புரட்சிக்குப் பின் கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டியவர்!
மாபெரும் தலைவர் காஸ்ட்ரோவுக்கு செவ்வஞ்சலி!
========================================
இன்று காலை காஸ்ட்ரோ மறைந்தார் என்ற செய்தி வந்து சேர்ந்து உலகத்தை கண்ணீரில் ஆழ்த்தியது. உலகப் புரட்சிக்கு அவரின் பங்களிப்பு மிகப் பெரியது. உலகத்தின் முதல் சோசலிச நாடு வீழ்த்தப்பட்ட போதும், கியூபா என்ற குட்டி நாட்டிற்குத் தலைமை தாங்கி அதனை வழிநடத்தி சோசலிசக் கனவிற்கு உயிர் துடிப்பு அளித்து வந்தவர் அவர்.
பிடல் அலஜான்டிரோ காஸ்ட்ரோ ரூஸ் என்ற காஸ்ட்டோ ஆகஸ்ட் 13, 1926 ஆம் ஆண்டு பிறந்தவர். 1959 முதல் 1976 வரை கியூபாவின் பிரதமராகவும் 1976 முதல் 2008 வரை அந்நாட்டின் ஜனாதிபதியாகவும் பணியாற்றிவர். அவரின் அரசியல் மார்க்சிய - லெனினியம்.
அவரின் வாழ்க்கையும் கியூபாவின் வரலாறும் ஒன்றிணைந்து பயணப்பட்டதை சென்ற நூற்றாண்டு கண்டது. சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் உலகின் பிற நாடுகளில் சோசலிசம் பின்னடவுக்கு ஆளான போதும், இந்த நூற்றாண்டின் நிகழ்காலம் வரை கியூபாவின் இறையாண்மையையும் சோசலிசப் பொருளாதாரத்தையும் காத்து நின்றார் காஸ்ட்ரோ.
காஸ்ட்ரோ ஒரு பணக்கார விவசாயியின் மகன். ஹவானாவில் அவர் படித்தபோது ஏகாதிபத்திய எதிர்ப்பு இடதுசாரி அரசியலால் ஈர்க்கப்பட்டார். டொமினிக்கன் குடியரசிலும், கொலம்பியாவிலும் ஆட்சி செய்து கொண்டிருந்த வலதுசாரி அரசாங்களுக்கு எதிராகக் கலவரங்களைக் கட்டமைத்தார். கியூபாவின் ஜனாதிபதியாக இருந்த பட்டிஸ்ட்டாவை வீழ்த்துவதற்காக 1953ல் நடந்த தாக்குதலுக்குத் தலைமை தாங்கினார். அந்த முயற்சி தோல்வியடைந்தது. காஸ்ட்ரோ கைது செய்யப்பட்டார்.
ஓராண்டுக்குப் பின்பு வெளிவந்த அவர் மெக்சிகோ சென்ற 26 ஜூலை இயக்கம் என்ற புரட்சிகர இயக்கத்தைக் கட்டமைத்தார். அவரின் சகோதரர் ராவுல் காஸ்ட்ரோவும், சே குவாரேவும் காஸ்ட்ரோவுடன் தோளோடு தோள் நின்றனர்.
பட்டிஸ்ட்டா அரசுக்கு எதிராக புரட்சியை முன்னெடுக்க கியூபா திரும்பி கொரில்லா இயக்கத்தைக் கட்டமைத்தார். 1959ல் பட்டிஸ்ட்டா வீழ்த்தப்பட்டான். காஸ்ட்ரோ கியூபாவின் பிரதமராகவும் இராணுவத்தின் தலைவராகவும் பொறுப்பேற்றார்.
கொரில்லா போர் முறைகளின் மூலம், புரட்சி நடத்தி ஆட்சியைக் கைப்பற்றிய காஸ்ட்ரோ முன்மாதிரியான வகையில் செயல்பட்டார். ஆட்சியைக் கைப்பற்றிய பின்பு கம்யூனிஸ்ட் கட்சியை ஆட்சி அதிகாரத்திற்குக் கொண்டுவந்தார். இதைப் புரிந்துகொள்ள சுருக்கமாக கியூபாவின் கம்யூனிச இயக்க வரலாற்றைப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
சர்வதேசப் பார்வையுள்ள கம்யூனிஸ்ட் கட்சி கியூபாவில் 1920ல் அமைக்கப்பட்டது. அரசியல் காரணங்களுக்காக 1994ல் வெகுமக்கள் சோசலிசக் கட்சி என்று பெயரை மாற்றிக்கொண்டது. 26 ஜூலை இயக்கத்தின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றிய காஸ்ட்ரோ புரட்சி முடிந்து 2 ஆண்டுகள் கழித்து 1961ல் ஒருங்கிணைந்த புரட்சிகர அமைப்புகள் (Integrated Revolutionary Organizations -ORI) என்ற அமைப்பை ஏற்படுத்தினார்.
காஸ்ட்ரோவின் ஜூலை 26 இயக்கம், பிளாஸ் ரோகாவால் வழிநடத்தப்பட்ட வெகுமக்கள் சோசிலிசக் கட்சி என்ற பழைய கம்யூனிஸ்ட் கட்சி. புரட்சிகர சுவடி (Revolutionary Directory ) என்ற மாணவர்களைக் கொண்ட அமைப்பு ஆகிய மூன்று அமைப்புகள் இணைந்து “ஒருங்கிணைந்த புரட்சிகர அமைப்புகள்“ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. 1962 மார்ச் 26ல் கியூபாவின் சோசலிச புரட்சிக்கான ஐக்கிய கட்சியாக ( United Party of the Cuban Socialist Revolution -PURSC) அது வடிவெடுத்தது. அதன்பின் 1965ல் அது கியூபா கம்யூனிஸ்ட் கட்சி ஆனது. 1976ன் கியூபா அரசியல் சட்டம் அரசு மற்றும் சமூகத்தின் முதன்மை வழிகாட்டி என்று கியூபாவின் கம்யூனிஸ்ட் கட்சியை அங்கீகரித்தது. சோசலிசம் கட்டுவதை மேற்கொண்டு கம்யூனிச சமுதாயம் நோக்கிப் பயணப்படுவது என்ற நோக்கத்தைப் பிரகடனம் செய்த கட்சியாக கியூபாவின் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறது.
இந்தப் பயணப் பாதை, ஆயுதக் கலவரத்தில் துவங்கி, புரட்சிகரக் குழுவின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றி, பல்வேறு இடது சக்திகளை ஒன்றுபடுத்தி, பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியை வலுப்படுத்தி அதன் தலைமையில் கியூபாவில் புரட்சிகர விவசாய சீர்திருத்தம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் மாற்றத்தை நிலை நிறுத்தி, அமெரிக்காவின் காலடியில் அமைந்த நாடாக இருந்தாலும், ஏகாதிபத்தியத்திற்கு மண்டியிடாமல் எதிர்த்து நின்று இன்றளவும் சோசலிக் கனவை நனவாக்கும் புரட்சிப் பாதையை கியூபாவிற்கு சமைத்துக்கொடுத்த மாபெரும் கம்யூனிஸ்ட் போராளி காஸ்ட்ரோ.
ஏகாதிபத்தியத்தின் அனைத்து சதிகளையும் முறியடித்து, காலத்தை வென்று நின்ற காஸ்ட்ரோவிடமிருந்து, அவர் கையிலெடுத்த மார்க்சிய- லெனினிய புரட்சிப் பாதையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.
மாபெரும் மக்கள் தலைவனுக்கு செவ்வஞ்சலி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக