சுராஜ், சில படங்களில் என்றும் அழியாத காமெடிகளை, வடிவேலுவின் மூலமாகக் கொடுத்ததற்காக கொண்டாடப்பட்டது உண்மை. ஆனால் அந்த ஒரு காரணத்தை வைத்துக்கொண்டு, அவர் என்ன சொன்னாலும் கேட்டுக்கொண்டு இருப்பார்கள் என நினைத்ததுதான் அவரது போதாதகாலம். கத்தி சண்டை திரைப்படத்துக்கு, திரும்பும் இடமெல்லாம் இடியைப்போல் இறங்குகின்றன, படத்தைப் பற்றிய நெகடிவ் விமர்சனங்கள். அப்படி இருந்தும்கூட, வடிவேலுவுக்காக படம் பார்க்க பலரும் தியேட்டர்களை நோக்கிச் சென்றுகொண்டிருந்த வேளையில், நடிகைகளைப் பற்றி தரக்குறைவாகப் பேசி தனது படத்துக்கு அவரே ரெட் கார்டு போட்டுக்கொண்டார் என்பதுதான் உண்மை. சுராஜின் பேச்சுபற்றி தமன்னாவும் நயன்தாராவும் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதைப் படிக்கும் முன்பு, சுராஜ் என்ன சொன்னார் என்பதைத் தெரிந்துகொள்வோம்.
‘சினிமா பேசலாம்’ என்ற யூடியூப் இணையதளத்தை நடத்திவரும் இருவருக்கு அளித்த பேட்டியில், (இப்போது அந்தப் பேட்டி அங்கு இல்லை. வீடியோவை நீக்கிவிட்டார்கள்) தமன்னாவின் ரோல் கிளாமராக நன்றாக இருந்ததே என்று கேள்வி கேட்கிறார்கள். அதற்கு, சுராஜ் இப்படித் தொடங்குகிறார்.
நம்ம லோக்கல் ஆடியன்ஸ். நமக்கு என்ன தேவை? ஹீரோ வந்து சண்டை போடணும். ஹீரோயின் வந்தா நல்லா கிளாமரா நடிக்கணும் அவ்வளவுதான். ஹீரோயின் புடவை சுத்திட்டு வர்றதுல எல்லாம் எனக்கு உடன்பாடே இல்லை. நம்ம பணம் குடுத்துதானே தியேட்டருக்குப் போறோம். சும்மாவா போறோம். பணம் குடுத்து தியேட்டருக்குப் போகும்போது, சும்மா ஜாலியா பாக்கலாமே தமன்னாவ. எப்படி கிளாமரா இருப்பாங்கன்னு பாக்கலாமேன்னுதான. பணம் குடுக்குறான் அவன் ஆடியன்ஸ். நடிப்புக்கு முக்கியத்துவம் வேணும்னா தனியா ஒரு படம் பண்ணிக்கோ. கமெர்ஷியல் படம் பண்ணும்போது கிளாமரா பண்ணு. கிளாமரா பண்ணவங்கதான் இன்னைக்கு பெரிய ஹீரோயின்ஸ். அப்பறம், வந்ததுக்கப்பறம் என்ன வேணும்னாலும் கதை பண்ணிக்கோங்க. டி.வி. சீரியல்ல பெரிய பெரிய ரோல் கிடைக்கும். நம்ம படத்துக்கு வந்தா கிளாமர் பண்ணணும். பசங்க எஞ்சாய் பண்ணணும் படத்தை. காஸ்ட்யூம் டிசைனர்கிட்ட சொல்லிடுவேன். காஸ்டியூம் டிசைனரெல்லாம் கால்முட்டி வரைக்கும் மூடி எடுத்துக்கிட்டு வருவான். கூப்பிட்டு கட் பண்ணுடா அதைன்னு சொல்லுவேன். அவன் வந்து ‘இல்ல சார், மேடம் திட்டும் சார். கோச்சிக்கும் சார்’னு சொல்லுவான். அட, ஆடியன்ஸ் எல்லாம் உதைப்பாண்டா என்னை. அதுக்குதான ஒரு லட்சம், ஒரு கோடின்னு சம்பளம். அதெல்லாம் இல்லை. நான் சொன்னேன்னு போய்ச் சொல்லு. அதுக்குத்தான ஒரு கோடி சம்பளம் தர்றோம் என்று சொல்லியிருக்கிறார், தமிழ் சினிமாவின் கமெர்ஷியல் காமெடி இயக்குநர் சுராஜ்.
சுராஜின் பேச்சில் இருக்கும் அபத்தங்கள்.
நடிகைகள் பணம் வாங்கிக்கொண்டு, குறைந்த உடையுடன் நடிக்க வேண்டும் என்று சொன்னது.
லோ கிளாஸ் ரசிகர்கள் என்று குறிப்பிட்டு, கிளாமர் இல்லையென்றால் உதைப்பார்கள் என்று சொன்னது.
இதற்கு சம்பந்தப்பட்ட நடிகைகளின் ரியாக்ஷன் எப்படி இருந்திருக்கும் என நினைக்கிறீர்கள். தமன்னா பேசியிருக்கிறார்.
பெண்கள் முன்னேற்றத்தைப் பற்றி பேசக்கூடிய தங்கல் போன்ற படத்தை இடையில் விட்டுவிட்டு, இந்த மாதிரி விஷயத்தைப் பற்றி நான் பேச வந்திருப்பது மிகவும் கொடுமை. இயக்குநர் சுராஜின் பேச்சால் நான் மிகவும் காயப்படுத்தப்பட்டும் கோபப்படுத்தப்பட்டும் இருக்கிறேன். அவர் கண்டிப்பாக என்னிடம் மட்டுமல்ல, இண்டஸ்ட்ரியில் இருக்கும் அனைத்துப் பெண்களிடமும் மன்னிப்புக் கேட்டே ஆகவேண்டும். மக்களை பொழுதுபோக்குவதற்காக இருக்கும் நடிகர்கள் நாங்கள். எங்களை எப்போதும் ஒரு பொருளாக நினைக்கக் கூடாது. தென்னிந்திய சினிமாவில் கடந்த 11 வருடங்களாக நான், எனக்குப் பிடிக்காத பல காஸ்ட்யூம்களை அணிந்து நடித்திருக்கிறேன். நம் நாட்டில் இருக்கும் மிக சோகமான விஷயமே பெண்களைப்பற்றி பேசும் எந்த விஷயமும் சீரியஸாக எடுத்துக்கொள்ளப்படாததுதான். இந்த மாதிரி, சில தனி மனிதர்களின் கருத்தை வைத்துக்கொண்டு, மொத்த இண்டஸ்ட்ரியையும் தவறாக நினைக்க வேண்டாம் என்று ரசிகர்களை கேட்டுக்கொள்கிறேன்.
இதுதான் தமன்னாவின் அறிக்கை. ஒரு நடிகை பணம் வாங்கிக்கொண்டு எப்படி நடிக்க வேண்டும் என சுராஜ் பேசியதை அறிந்த நயன்தாரா, இந்த விஷயத்தை மிகவும் சீரியஸாக எடுத்துக்கொண்டு, தானாக முன்வந்து அவரது கருத்தைத் தெரிவித்திருக்கிறார். தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரிய போட்டியாளர்களாக இருக்கும் தமன்னா, பாதிக்கப்பட்ட பிரச்னையாக எடுத்துக்கொள்ளாமல் பொதுவாக, பெண்களுக்கு ஏற்பட்ட அநீதியாக நினைத்து நயன்தாரா வெளியிட்டிருக்கும் அறிக்கை.
இண்டஸ்ட்ரியின் பொறுப்பான இடத்தில் இருக்கும் ஒருவர், எப்படி இந்த மாதிரியான இழிவான பேச்சை வெளிப்படுத்துகிறார் எனத் தெரியவில்லை. ஹீரோயின்களை சிறுமைப்படுத்தக்கூடிய இப்படி ஒரு ஸ்டேட்மெண்டை வெளிப்படுத்த அவர் யார்? ஹீரோயின்களை, பார்களில் பணத்தைக் கொடுத்ததும் உடைகளைக் கழட்டி நடனமாடும் ஸ்ட்ரிப்பர்ஸ் (Strippers) என்று நினைத்தாரா? அவரது குடும்பத்திலிருந்து வேலைக்குப் போகும் பெண்களைப் பற்றி இப்படிப் பேச அவருக்கு தைரியம் இருக்கிறதா? பிங்க், தங்கல் போன்ற படங்கள் வெளியாகி பெண்கள் முன்னேற்றத்தையும், சுயமரியாதையையும் பேசும் சமயத்தில், இப்படி ஒரு பேச்சை பேசும் சுராஜ் எந்தக் காலத்தைச் சேர்ந்தவர். கமெர்ஷியல் சினிமாவாக இருந்தாலும், கதைக்குத் தேவைப்பட்டால்தான் ஒரு நடிகை சிறிய உடைகளை அணிந்துகொள்கிறார். பணத்தைக் கொடுத்துவிட்டு ஹீரோயினை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதாக எந்த ஆடியன்ஸை சொல்கிறார்? நமது திரையுலக ரசிகர்கள், அவர் நினைப்பதைவிட மிகவும் பக்குவப்பட்டவர்கள். அவர்களுக்கு ஒரு நடிகையை எப்படிப் பார்க்க வேண்டும், மதிக்க வேண்டும் என்பது தெரியும். ஹீரோயின்கள் பணத்தை வாங்கிக்கொண்டு துணிகளை குறைத்துக் கொள்வார்கள் என சுராஜ் சொல்லியிருப்பது, இளைஞர்களை தவறான பாதையில் கொண்டுசெல்லும். நானும்கூட கமெர்ஷியல் சினிமாக்களில் குறைவான உடையை உடுத்தி நடித்திருக்கிறேன். ஆனால் அது சுராஜ் சொன்னதுபோல, லோ கிளாஸ் ஆடியன்ஸுக்காக இயக்குநர் கேட்டுக்கொண்டதற்காக அல்ல. ஏனென்றால், அது நான் மட்டுமே எடுக்கும் முடிவு. நினைத்ததும் ஹீரோயின்களை எடுத்துக்கொள்ள யாருக்குமே உரிமை கிடையாது.
இப்படி நயன்தாரா இதற்குமுன்பு கோபப்பட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டதே கிடையாது. ஏனென்றால், கடந்த பத்து வருடங்களில் இந்தமாதிரி நடிகைகளை யாரும் அவமதித்தது கிடையாது. சரியாகப் போகாத கத்தி சண்டைப் படத்துக்கு, விளம்பரமாக இருக்கட்டும் என்றுகூட சுராஜ் இப்படிப் பேசியிருக்கலாம். ஆனால் இப்படி ஒரு மட்டமான கமெண்டை சொல்லித்தான் ஒரு படத்தை சக்சஸ் செய்யவெண்டுமென்ற அவசியமில்லை. 10 படங்கள் தோல்வியடைந்து ஒரு சிறந்த படத்தைக் கொடுத்தாலும், தமிழ் சினிமா ரசிகர்கள் நினைவில் வைத்துக்கொள்வார்கள். ஆனால் மிகவும் மோசமான இயக்குநர் என்ற லிஸ்ட்டில் சுராஜ் தற்போது முதல் இடத்துக்கு வந்துவிட்டார்.
இந்த செய்தியில் வைக்கப்பட்டிருக்கும் படங்களில், மிகவும் மோசமான படங்கள் தெலுங்கில் மட்டும் ரிலீஸ் செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் கத்தி சண்டை படக்குழு என்ன சொல்ல வருகிறது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக