ஆசிரியர் தகுதித் தேர்வு முறை தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள இரு அரசாணைகள் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது. இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதிப்படுத்திய உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை அளித்த தீர்ப்பை ரத்து செய்துள்ளது.
இரு அரசாணைகள்: தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் (டிஇடி) தகுதிகாண் (வெயிட்டேஜ்) முறையை 2013-ஆம் ஆண்டில் தமிழக அரசு கொண்டு வந்தது. இது தொடர்பாக 2014, பிப்ரவரி 6-ஆம் தேதியிட்ட அரசாணை 25-இல் "தேர்வெழுதும் அனைத்து இடஒதுக்கீட்டு பிரிவினருக்கும் ஐந்து சதவீத மதிப்பெண் விலக்கு அளிக்கப்படும்' என்று குறிப்பிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, 2014, மே 30-ஆம் தேதியிட்ட அரசாணை 71-இல் தேர்வெழுதிய ஆசிரியர்களின் பணி நியமனத்தின்போது தகுதிகாண் (வெயிட்டேஜ்) முறை கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது.
இந்நிலையில் "தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின வகுப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் வழங்கப்பட வேண்டிய மதிப்பெண் சலுகையை அனைத்து இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் வழங்க வகை செய்யும் தமிழக அரசின் அரசாணையால் எங்களுக்கு பாதிப்பு ஏற்படும்' என்று சில ஆசிரியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கில் தமிழக அரசின் அரசாணையை உறுதி செய்து உயர் நீதிமன்றம் 2014 செப்டம்பர் 22-இல் தீர்ப்பளித்தது. இதே விவகாரத்தில் மற்றொரு ஆசிரியர் பிரிவினர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்தனர். அதில், ஆசிரியர்கள் பாதிக்கப்படுவர் எனக் கூறி தமிழக அரசின் அரசாணைகளை ரத்து செய்து 2014, செப்டம்பர் 25-இல் தீர்ப்பளிக்கப்பட்டது.
இதையடுத்து "ஒரே விவகாரத்தில் இரு நீதிமன்றங்கள் மாறுபட்ட தீர்ப்புகளை அளித்ததால் இந்த விஷயத்தில் தலையிட வேண்டும்' என்று கூறி பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். தீர்ப்பு: இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சிவகீர்த்தி சிங், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து புதன்கிழமை அளித்த தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் வருமாறு: ஆசிரியர் தகுதித் தேர்வு முறை தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட இரு அரசாணைகள், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் வழிமுறைகளின்படி வெளியிடப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தியது. அத்தேர்வில் இடஒதுக்கீட்டுப் பயனாளர்களுக்கு மதிப்பெண் சலுகை அளித்துள்ளது. எனவேதான் தமிழக அரசின் அரசாணைகளை உறுதிப்படுத்தி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் வழிமுறைகளின் அம்சங்களை கவனத்தில் கொள்ளாமல் தமிழக அரசின் நடவடிக்கையை தன்னிச்சையானதாகக் கருதி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது. எனவே மதுரைக் கிளை அளித்த தீர்ப்பை ரத்து செய்கிறோம். இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு உறுதிப்படுத்தப்படுகிறது. இது தொடர்பாக தேர்வில் வெற்றி பெறாதவர்கள் தாக்கல் செய்த அனைத்து மேல்முறையீட்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக