தலைமை கணக்காயர் பட்டியலிடும் தவறுகள் -என திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

தலைமை கணக்காயர் பட்டியலிடும் தவறுகள் -என திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை


திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி அறிக்கை*
✍✍✍✍✍✍✍✍✍✍✍
தலைமைக் கணக்காயர் பட்டியலிடும் தவறுகள் - இழப்புகள்!
📌📌📌📌📌📌📌📌📌📌📌
தமிழக அரசின் செயல்பாடுகள் பற்றி, இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவரின் 2015 மார்ச், 31ஆம் தேதியுடன் முடிவடைந்த ஆண்டுக்கு தமிழகச் சட்டப்பேரவையில் வைக்கப்பட்டிருந்த அறிக்கையில், ஏராளமான குறைபாடுகளும், அரசினர் திட்டமிட்டு முறைப்படி செயல்படாததால் பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்புகளும், பல திட்டங்களை முடக்கிப் போட்டதால் பல நூறு கோடி ரூபாய் நிதி வீணடிக்கப்பட்டுள்ள விபரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. அதுபற்றிய சில விவரங்களை, ஜெயலலிதா அரசு எப்படி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ள உனக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

v 2011-12 மற்றும் 2012-2013 ஆண்டுகளில் வருவாய் மிகையைப் பராமரித்த இம்மாநிலம், 2013-14இல் வருவாய்ப் பற்றாக் குறையை பதிவு செய்தது. 2014-15இல் இது 6,408 கோடி ரூபாயாக உயர்ந்ததோடு, டி.என்.எப்.ஆர். சட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட நிதி மேலாண்மை இலக்குகளில் ஒன்றை எய்தத் தவறியது.

v முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் மாநிலத்தின் வரி வருவாய் அல்லாத பிற வருவாய், 2014-15இல் 992 கோடி ரூபாயாக (10.62 சதவிகிதம்) குறைந்தது.

v அரசு வழங்கிய உதவித் தொகைகளுக்கான பயனீட்டுச் சான்றிதழ்களைக் குறித்த காலத்தில் சமர்ப்பிப்பதற்கான நிபந்தனை களைக் கடைப்பிடிப்பதில், சில துறைகளின் அலுவலர்கள் தவறி விட்டனர்.

v வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட முக்கிய கொள்கை முயற்சிகள் செயல்படுத்தப்படவில்லை என்பதற்கு ஆதாரமாகத் தணிக்கை அறிக்கையில், 2014-15ஆம் ஆண்டில், உலக முதலீட்டாளர் கூட்டத்திற்கென ஒதுக்கப்பட்ட நிதி 100 கோடி ரூபாய் பயன்படுத்தப் படாமல் ஒப்படைப்பு (Surrender) செய்யப்பட்டது என்று குறிப்பிடப் பட்டுள்ளது. அதாவது 2 இலட்சம் கோடி ரூபாய்க்கு மேல் தொழில் முதலீடுகள் வந்ததாக அறிவித்தார்களே, அதைப் போலவே இந்த அறிவிப்பும் செயல்படுத்தப் படவில்லை போலும்!

v அதுபோலவே. கூவம் நதியைச் சீராக்குவதற்காக 2014-2015ஆம் ஆண்டில் ஒதுக் கப்பட்ட நிதி 500 கோடி ரூபாய் பயன்படுத்தப் படவில்லை என்று தணிக்கை அறிக்கை தெரிவித்துள்ளது. (கூவம் சீரமைப்பில் அரசுக்குள்ள அலட்சியம்)

v "மோனோ" ரெயில் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக 2014-15இல் ஒதுக்கப்பட்ட தொகை 200 கோடி ரூபாய், இத்திட்டத்திற்கான ஒப்பந்தப் புள்ளி இறுதி செய்யப்படாததால் ஒப்படைப்பு செய்யப்பட்டது. (மோனோ ரயில் பற்றி உறுதியற்ற நிலைப்பாடு)

v 2013-14இல் பெருமளவு கூடுதல் நிதி ஒப்பளிப்புகள் அரசால் வழங்கப்பட்டது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், இவ்வித ஒப்பளிப்புகளைக் கட்டுப்படுத்த அரசின் சார்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. (கூடுதல் நிதி ஒப்பளிப்புகள் திட்டமிட்ட நிதி ஒழுங்கின்மையைச் சுட்டிக் காட்டும்)

v மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உத்தரவாத திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட ரூ.1,216 கோடி, துறையால் ஒப்புவிக்கப்பட்டதற்கான காரணங்கள் விளக்கப்படவில்லை.

v நகராட்சிகளுக்கு மானியமாக ஒதுக்கப்பட்ட 291 கோடி ரூபாய், நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மாநகராட்சி, ஊராட்சி, மற்றம் பேரூராட்சிகளுக்கு மானியமாக வழங்கப்பட்ட 200 கோடி ரூபாய்; சிறு மற்றும் நடுத்தர நகரங்களுக்கான நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்திற்காக, தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்திற்கு மானியமாக வழங்கப்பட்ட 177 கோடி ரூபாய் ஆகியவை காரணங்கள் இல்லாமல் ஒப்புவிக்கப் பட்டிருக்கின்றன.

v விலையில்லா மின் விசிறி, மிக்சி மற்றும் கிரைண்டர்கள் வழங்குதல் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மடிக் கணினிகள் வழங்குதல் ஆகிய திட்டங்களின் கீழ் முறையே 738.05 கோடி ரூபாய் மற்றும் 100 கோடி ரூபாய் ஆகியவை ஒப்படைப்பு செய்யப்பட்டது. ஒப்படைப்பு செய்யப்பட்டதற்கான காரணங்கள் ஏதும் மாநில அரசால் சொல்லப் படவில்லை.

v தமிழ்நாடு மின்னணுக் கழகத்திற்கு நிதிகள் தாமதமாக விடுவிக்கப் பட்டதால், மாணவர்களுக்கு மடிக்கணினிகள் கல்வி ஆண்டு முடிவடைந்த பின்னரே விநியோகிக்கப்பட்டன. 2012-13 கால கட்டத்தில், 33 சோதனை சரிபார்ப்பு செய்யப்பட்ட பள்ளிகளில் உள்ள 5,400 மாணவர்களுக்கு கல்வி ஆண்டு முடிந்து, இரண்டு முதல் பன்னிரெண்டு மாதங்களுக்குப் பிறகே மடிக்கணினிகள் விநியோகிக்கப் பட்டன என்பது காணப்பட்டது. 2013-14 கால கட்டத்தில், கல்வி ஆண்டு முடிந்து இரண்டு முதல் ஏழு மாதங்களுக்குப் பிறகே 36 பள்ளிகளில் உள்ள 5,882 மாணவர்களுக்கு மடிக் கணினிகள் விநியோகிக்கப்பட்டன. (மடிக் கணினிகள் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் அதன் நோக்கத்தையே சிதைத்து விட்டது)

v 2013 தொலைநோக்குத் திட்ட ஆவணத்தில், தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்தை உருவாக்கப் பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி 2012-13, 2013-14, 2014-15 காலத்தில் முறையே 1000 கோடி ரூபாய், 2000 கோடி ரூபாய், மற்றும் 2000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. திட்டங்களை இறுதி செய்வதில் ஏற்பட்ட கால தாமதத்தினால் அனைத்து ஆண்டுகளிலும் மூலதனச் செலவின் கீழ் வழங்கப்பட்ட மொத்தத் தொகையும் ஒப்படைப்பு செய்யப்பட்டது. (இப்படி பரிந்துரை செய்வதும், பரிந்துரைச் செயலாக்கத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்வதும், கடைசியாக ஒதுக்கீடு செய்த நிதியைச் செலவழிக்காமல் ஒப்படைப்பு செய்வதும் முறையான அணுகுமுறை இல்லை என்பதையே காட்டுகிறது)

v நிலம் கையகப்படுத்துவதிலும், ஒப்பந்தப் புள்ளிகள் இறுதி செய்வதிலும் ஏற்பட்ட கால தாமதத்தினால், தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டம், பிரிவு 2, இருப்புப் பாதை மேம்பாலங்கள்/இருப்புப் பாதை கீழ் பாலங்களைக் கட்டுதல், புறவழிச் சாலை மற்றும் வெளி வட்டச் சாலை அமைப்புக்காக நிலம் கையகப்படுத்துதல் ஆகியவற்றில் முறையே 440 கோடி ரூபாய், 271 கோடி ரூபாய், 187 கோடி ரூபாய் மற்றும் 186 கோடி ரூபாய் ஒப்படைப்பு செய்யப்பட்டது.

