110 வாட்ஸ் அப் குரூப்பிற்கு அட்மினாக உள்ள ஆசிரியர் ...கவனிக்கும் கல்வி அமைச்சர் .... - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

110 வாட்ஸ் அப் குரூப்பிற்கு அட்மினாக உள்ள ஆசிரியர் ...கவனிக்கும் கல்வி அமைச்சர் ....

வாட்ஸ்அப்பில் என்னவெல்லாம் செய்யலாம்? காலை எழுந்தவுடன் குட்மார்னிங், இரவு ஆனவுடன் குட்நைட் மெசேஜ் போட்டுக் ‘கடமை’யாற்றலாம். நமக்கு வந்த பழைய ஃபார்வர்ட் மெசேஜ்களையே நாமும் ஃபார்வர்ட் செய்து, படிப்பவர்களை டரியல் ஆக்கலாம். இன்னும் மீம்ஸ், அதிசயச் செய்திகள், அரசியல் கிண்டல்கள் என அத்தனையும் பகிரலாம். ‘வாட்ஸ்அப் என்பது வெறுமனே பொழுதுபோக்க மட்டுமல்ல; மற்றவர்களுக்கு உதவவும்கூட’ என்பதற்கு சென்னைப் பெருவெள்ளத்தின்போது நடந்த சேவைகளே சாட்சி.

‘வாட்ஸ்அப்’பை உருப்படியாகவும் பயன்படுத்த முடியும் என்பதற்கு இன்னுமொரு உதாரணம் விழுப்புரம் மாவட்டம் தியாகதுருக்கம் பக்கம் உள்ள உதயமாம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் கணித ஆசிரியர் முரளிதரன். அரசுப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியரான முரளிதரன் நூற்றுக்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் குரூப்பின் மூலம் முனைப்பும், ஆர்வமும் உள்ள  ஆசிரியர்களை இணைத்து அரசு பள்ளி ஆசிரியர்களிடையே புதிய கற்றலை அறிமுகப்படுத்தி வருகிறார் .

இவர் ஒன்றாம் வகுப்பில் இருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள ஒவ்வொரு பாடத்துக்கும் ஒரு வாட்ஸ்அப் குரூப்பையும், மாணவர்களுக்கு மருத்துவம் மற்றும் இதர நுழைவுத் தேர்வுகளுக்கு தயார் செய்யும் வகையில் போட்டித்தேர்வுகளுக்கு என்று இரண்டு வாட்ஸ்அப் குரூப்பையும், பள்ளி குழந்தைகளுக்கு நீதிக்கதைகளை சொல்லிக் கொடுக்க இரண்டு குரூப்கள், மாணவர்களின் கல்வி செயல்பாட்டுக்கு ஒரு குழு, முதல் உதவிக்கு மருத்துவத் தகவல்களைப் பகிர்ந்துகொள்ள ஒரு குழு, ஆசிரியர்களுக்கு மனமொத்த மாறுதலுக்கு எட்டு குழுக்கள், ஆசிரியர்களுக்கான அரசாணைகளைத் தெரிவிப்பதற்கு ஒரு குழு, பொதுவான தகவல்களைப் பதிவு செய்வதற்கு என்று பதிமூன்று குழுக்கள், ஒவ்வொரு மாவட்டத்துக்கு ஒரு குழு என்று மொத்தம் 110 வாட்ஸ்அப் குரூப்புகளை வைத்திருக்கிறார்.  இந்த குரூப்பில் தமிழக பள்ளி கல்வி அமைச்சர் மாபா பாண்டியராஜனும் இணைந்து ஆசிரியர்கள் என்னென்ன விஷயங்கள் விவாதித்து வருகிறார்கள் என்று சத்தம் இல்லாமல் கவனித்து வருகிறார் என்பது தான் சிறப்பு.

அமைச்சரைத் தவிர மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் உள்ள கல்வித் துறை அதிகாரிகளும் இவரது வாட்ஸ்அப் குரூப்பில் இருக்கிறார்கள்.

“தமிழ்நாட்டில் ஏதாவது பள்ளியில் ஒரு ஆசிரியர்  வித்தியாசமான முறையில் சொல்லிக் கொடுத்தாலும் அந்த விஷயம் அடுத்த நாளே தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளி் ஆசிரியர்களும் போய் விடுகிறது. இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் புதிய கற்பித்தல் முறையும், தொலைநுட்ப பயன்பாடும் அதிகரித்து வருகிறது

வாட்ஸ்அப் மூலம் ஆசிரியர்களை இணைத்து புதிய கற்றலுக்கு எப்படி உதவி வருகிறேன் என்பதை அமைச்சர் கலந்துகொண்ட கூட்டத்தில் கல்வித்துறை அதிகாரிகள் சொன்னார்கள். கற்றலுக்கு உதவும் இந்த முறை அமைச்சருக்குப் பிடித்துப் போய் ‘சமூக வலைத்தளங்களை இதுபோல் கல்விக்கு நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும்’ என்று பாராட்டி அடுத்த நாளே எங்களுடைய இரண்டு வாட்ஸ்அப் குழுவில் இணைத்துக்கொண்டார். இது எங்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியும் பொறுப்பையும் கூட்டியது. இவரைத் தவிர கல்வித் துறையில் உயர் அதிகாரிகள் பலரும் எங்களது குழுவில் இணைந்திருக்கிறார்கள் என்பது எங்கள் வாட்ஸ்அப் குழுக்களுக்குப் பலம்" என்கிறார் முரளிதரன்.

ஆசிரியர் வேலையை விட வாட்ஸ்அப் குரூப்பை நிர்வாகிக்கவே உங்களுக்கு நேரம் சரியாக இருக்குமே? எப்படி சமாளிக்கிறீர்கள்? 

“வகுப்பு நேரத்தில் வாட்ஸ்அப்பைப் பார்ப்பதே இல்லை. பாடம் நடத்தும் போது வாட்ஸ்அப் பார்த்துக்கொண்டிருக்கக்கூடாது என்பதற்காகவே காலை 9.30 மணி முதல்  மாலை 4.30 மணி வரை எந்தத் தகவலும் பகிர்ந்துக்கொள்ளக்கூடாது என்பதை முக்கிய விதிமுறைகளில் ஒன்றாக வைத்திருக்கிறோம்.

இதைப்போலவே, ஒவ்வொரு பாடத்துக்கு என்று உள்ள குரூப்பில் பாடம் சார்ந்த விஷயங்களை மட்டுமே விவாதிக்க வேண்டும் என்ற தெளிவான நிபந்தனைகளோடு இந்தக் குழுக்கள் செயல்படுகின்றன. ஆகையால் வகுப்பு நேரத்தில் வாட்ஸ்அப்-க்கு நோ சொல்லி விடுகிறோம்.

குரூப்பில் காலை வணக்கம், மாலை வணக்கம் போன்ற பதிவுகளுக்கு இடமில்லை. தங்களுடைய தனிப்பட்ட, பொதுக் கருத்துகளை எல்லாம் பதிவு செய்வதற்கு என்று தனித்தனியே வாட்ஸ்அப் குரூப்புகள் இருக்கின்றன. அதில் பதிவு செய்யலாம் என்று சொல்லி விடுகிறோம். இதனை எல்லாம் கடைப்பிடிக்காதவர்களைப் பட்டியலில் இருந்து உடனே வெளியேற்றி விடுகிறோம். புதியதாகக் குழுவில் இணைந்தவர்களை ஆரம்பத்தில் கட்டுப்படுத்த முடியாது.

ஆனால் அதன் பின்பு குழு இயங்கும் முறையையும் அதன் அடிப்படைக் கட்டுப்பாட்டையும் புரிந்துகொள்கிறார்கள். நானும் பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்தவுடன்வீட்டுக்கு வந்தவுடன் இரண்டு முதல் மூன்று மணி நேரம் ஒதுக்கி குரூப்பில் என்னென்ன தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள் என்பதைக் கவனித்து அதில் உள்ள தகவல்களை ஃபேஸ்புக்கிலும், இணையத்தளத்திலும் பகிர்ந்துக்கொள்கிறோம். இதன் மூலம் வாட்ஸ்அப் குரூப்புகள் வெற்றிகரமாக இயங்குகின்றன”.

இத்தனை குரூப்கள் மூலம் எதாவது சாதிக்க முடிகிறதா?

“இந்தக் குழுக்கள் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள ஆசிரியர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, கற்றல், கற்பித்தலில் புதிய உத்திகளையும் பாடப்பகுதிக்கான வினாத்தாள்கள், குறிப்புகள், விளக்கங்களையும் உடனுக்குடன் பகிர்ந்துகொள்கிறார்கள். இந்த குரூப்பில் பகிரப்பட்ட 1300 கணித ஃபார்முலாக்கள் அடக்கிய தகவல் இன்றைக்கு 90% அரசு பள்ளிக்கூடங்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்த வாட்ஸ்அப் தளத்தில் ஓர் ஆசிரியர் பயன்படுத்திய வித்தியாசமான அணுகுமுறைகளை அனைத்து ஆசிரியர்களும் கடைப்பிடித்துக் கற்றுக்கொடுப்பதை எளிமையாகச் செய்கிறார்கள். வாட்ஸ்அப்பில் நிறைய தகவல்கள் பகிர்ந்துகொள்வதால் ஆசிரியர்கள் வீட்டுக்குச் சென்ற பிறகும் கற்றல் கற்பித்தல் செயல் தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த குரூப்பின் மூலம் ஆசிரியர்களும் மாணவர்களும் பெருமளவில் பயனடைகிறார்கள்” என்கிறார். 

தொழில்நுட்பத்தை ஆக்கபூர்வமாக பயன்படுத்தி அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களது முன்னேற்றத்துக்கு உதவும் ஆசிரியரை வாழ்த்துவோம்.

தலைவணங்குவோம்.

தாய் மண்ணே வணக்கம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here