வாக்காளர் அடையாள அட்டையில் அழகான உருவத்தை பதிவு செய்யலாம்
தமிழகத்தில் உள்ள, 300க்கும் மேற்பட்ட, 'இ - சேவை' மையங்களில், கைக்கு அடக்கமான, பிளாஸ்டிக் வண்ண வாக்காளர் அடையாள அட்டை, உடனுக்குடன் கிடைக்கும்; அதில், தேவைப்பட்டால், உங்கள் அழகான முகத்தைப் பதிந்து பெற்றுக் கொள்ளலாம்.
இது குறித்து, தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள, இ - சேவை மையங்களில், தற்போது, 100 வகையான சேவைகள் வழங்கப்படுகின்றன; இந்த ஆண்டுக்குள், சேவைகளின் எண்ணிக்கை, 300 ஆக உயர்த்தப்படும். அதன் ஒரு பகுதியாக, வண்ண வாக்காளர் அடையாள அட்டை, வழங்கப்பட உள்ளது. அரசு கேபிள், 'டிவி' நிறுவனத்தின் கீழ், 486 இ - சேவை மையங்கள் உள்ளன.
இந்த நிறுவனத்தின் சார்பில், சென்னையில், சில இடங்களில், இந்த சேவை நேற்று துவங்கியது. அதற்காக, வாக்காளர்களின் புகைப்படம் உள்ளிட்ட முழு விபரங்கள், தகவல் தொழில்நுட்ப துறையிடம், தேர்தல் துறை வழங்கி உள்ளது. வாக்காளர்கள் மையங்களுக்கு சென்று, வாக்காளர் அட்டை எண்ணை கூறியதும், கைக்கு அடக்கமான, பிளாஸ்டிக் வாக்காளர் அடையாள அட்டை, அச்சிட்டு தரப்படும்; 25 ரூபாய் செலுத்த வேண்டும். வாக்காளர் அட்டை தொலைந்தாலும், இந்த மையத்தில், அடையாள அட்டை எண்ணை தெரிவித்து, புதிய அட்டை பெறலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
அழகாக தெரிய வேண்டுமா? : வாக்காளர் அடையாள அட்டையில் புகைப்படங்கள், மிக மோசமாக தெரிவதாக புகார்கள் உள்ளன. இ - சேவை மையங்களில், வாக்காளர்களை புகைப்படம் எடுத்து, அதை, வண்ண அடையாள அட்டையில் பதிந்து தர வசதிகள் உள்ளன. தேர்தல் கமிஷன் தந்த அட்டையில் உள்ள புகைப்படத்தை, விருப்பம் உள்ளோர், இந்த மையங்கள் வாயிலாக மாற்றிக் கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக