முலாயம் சிங்: அமர்சிங் எனக்கு நிறைய உதவிகள் செய்துள்ளார். அமர் எனது சகோதரர். ஷிவ்பால் யாதவ் செய்த உதவிகளையும் பணிகளையும் நான் மறக்க முடியாது. எனவே அமர் மற்றும் ஷிவ்பாலுக்கு எதிரான எந்த ஒன்றையும் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. நான் சிறையில் தள்ளப்படுவதிலிருந்து என்னை காப்பாற்றியவர் அமர். வெறும் சிகப்பு தொப்பி அணிவதால் சமாஜ்வாதி கட்சியினராகி விட முடியாது உத்தரப் பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ்வை 6 ஆண்டுகள் கட்சியிலிருந்து நீக்கி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார் சமாஜ்வாதிக் கட்சித் தலைவரும் அகிலேஷ் தந்தையுமான முலாயம் சிங் யாதவ். கட்சியின் பொதுச் செயலாளர் ராம்கோபால் யாதவ்வையும் 6 ஆண்டுகள் நீக்கி உத்தரவிட்டார் முலாயம் சிங் யாதவ். உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலையொட்டி அகிலேஷ் யாதவ் தனக்கு வேண்டப்பட்ட 200 வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். முன்னதாக முலாயம் சிங் யாதவ் 325 வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். இதில் அகிலேஷ் யாதவுக்கு வேண்டப்பட்டவர்கள் ஒதுக்கப்பட்டனர்,
இதனையடுத்து போட்டிப் பட்டியலை வெளியிட்டார் அகிலேஷ் யாதவ். கட்சியின் பொதுச்செயலாளர் ராம்கோபால் யாதவ் ஜனவரி 1-ம் தேதி அவசரக் கட்சிக்கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். இதனையடுத்து ‘ஒழுங்கீன நடவடிக்கைக்காக’ அகிலேஷ் யாதவ் மற்றும் கட்சிப் பொதுச்செயலாளர் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார் முலாயம் சிங் யாதவ்.
இந்நிலையில் உ.பி.முதல்வராக இருந்து வரும் அகிலேஷ் யாதவ் மற்றும் ராம் கோபால் யாதவ் ஆகியோரை 6 ஆண்டுகளுக்கு கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார் முலாயம் சிங் யாதவ்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கட்சி விரோத நடவடிக்கைளில் ஈடுபட்டதால். ஒழுங்கீன நடவடிக்கையாக அகிலேஷ் யாதவ் சமாஜ்வாதி கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்” என்று கூறப்பட்டுள்ளது. அகிலேஷ் யாதவுக்கும் தந்தை முலாயம் சிங் யாதவுக்கும் இடையே சில மாதங்களாகவே புகைச்சல் இருந்து வந்தது. ஆனாலும் இடையில் எல்லாம் சரிசெய்யப்பட்டு விட்டதாகவும் பிரச்சினை இல்லை என்றும் முலாயம் தெரிவித்திருந்தார்.
மோதல் பின்னணி:
உத்தரப் பிரதேச அமைச்சரவையில் ஷிவ்பால் யாதவ் உட்பட 4 அமைச்சர்களை முதல்வர் அகிலேஷ் யாதவ் நீக்கினார். இதற்குப் பதிலடியாக அகிலேஷின் ஆதரவாளர் ராம் கோபால் யாதவ் எம்.பி. சமாஜ்வாதி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் அகிலேஷ் யாதவுக்கும் அவரது சித்தப்பா ஷிவ்பால் யாதவுக்கும் இடையே மோதல் நீடிக்கிறது. இந்நிலையில் அகிலேஷ் தலைமையில் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் லக்னோவில் நடந்தது. இதில் ஷிவ்பாலும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களும் பங்கேற்கவில்லை.
இந்தக் கூட்டத்தில் ஷிவ்பால் யாதவ், அவரது ஆதரவாளர்கள் சதாப் பாத்திமா, நராத் ராய், ஓம்பிரகாஷ் சிங் ஆகியோரை அமைச்சரவையில் இருந்து நீக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான அறிவிப்பை அகிலேஷ் யாதவ் வெளியிட்டார்.
சமாஜ்வாதியின் மூத்த தலைவரான அமர் சிங் கடந்த 2010-ல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அண்மையில் அவர் மீண்டும் கட்சியில் சேர்க்கப் பட்டார். இதைத் தொடர்ந்து அமர் சிங்கின் ஆதரவாளரான நடிகை ஜெயபிரதாவுக்கு கடந்த ஆகஸ்டில் மாநிலத் திரைப்பட வளர்ச்சி வாரிய துணைத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. அவரது பதவியை முதல்வர் அகிலேஷ் பறித்தார்.
இந்நிலையில் கடந்த அக்டோபரில் இந்த மோதல் வலுக்க கட்சியின் எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள், தந்தையும் கட்சித் தலைவருமான முலாயம் சிங் யாதவ் ஆகியோர் நடத்திய கட்சிக் கூட்டத்தில் மனமுடைந்து பேசிய அகிலேஷ் யாதவ் கண்ணீர் மல்க கூறும்போது, ““யார் நேர்மையானவர் என்று முலாயம் நினைக்கிறாரோ அவரை முதல்வராக தேர்ந்தெடுக்கட்டும். இத்தனை ஆண்டுகளாக மக்கள் நலனுக்காக நான் கடினமாக உழைத்தேன். என் தந்தை என்னுடைய குரு. குடும்பத்தில் பிளவுகளை உண்டாக்க சிலர் முயற்சிக்கின்றனர். தவறுகளை எப்படி எதிர்ப்பதென்பதை நானேதான் கற்றுக் கொண்டேன்” என்றார்.
இதே கூட்டத்தில் முலாயம் பேசும்போது, “நாம் நம் பலவீனங்களுடன் சண்டையிடுவதற்கு பதிலாக நமக்குள்ளேயே சண்டையிட்டுக் கொள்கிறோம். சில அமைச்சர்கள் புகழ்ச்சித் துதிக்கு அடிமையாகின்றனர். விமர்சனங்களை தாங்க முடியாதவர்கள் தலைவர்களாக இருக்க தகுதியற்றவர்கள்.
அமர்சிங் எனக்கு நிறைய உதவிகள் செய்துள்ளார். அமர் எனது சகோதரர். ஷிவ்பால் யாதவ் செய்த உதவிகளையும் பணிகளையும் நான் மறக்க முடியாது. எனவே அமர் மற்றும் ஷிவ்பாலுக்கு எதிரான எந்த ஒன்றையும் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. நான் சிறையில் தள்ளப்படுவதிலிருந்து என்னை காப்பாற்றியவர் அமர். வெறும் சிகப்பு தொப்பி அணிவதால் சமாஜ்வாதி கட்சியினராகி விட முடியாது” என்றார்.
இந்தக் கூட்டத்தில் முலாயமும் அகிலேஷும் ஒருவரையொருவர் எதிர்த்துக் கூச்சலிட்டனர். அப்போது கட்சியிலிருந்து அகிலேஷ் நீக்கப்பட மாட்டார் என்றார் முலாயம். கட்சி கடினமான காலக்கட்டத்தை எதிர்கொண்டுள்ள நிலையில் நமக்குள்ளேயே சண்டையிட்டுக்கொள்வது நல்லதல்ல என்றார். ஆனால் அவரது வார்த்தைகளில் சமாதானம் ஏற்படாமல் கூட்டத்தில் மேலும் காட்டுக் கூச்சல்களும், ஒருவருக்கொருவர் கடும் வசைச்சொற்களையும் பரிமாறிக் கொள்ள கூட்டம் அப்படியே நிறுத்தப்பட்டது. முலாயமும் அகிலேஷ் யாதவ்வும் கடுமையான வார்த்தைகளைப் பரிமாறிக் கொண்டனர்.
இந்நிலையில், கட்சி தலைமைச் செயலகத்திற்கு வெளியே கோஷ்டி பூசலும் வலுத்தது. அகிலேஷ் யாதவ் மற்றும் ஷிவ்பால் யாதவ் ஆதரவாளர்கள் அடிதடியில் ஈடுபட்டனர். இதனால் கூட்டத்திற்கு முன் சலசலப்பும் பதற்றமும் அதிகரித்தது.
இந்த மோதல் தற்போது சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பெரிய அளவில் வெடிக்க தந்தைக்கு எதிராக மகன் போர்க்கொடி பிடித்து போட்டிப் பட்டியலை வெளியிட முலாயம் சிங் யாதவ் அகிலேஷ் யாதவ்வை 6 ஆண்டுகளுக்கு கட்சியிலிருந்து நீக்கி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக