள் நீதிபதி கட்ஜு விமர்சனம் செய்துள்ளார். 


🌍சபரிமலையில் அடுத்த ஆண்டு தங்க கொடிமரம் பிரதிஷ்டை

திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோயில் முன் கொடிமரம் உள்ளது. சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இந்த கொடிமரம் வலுவிழந்திருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தங்கத்தினால் ஆன புதிய கொடிமரம் அமைக்க ரான்னி வனப்பகுதியிலிருந்து ஒரு தேக்கு மரம் வெட்டி பம்பைக்கு கொண்டு வரப்பட்டது. அடுத்த வருடம் ஜூன் 25ம் தேதி ஞாயிற்றுக் கிழமை முற்பகல் 11.50க்கும் மதியம் 1.40க்கும் இடையே உள்ள நேரத்தில் புதிய தங்க கொடிமரம் அமைப்பது என தீர்மானிக்கப்பட்டது.


📡2 எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருவனந்தபுரம் : திருவனந்தபுரம் - நிலம்பூர் இடையே ராஜ்ய ராணி எக்ஸ்பிரஸ் ரயிலும், திருவனந்தபுரம்- பாலக்காடு இடையே அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயிலும் ஓடி கொண்டிருக்கிறது. இந்த இரு ரயில்களும் திருவனந்தபுரத்தில் இருந்து தினமும் இரவு 10 மணிக்கு மேல் இயக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் இந்த இரு ரயில்களும் புறப்பட்டு சென்றன. நேற்று காலை இந்த 2 ரயில்களிலும் வெடிகுண்டு வைத்திருப்பதாக, திருச்சூர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் வந்தது. 

இதுகுறித்து உடனடியாக போலீசார் ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையே இந்த இரு ரயில்களும் நேற்று காலை சொர்ணூரை அடைந்தன.

இதையடுத்து ரயில் நிலையத்தில் வைத்து இந்த இரு ரயில்களையும் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது பயணிகள் அனைவரும் ரயிலில் இருந்து கீழே இறக்கிவிடப்பட்டனர். சோதனையில் இரு ரயில்களிலும் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதனால் வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என கூறப்படுகிறது. 


🌍ஊழியர்களுக்கு பயிற்சி மையம் மெர்சிடஸ் நிறுவனம் துவக்கியது

புதுடில்லி : மெர்சிடஸ் பென்ஸ், மஹாராஷ்டிர மாநிலம், புனேவில், உதிரிபாக கிடங்கு மற்றும் பயிற்சி மையத்தை அமைத்துள்ளது. ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த மெர்சிடஸ் பென்ஸ், புனேவில், உதிரிபாகங்கள் கிடங்கு மற்றும் பயிற்சி மையத்தை அமைத்துள்ளது. மொத்தம், 16 ஆயிரத்து, 500 சதுர அடியில், கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், மெர்சிடஸ் பென்ஸ் அகாடமி என்ற பெயரில், பயிற்சி மையமும் துவக்கப்பட்டுள்ளது. இதுவே, தெற்காசியாவில், அந்த நிறுவனத்தின் பெரிய மையமாகும். இங்கு, டீலர்களிடம் பணியாற்றும் ஊழியர்களுக்கு, பயிற்சி வழங்கப்பட உள்ளது. இது குறித்து, மெர்சிடஸ் பென்ஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: எங்கள் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு, இந்தியா முக்கிய மையமாக திகழ்கிறது.

எனவே, வாடிக்கையாளர்களுக்கு, தரமான சேவை வழங்க, கட்டமைப்பு பணிகளில் முதலீடு செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


📡இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் விரிவாக்கத்தில் ஈடுபட முடிவு

புதுடில்லி : ஐ.ஓ.சி., எனப்படும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், அடுத்த ஆறு ஆண்டுகளில், 1.80 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது


🌍கனமழை காரணமாக விமானங்கள் திருப்பிவிடப்பட்டன

சென்னை : கனமழை காரணமாக சென்னை வரும் இரு விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, சென்னை வரும் இரு விமானங்கள் திருப்பி விடப்பட்டன. சென்னை வரும் கோலாலம்பூர் மற்றும் பாங்காக் விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.


📡மத்திய பிரதேசத்தில் இரண்டு லாரிகள் மோதி விபத்து: 8 பேர் உயிரிழப்பு

உஜ்ஜைன்: மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 14 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.


🌍பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு தாயின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் மக்கள் வாழ்த்து

காந்திநகர்: பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள அவரது தாயின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் மக்கள் வாழ்த்து தெரிவித்தனர். 


📡கர்நாடகாவில் தமிழ் மக்கள் மீதான தாக்குதலை கண்டித்து யாழ்ப்பாணத்தில் அடையாள உண்ணாவிரதம்

காவிரி நதி நீர் பிரச்சினையில், கர்நாடகாவில் தமிழ் மக்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் எதிரில் 3 பேர் அடையாள உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தனர். 


🌍11 டிஎஸ்பி-க்கள் பணியிட மாற்றம்

தமிழக காவல் துறையில் 11 காவல் துணை கண்காணிப்பாளர்களை (டிஎஸ்பி) பணியிடமாற்றம செய்து டிஜிபி தே.க.ராஜேந்திரன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

காவல் துறையில் நிர்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், ஒழுங்கீன நடவடிக்கை எடுக்கும் வகையிலும் காவல் துறை அதிகாரிகள் அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

அதன்படி, கே.அருள் (ஆலங்குடி), வி.கீதா (மணப்பாறை), ஜி.ஐயப்பன் (திண்டுக்கல்), கே.அசோகன் (ராமநாதபுரம்), வி.ஜெயச்சந்திரன் (அரியலூர்), டி.ரமேஷ்பாபு (தஞ்சாவூர்-வல்லம்), டி.ஈஸ்வரன் (நாகர்கோயில்), இ.விஜயகுமார் (திருவள்ளூர்), ஜி.வனிதா (கிருஷ்ணகிரி), எஸ்.முகமது அப்துல் முத்தாலிஃப் (தஞ்சாவூர்), என்.மதிவாணன் (ராணிப்பேட்டை) ஆகிய 11 டிஎஸ்பி-க்களை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


📡பெங்களூருவில் காவிரி தண்ணீர் சுமார் 50 சதவீதம் வரை வீணடிப்பு:புள்ளி விவரங்கள் தகவல்

பெங்களூரு: பெங்களூருவில் காவிரி தண்ணீர் சுமார் 50 சதவீதம் வரை வீணடிக்கப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 


🌍இனி கட்டாய பாடமாகிறது சுற்றுச்சூழல்

புதுடில்லி : பள்ளி, கல்லூரிகளில் சுற்றுச்சூழல் அறிவியலை கட்டாய பாடம் ஆக்குமாறு 1991-ம் ஆண்டு, அப்போதைய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இந்நிலையில், அந்த உத்தரவு இதுவரை அமல்படுத்தப்படவில்லை என்று கூறி, சுற்றுச்சூழல் ஆர்வலர் எம்.சி.மேத்தா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.அம்மனு, சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பள்ளி, கல்லூரிகளில் சுற்றுச்சூழல் அறிவியலை கட்டாய பாடமாக்க இதுவரை எடுத்த நடவடிக்கைகளை தெரிவிக்குமாறு மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அடுத்தகட்ட விசாரணையை 23 ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.


📡துணை குடியசு தலைவர் ஹமீத் அன்சாரிருக்கு வெனிசுலாவில் சிறப்பான வரவேற்பு

வெனிசுலா: அணிசேரா நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக துணை குடியசு தலைவர் ஹமீத் அன்சாரி வெனிசுலா நாட்டின் மார்கரிட்டா தீவிற்கு சென்றடைந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

🌍காஷ்மீரில் 70வது நாளாக தொடரும் போராட்டம்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பயங்கரவாதி புர்கான் வானி கொல்லப்பட்டதை கண்டித்து நடந்து வரும் வன்முறை மற்றும் போராட்டம் 70-வது நாளை எட்டி உள்ளது. இதுவரை காஷ்மீர் வன்முறைக்கு பலியானோர் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது. போராட்டங்கள் தொடர்ந்து நீடித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் ஏராளமான போலீசாரும், பாதுகாப்பு படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.மாநிலத்தில் ஆங்காங்கே மீண்டும் வன்முறை சம்பவங்கள் தலைதூக்குவதால் பல இடங்களில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. குறிப்பாக ஸ்ரீநகர் மற்றும் மாநிலத்தின் முக்கியமான நகரங்களில் இந்த தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளில் இணையதளம் முடக்கப்பட்டு உள்ளது.

📡இந்தியப் பெண்களின் அடையாளம் எம்.எஸ்.சுப்புலட்சுமி: நல்லி குப்புசாமி புகழாரம்

எம்.எஸ்.சுப்புலட்சுமி நூற்றாண்டு விழாவில் அவரது படத்துக்கு மரியாதை செலுத்தும் (இடமிருந்து) சபாவின் இணைச் செயலாளர் வெங்கடேஸ்வரன், பொதுச் செயலாளர் ய.பிரபு, மிருதங்க வித்வான் குரு காரைக்குடி ஆர்.மணி, முன

இசையிலும், சமூகப் பணியிலும் தன்னிகரற்று விளங்கிய எம்.எஸ்.சுப்புலட்சுமி இந்தியப் பெண்களின் அடையாளமாகத் திகழ்கிறார் என தொழிலதிபரும், ஸ்ரீ கிருஷ்ண கான சபாவின் தலைவருமான நல்லி குப்புசாமி கூறினார்.


🌍சென்னையில் இன்று திமுக முப்பெரும் விழா

பெரியார், அண்ணா பிறந்த நாள்கள், திமுக தொடக்க நாள் ஆகிய முப்பெரும் விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு விழா நடைபெற உள்ளது.


📡காவிரி விவகாரத்தில் பிரதமர் தலையிடுவது சாத்தியமில்லை : எடியூரப்பா

பெங்களூரு : தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்து விட்டதைக் கண்டித்து கர்நாடகாவில் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தின்போது தமிழர்கள் தாக்கப்பட்டனர். இதனை கண்டித்து தமிழகத்தில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.இந்நிலையில் காவிரி நீர் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலையிடுவது சாத்தியமில்லை என்று கர்நாடக பா.ஜ., தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். 


🌍பிரதமர் மோடிக்கு இந்திய தலைமை நீதிபதி டி.எஸ்.தாகூர் பிறந்தநாள் வாழ்த்து

காந்திநகர்: பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு இந்திய தலைமை நீதிபதி டி.எஸ்.தாகூர் ராஜ் பவனில் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.


📡உளுந்தூர்பேட்டை அருகே விபத்தில் படுகாயமடைந்த பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

சைக்கிள் மீது கார் மோதல்

உளுந்தூர்பேட்டை அருகே எ.குமாரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் ரவி மகள் சத்யா(வயது 17). வெள்ளையூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் தன்னுடன் படிக்கும் சக மாணவியான வெள்ளையூரை சேர்ந்த சிவசக்தி(17) என்பவருடன் ஒரு சைக்கிளில் வெள்ளையூரில் இருந்து குணமங்கலத்தில் உள்ள மற்றொரு பள்ளி தோழி வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். வெள்ளையூர் உளுந்தூர்பேட்டை-சேலம் தேசிய நெடுஞ்சாலையை அவர்கள் இருவரும் சைக்கிளில் கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த கார் ஒன்று, மாணவிகள் சென்ற சைக்கிள் மீது மோதியது.

சிகிச்சை பலனின்றி சாவு


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here