தென் தமிழகத்தில் நாம் வெட்டிக்கொள்ள முடிவெடுத்தால் சீமை கருவேல மரங்களை மட்டுமே வெட்டுவோம். முகநூல் நண்பரின் பதிவு - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

தென் தமிழகத்தில் நாம் வெட்டிக்கொள்ள முடிவெடுத்தால் சீமை கருவேல மரங்களை மட்டுமே வெட்டுவோம். முகநூல் நண்பரின் பதிவு

"தென் தமிழகத்தில் நாம் வெட்டிக்கொள்ள முடிவெடுத்தால் சீமை கருவேல மரங்களை மட்டுமே வெட்டுவோம்"

பல வருடங்களுக்கு பிறகு மக்கள் துயர் துடைப்பில் களத்தில் ஒரு முதலமைச்சர் என புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் முதல்வர் பன்னீர் செல்வத்தை புகழ்ந்திருக்கிறார்.

(மறவர் சமுதாயத்தை சார்ந்த Boopathy Murugesh அவர்களின் முகநூல் பதிவு)

சிறுவயதில் எங்கள் வீட்டின் அருகில் ஒரு தேவேந்திர சமுதாய குடும்பம். சாதி கடந்த அன்பு எங்களுடையது. அவரை மாமா என்றும் அவர் மனைவியை அத்தை என்றும் அழைக்க பழக்கியிருந்தார்கள். அந்த அத்தை என்னை தூக்கி வளர்த்தார். நான் அவர்கள் வீட்டில் தவழ்ந்து விளையாடாத இடமில்லை. சாப்பிடாத உணவில்லை.

பின் காலப்போக்கில் பரமக்குடியின் சாதி கலவரம் எங்களை அவர் அவர் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிக்கு போக செய்தது. அதன் பிறகு அவர்களுடன் தொடர்பில்லை. பின் எங்கள் ஊரில் சாதி ரீதியாக நிறைய பிரச்சனைகள். ஆனால் எவ்வளவு கோபம் வந்தாலும் அவர்கள் மீதான அன்பை என்னால் மறக்க முடியாது.

அரசியல் இரு சமுதாயத்தினரையும் பிரித்தே வைத்திருந்தது. ஒரு சமுதாயத்தின் குழந்தைகளிடம் அவர்களை கீழ் சாதி என சொல்லியிருந்தது. இன்னொரு சமுதாய குழந்தைகளிடம் அவர்கள் நமக்கு எதிரிகள் என சொல்லியிருந்தது. பள்ளி காலத்திலிருந்தே சாதிவெறி எரியத்துவங்கி விடும்.

அதில் அரசியல் ஓட்டு வாங்கும், ஊடகங்கள் காசு பார்க்கும். அந்தந்த சாதியிலும் சிலர் இதை தூண்டுவதால் லாபமடைந்தனர் என்பதை மறுக்க முடியாது. ஆனால் அந்த சாதி சில நூற்றாண்டுகளுக்கு முன் வந்தது. அந்த பகை உணர்வு சில ஆண்டுகளுக்கு முன் தான் விதைக்கப்பட்டது. அதற்கு முன் இவர்கள் வாழ்க்கை முறையை பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கும்.

எங்கள் இரு குடும்பம் போலவே இந்த இரு இனமும் இணக்கமாகவே வாழ்ந்து வந்துள்ளது. இரண்டும் விவசாய குடிகள். எங்கெல்லாம் தேவர் சமுதாய வீடுகள் உள்ளதோ அங்கெல்லாம் தேவேந்திர சமுதாயமும் இருந்துள்ளது. இவர்கள் இணைந்தது தான் கலாச்சாரம், தொழில், உணவு.

என்றைக்கு இவர்கள் பிரிந்தார்களோ அந்த நாளிலிருந்து இரண்டு இனமுமே தங்கள் இயல்பை இழந்து இன்று டாஸ்மாக் பிடியில் சிக்கிக்கொண்டுள்ளது. விவசாயத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறோம். ஒன்றாய் உழைத்து ஆண்ட மண்ணின் மைந்தர்கள் எவனுக்கோ அடிமையாக வெளிநாடுகளில் வேலை பார்க்கிறோம்.

சரி அதை விடுவோம். என் கதைக்கு வருவோம். சமீபத்தில் அந்த அத்தையை என் சகோதரி சந்தித்த போது அவர் வயதின் பொருட்டு சுவதீனம் இழந்து என் பெயர் கூட நினைவில் இல்லை என்று கேட்டும், அவர் உடல்நிலை குறித்தும் மிகுந்த வருத்தமடைந்தேன். நேரில் சென்று ஒருமுறையாவது பார்த்துவிட முடிவெடுத்துள்ளேன்.

அத்தகைய சூழலில் டாக்டர். கிருஷ்ணசாமியின் இந்த அறிக்கை மனதிற்கு ஆறுதல் அளிக்கிறது. வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு அவர் அதிமுக முதல்வர், இவர் புதிய தமிழகம் கட்சி தலைவர் இதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் என தோனலாம். இந்த வரலாற்று சிறப்புமிக்க அறிக்கையின் பலன் அந்த வெறுப்பையும் அதனால் ஏற்பட்ட இழப்பையும் உணர்ந்தவனுக்கே தெரியும்.

இது அரசியலுக்காக செய்யப்பட்டது என்றாலும், இத்தனை ஆண்டு காலம் அரசியல் எங்களுக்குள் வெறுப்பை தானே விதைத்துள்ளது? இப்போது தானே அன்பை விதைக்கிறது. இதை தொடக்கமாக கொண்டு பழைய கசப்புணர்வை மறந்து இந்த இரண்டு சமுதாயமும் அன்பு கொள்ள வேண்டும். வரலாறை ஆராய்வோம், தவறு இருந்தால் மன்னித்துக்கொள்வோம். நெருங்கி வரும் ஆபத்துகளிலிருந்து நம் மண்ணையும் மரபையும் காப்பாற்றுவோம்.

தேவர் சாதி நண்பர்களே டாக்டர். கிருஷ்ணசாமி சக தமிழனாக அன்புடன் பன்னீர்செல்வத்தை வரவேற்கிறார். SV சேகர் வெறுப்புடன் இனி பிரமணர் ஓட்டு கிடைக்காது என்கிறார். நீங்கள் யாரை தாழ்த்தினீர்கள்? யாரை தலையில் வைத்து ஆடினீர்கள்? உங்கள் சாதிய கண்ணோட்டத்தை மறுபரிசீலனை செய்யுங்கள்.

இனி தென் தமிழகத்தில் நாம் வெட்டிக்கொள்ள முடிவெடுத்தால் சீமை கருவேல மரங்களை மட்டும் வெட்டுவோம்..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here