v 30 நேர்வுகளில் மூல நிதி அல்லது துணை மானியக் கோரிக்கை மதிப்பீடுகளிலோ, பேரவையின் நிதியொதுக்க ஒப்புதலின்றி 82.53 கோடி ரூபாய் செலவினம் மேற்கொள்ளப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. (ஒதுக்கிய நிதியை, ஒதுக்கப்பட்ட காரியத்திற்காகச் செலவழிக்காமல் இருப்பதும், ஒதுக்கீடு இன்றி செலவை மேற்கொள்வதும் நல்ல நிதி மேலாண்மைக்கு அடையாளமாகாது)

v எட்டு மாதிரி மாவட்டங்களில் உள்ள சோதனை சரிபார்ப்பு செய்யப்பட்ட 190 அரசுப் பள்ளிகளில், பள்ளி அளவிலான தொலைநோக்குத் திட்டமோ ஆண்டுத் திட்டமோ தயாரிக்கப்பட வில்லை. (பள்ளிக் கல்வியில் உள்ள அக்கறையின்மையை இது வெளிப்படுத்துகிறது)

v விதிமுறைகளுக்கு ஏதுவாக இல்லாத தகுதியற்ற நடுநிலைப் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டன. (இது அரசின் அணுகுமுறைக் கோளாறை வெளிப்படுத்துகிறது)

v தமிழ்நாடு அரசால் குறைவாகவோ/தாமதமாகவோ நிதி வழங்கப்பட்டது காணப்பட்டது. (செயலாக்கத்தில் அரசுக்கு ஆர்வமில்லை என்பதைக் காட்டுகிறது)

v மாநிலப் போக்குவரத்துக் கழகங்களின் மோசமான நிதி நிலைமையின் காரணமாக அவை ஒப்புக் கொண்ட 11,205 நேர்வுகளுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகை 207.72 கோடியை வழங்க இயலவில்லை. (இழப்பீட்டுத் தொகை வழங்காதது, மனிதாபிமானமற்ற போக்கையே வெளிப்படுத்தும்)

v 2013-14 ஆண்டிற்குள் நிறைவு பெறும்படியாக 1,440.91 கோடி அளவிலான ஐந்து மின் செலுத்துகை பணிகளை திட்டமிட்டபோதிலும், அந்தப் பணிகள் டிசம்பர் 2015 வரையிலும் முடிக்கப்படாமல் இருந்தன. (மின் திட்டங்களை நிறைவேற்றுவதில் அரசுக்குள்ள அலட்சிய மனப்பான்மை தெரிகிறது)

v தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு 2000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், 1000 கோடி ரூபாய் ஒப்படைப்பு செய்யப்பட்டது.

v மே முதல் செப்டம்பர் 2014 வரையிலான காலத்தில், டான்ஜெட்கோ, ஆறு குறுகிய கால மின் கொள்முதல் ஒப்பந்தங்கள் மூலம் 800 மில்லியன் யூனிட் மின்சாரம் வாங்கியது. இதில் மின் தொகுப்பு இடர்ப்பாடுகளைக் காரணமாக்கி, குறைந்த விலையிலான காற்றாலை மின்சார உற்பத்தியை நிறுத்தியது நியாயமற்றது. குறுகிய கால மின் கொள் முதல் விலைக்கும், (ரூ. 5.50), அதிகபட்ச காற்றாலை மின் கொள்முதல் விலைக்கும் (ரூ. 3.51) இருக்கும் (யூனிட் ஒன்றுக்கு ரூ.1.99) வித்தியாசத்தை கணக்கில் கொள்ளும் போது, உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்ட 800 மில்லியன் யூனிட் மின்சாரத்தில் மட்டும் 159.20 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்பட்டது என்பது தெரியவந்தது. இதற்கு அரசு அளித்த பதிலையும் ஏற்பதற்கில்லை என்று தணிக்கை அறிக்கை கூறுகிறது. (சுற்றுச் சூழலுக்கு உகந்த காற்றாலை மின் சக்தியை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள அரசு தவறியிருக்கிறது)

v குறுக்கு உதவித் தொகைக் கட்டணம் பெறப்படாத காரணத்தால் டான்ஜெட்கோவிற்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு ரூ. 26.07 இலட்சமாகும்.

v மாநிலத்தில் மின் சேமிப்பு வசதி அனுமதிக்கப்பட்டதன் காரணமாக டான்ஜெட்கோவிற்கு 470.18 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டது.

v கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் "தானே" வீட்டு வசதி திட்டத்தை 2012ஆம் ஆண்டு ஜனவரியில் அரசு அறிவித்தது. தமிழக அரசு வீடு ஒன்றுக்கு ஒரு இலட்சம் வீதம் 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையர் இந்த ஆயிரம் கோடி ரூபாயைப் பெற்று, கடலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்கு 800 கோடி ரூபாயையும், விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்கு 100 கோடி ரூபாயையும் விடுவித்து விட்டு, மீதி 100 கோடியை தன் வங்கிக் கணக்கில் நிறுத்திக் கொண்டார். பிறகு 2013-2014இல் இந்திரா நினைவுக் குடியிருப்புத் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு தனது நிதித் தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு, தமிழ்நாடு ஊரக வீட்டு வசதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்திடமிருந்து 746.10 கோடி ரூபாய் கடனாகப் பெற ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையருக்கு அதிகாரம் அளித்தது. இந்தக் கடன் 2014ஆம் ஆண்டு மார்ச் மற்றும் செப்டம்பரில் பெறப்பட்டது. எனினும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையர் இக்கடன் தொகையைப் பெறும் போது, தனது வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் வைக்கப்பட்டுள்ளதைக் கருத்திலே கொள்ளத் தவறினார். இதனால் 100 கோடி ரூபாய் தேவை இல்லாமல் கடனாகப் பெறப்பட்டது. அதற்காக சுமார் 3 கோடி ரூபாய் வட்டியும் செலுத்த நேரிட்டது. (இது நிதி மேலாண்மையில் உள்ள குளறுபடிக்குத் தக்க சான்றாகும்)

v இந்த வீடுகள் ஒரு இலட்சம் ரூபாய் உதவி பெற பயனாளிகளைக் கண்டறியக் குழு அமைக்கப்படவில்லை. (இது ஒரு முறைகேடு)

v நான்கு மாநகராட்சிகளில் உள்ள "அம்மா" உணவகங்கள் மீதான தணிக்கை, இலக்கிற்குரிய மக்கள் தொகையை அறிய எந்த ஆய்வும் செய்யப்படாமல் உணவகங்கள் திறக்கப்பட்டன என்பதை வெளிக் காட்டியது. (இது "அம்மா" உணவகங்கள் திறப்பதில் காட்டப்பட்ட அவசரத்தைக் காட்டுகிறது)

v விதிக்கப்பட்ட நடைமுறையைப் பின்பற்றாமல், திருவல்லிக்கேணி நகரக் கூட்டுறவு சங்கத்திடமிருந்து கோதுமை வாங்கியதால் 30.85 இலட்சம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டது. அதுபோலவே பிற மூலப் பொருட்கள் வெளிச் சந்தை விலையில் வாங்கியதால் 2.78 கோடி ரூபாய் தவிர்க்கக் கூடிய செலவு ஏற்பட்டது. 1.33 கோடி ரூபாய்ச் செலவில் சென்னை மாநகராட்சியால் வாங்கப்பட்ட ஒன்பது தானியங்கி சப்பாத்தி தயாரிக்கும் இயந்திரங்கள் பழுது காரணமாக பயன்படுத் தப்படாமல் இருந்தன. இதனால் மேலும் 22.20 இலட்ச ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டது. ("அம்மா" உணவகங்கள் எந்த இலட்சணத்தில் செயல்படுத்தப்படுகின்றன என்பதற்கு எடுத்துக்காட்டு இது)

v சமூகப் பாதுகாப்புத் திட்டம் (தொழிலாளர் வருங்கால வைப்பு நிதித் திட்டம்) சோதனை ஆய்வு செய்யப்பட்ட மாநகராட்சிகளால் திறம்பட செயல்படுத்தப்படவில்லை. (தொழிலாளர் நலனில் அரசுக்குள்ள அலட்சியத்தைக் காட்டுகிறது)

v சென்னை மாநகராட்சியின் சோதனை ஆய்வு செய்யப்பட்ட மண்டலங்களில் பெப்ரவரி 2014 முதல் மார்ச் 2015 வரையில், 1,81,450 கி.கி. கோதுமை, 7.50 ரூபாய்க்குப் பதிலாக, 17.26 ரூபாய் விலைக்கு வாங்கப்பட்டது. இதன் காரணமாக 17.69 இலட்சம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டது. திருவல்லிக்கேணி நகரக் கூட்டுறவு சங்கத்திடமிருந்து கோதுமை மாவு வாங்கியதில் 30.85 இலட்ச ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டது. 

v அம்மா உணவகங்களுக்குத் தேவையான அரிசி, கோதுமை, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு மற்றும் சமையல் எண்ணெயினை மானிய விலையில் வழங்குமாறு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. ஆனால் இவைகளை வெளிச் சந்தை விலைகளில் வாங்கப்பட்டதால் 2014 அக்டோபர் முதல் 2015 மார்ச் வரை 2.78 கோடி ரூபாய் தவிர்க்கக் கூடிய செலவு ஏற்பட்டது. (இது, அரசின் உத்தரவை மீறி, வேண்டுமென்றே செய்யப்பட்ட முறைகேடு)

v முழுதும் தானியங்கி சப்பாத்தி தயாரிப்பு இயந்திரங்களை வாங்குமுன் சென்னை மாநகராட்சி அவற்றின் செயல்பாட்டை ஆராய வும், உண்மையான உற்பத்தித் திறன் பற்றி சோதனை செய்யவும் பார்வையிடவும் இல்லை. (அம்மா உணவகங்களை நடத்துவதில், முறைகேடுகளைப் பற்றிக் கவலைப்படாமல், அள்ளித் தெளிக் கோலத்தில் அனைத்தும் நடைபெறுகின்றன என்பதைக் காட்டுகிறது).

v முதல் அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் பயனாளிகளாக 1.34 கோடி குடும்பங்கள் என்று முதலில் குறிப்பிட்ட நிறுவனத்திற்கு தெரிவிக்கப்பட்டது. இந்த 1.34 கோடி குடும்பங்களுக்காக 183.64 கோடி ரூபாய் முதல் காலாண்டு காப்பீட்டுத் தவணையாக வழங்கப்பட்டது. இறுதியில் இந்தத் திட்டத்தின் கீழ் தகுதியானவர்களாக 1.29 கோடி மருத்துவ அட்டைகளே காப்பீட்டு நிறுவனத்தால் வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசால் 1.34 கோடி குடும்பங்களுக்காக முதல் காலாண்டு காப்பீட்டுத் தவணைத் தொகை வழங்கப்பட்டு விட்ட காரணத்தால், அதிக மாகக் கட்டப்பட்ட தொகையை திருப்பிக் கொடுக்கக் கோரப்பட்டது. காப்பீட்டு நிறுவனம் இதைத் தர ஒத்துக் கொள்ளவில்லை. இதனால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு 7.11 கோடி ரூபாய். (காப்பீட்டு நிறுவனத்திற்கு அரசு காட்டிய முறை கேடான சலுகை)

v கடைசியாக இறுதி செய்யப்பட்ட கணக்குகளின்படி தமிழக அரசின் பொதுத் துறை நிறுவனங்களின் திரண்ட இழப்பு 65,725.89 கோடி ரூபாயாகும்.

v 65 செயல்படும் பொதுத் துறை நிறுவனங்களில் 41 நிறுவனங்கள் 1,979.79 கோடி ரூபாய் ஆதாயத்தை ஈட்டின. 20 நிறுவனங்கள் 16,833.24 கோடி ரூபாய் இழப்பை அடைந்தன. நட்டத்தை அடைந்த பொதுத் துறை நிறுவனங்களில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் 13,985.03 கோடி ரூபாய். மாநிலத்தில் மொத்தம் உள்ள எட்டு அரசு போக்குவரத்துக் கழகங்களின் நட்டம் 2,654 கோடி ரூபாய்.

v மாநிலத்தில் மிக அதிகமான அளவில் காற்றாலை நிறுவுவதற்கான வளம் இருந்த போதிலும், டிசம்பர் 2015 வரை மாநில அரசு காற்றாலை மின் சக்திக்கென தனியான கொள்கைகளை வெளியிடவில்லை. அதே நேரத்தில் நிறுவப்பட்ட காற்றாலை திறன் குறைவாக இருக்கும் ஆந்திரப் பிரதேசம், குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் காற்றாலை மின் சக்திக்கான தனியான கொள்கை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. (இது அரசின் அணுகுமுறையில் உள்ள கோணல்)

v 124.19 கோடி ரூபாய்க்கான மின் செலுத்துகை கட்டணத்தைத் திறந்த நுழைவு உரிமை நுகர்வோரிடமிருந்து டான்ஜெட்கோ வசூலிக்க வில்லை. தணிக்கை சுட்டிக்காட்டியபின் 1.54 கோடி ரூபாய் மட்டுமே வசூலிக்கப்பட்டது. (மின்சார வாரியத்தின் அலட்சியம்)

v மின்சக்தி சேமிப்புக்கான தொகைகள் வழங்கும் போது விதிகளுக்கு முரணாக 31.86 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. (மின்சார வாரியம் உள்நோக்கத்துடன் செய்த முறைகேடு)

v ஒப்பளிப்பு செய்யப்பட்ட ரூ. 90.80 கோடியில் 16.28 கோடி ரூபாய், 2012-15 கால கட்டத்தில் மீன் வளத் துறை பயன்படுத்தத் தவறிவிட்டது. (மீனவர் நலனில் அரசின் அக்கறையின்மை யைக் காட்டுகிறது)

v 2012-13ஆம் ஆண்டில் மத்திய அரசு 26.98 கோடி ரூபாய் அளித்ததில், 21.78 கோடி ரூபாய் மட்டுமே செலவு செய்யப்பட்டு, 5.20 கோடி ரூபாய் பயன்படுத்தப்படாத தொகையாக உள்ளது. (மத்திய அரசு வழங்கிய தொகையை முழுமையாகப் பயன்படுத்தவில்லை என்பது திட்டச் செயலாக்கத்தில் கவனமின்மையைக் காட்டுகிறது)

v 2013-14ஆம் ஆண்டிற்குள் நிறைவு பெறும் படியாக 1,440.91 கோடி ரூபாய் அளவிலான ஐந்து மின் செலுத்துகை பணிகளை டான்டிரான்ஸ்கோ திட்டமிட்ட போதிலும், அந்தப் பணிகள் டிசம்பர் 2015 வரையிலும் முடிக்கப்படாமல் இருந்தன. 

v தமிழ்நாடு மின்னணு நிறுவனம் மாநில அரசின் ஆணைக்கேற்ப, குத்தகை வாடகை மற்றும் நில மேம்பாட்டுக் கட்டணத்தை முன்கூட்டியே வசூலிப்பதற்கான நடைமுறைகளை கையாளத் தவறியதால், 10.82 கோடி ரூபாய் அளவுக்கு மேம்பாட்டுக் கட்டணம் வசூலிக்கப்படாமல் போனதுடன் 7.50 கோடி ரூபாய் வட்டி இழப்பும் ஏற்பட்டது. (அரசுக்குச் சேர வேண்டிய தொகையை வசூல் செய்யாமல் இருப்பதும், திட்டச் செயலாக்கத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையை செலவழிக்காமல் இருப்பதும் நிர்வாகச் சீர்கேடு)

v தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை கள் இன்றி புதியதோர் தொழில் நுட்பத்தின் மூலம் நீர்மூழ்கிக் கப்பலை ஓர் இடத்தி லிருந்து இழுத்துச் செல்ல அனுமதி அளித்த தால் 4.41 கோடி ரூபாய் பயனற்ற செலவு ஏற்பட்டதுடன், கடல் சார்ந்த பாரம்பரிய அருங்காட்சியகம் அமைக்க வேண்டுமென்ற அரசின் நோக்கமும் நிறைவேறவில்லை. (பயனற்ற செலவும், அரசின் நோக்கம் நிறை வேறாததும் முறையான, கண்காணிப்பின் மையால் ஏற்பட்ட விளைவுகள்)

v மனித, வன உயிரினங்கள் மோதலைக் குறைக்க ஒதுக்கப்பட்ட 105.57 கோடியில் வனத்துறை 10.29 கோடி ரூபாய் பயன்படுத்த தவறியது தணிக்கை அறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது.

தவறுகள் சரி செய்யப்படலாம், நிர்வாகம் மேம்பட வேண்டும் என நினைத்தால்; ஏற்பட்ட இழப்புகள் ஏற்பட்டவைதான்; அவற்றை அரசால் ஈடு செய்து விட முடியாது! ஜெயலலிதா அரசின் செயல்பாட்டுத் தரத்திற்கும், தவறுகளுக்கும், முறைகேடுகளுக்கும், திட்டமிட்டு உண்டாக்கிய நட்டத்திற்கும், திட்டமிடாததால் ஏற்பட்ட இழப்புக்கும், பல நேர்வுகளில் காணப்படும் கவனமின்மைக்கும், அலட்சியத்திற்கும், கண்காணிப்புக் குறைபாட்டுக்கும், நிதி மேலாண்மையில் நேர்ந்த பிழைகளுக்கும் சான்றாவணமாக விளங்குகிறது தலைமைக் கணக்காயரின் ஆண்டறிக்கை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here