முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை கடற்கரை சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., நினைவிடத்துக்கு அருகிலேயே நினைவிடம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக கடலோர ஒழுங்கு முறை சட்டத்தில் இருந்து போதிய விலக்குப் பெற்று நினைவிடம் அமைக்கப்பட இருப்பதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்ததாக திங்கள்கிழமை இரவு 11.30 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவரது உடல் அவரின் போயஸ் தோட்ட இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதன்பின்பு, சென்னை அரசினர் தோட்டத்துக்கு அருகேயுள்ள ராஜாஜி ஹாலில் பொது மக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்படும் எனத் தெரிகிறது. நாடு முழுவதும் உள்ள முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், கட்சியினர், பொது மக்களின் அஞ்சலிக்குப் பிறகு அவரது உடல் சென்னை கடற்கரை சாலையில் நினைவிடம் அமைக்கப்பட்டு அங்கே வைக்கப்படும் எனத் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடற்கரை ஓரங்களில் எந்தக் கட்டுமானங்களையும் கட்டக் கூடாது என்பது கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அம்சத்தில் குறிப்பிடப்படும் முக்கிய விதியாகும். ஆனால், அதிலிருந்து மத்திய அரசிடம் இருந்து விலக்குப் பெற்று, எம்.ஜி.ஆர்., நினைவிடம் அருகே முதல்வர் ஜெயலலிதாவுக்கும் நினைவிடம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான கோப்புகள் தயார் செய்யப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிற இடங்களும் ஆய்வு: கடற்கரைச் சாலையில் நினைவிடம் அமைப்பதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபம், தலைமைச் செயலகத்துக்கு எதிரேயுள்ள பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான காலியிடம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு இடத்தைத் தேர்வு செய்து அங்கு நினைவிடம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும், சென்னை அண்ணாசாலையில் உள்ள பழைய சபையர் திரையரங்கம் இருந்த இடம் பயன்படுத்தாமல் உள்ளது.
இந்த திரையரங்கம் எதிரே முதல்வர் ஜெயலலிதா படித்த சர்ச் பார்க் பள்ளி அமைந்துள்ளதால் அந்த இடத்தில் நினைவிடம் அமைக்கப்பட்டால் அது அவருக்குச் சிறப்பு சேர்ப்பதாக இருக்கும் என ஒருதரப்பினர் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக