கற்றல் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு செயல்முறை தேர்வு அறிமுகம் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

கற்றல் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு செயல்முறை தேர்வு அறிமுகம்

பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, வாசித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படை கணக்குகளை போடுதல் உள்ளிட்ட செயல்பாடுகளில், பின்தங்கி இருக்கும் மாணவர்கள், கற்றல் குறைபாடுள்ளவர்களாக பிரிக்கப்படுகின்றனர்.

’டிஸ்லெக்ஷியா’ - வாசித்தல் குறைபாடு, ’டிஸ்கிராபியா’- எழுதுவதில் குறைபாடு, ’டிஸ்கால்குளியா’ - கணக்கு போடுதல் குறைபாடு, ’டிஸ்பிராக்சியா’, ’டிஸ்பேசியா’ என ஐந்து வகையாக, கற்றல் குறைபாடுகள் உள்ளன.

இவற்றில், வாசித்தல், எழுதுதல், மற்றும் கணக்கு போடுதல் தொடர்பான குறைபாடுகளே பெரும்பான்மையாக பள்ளி மாணவர்களுக்கு உள்ளது. இதனைக் கண்டறிந்து, அதற்கான பயிற்சி அளித்து, மாணவர்களை, மேம்படுத்தவே அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கற்றல் குறைபாடுள்ளவர்கள், மற்ற மாணவர்களை ஒப்பிடுகையில், ஓரளவு மட்டுமே கல்வியில் பின்தங்கி இருப்பவர்களாக துவக்கத்தில் காணப்படுவர். இதனை சரிசெய்யாமல் விடுவதால், அடுத்தடுத்த வகுப்புகளில், அவர்களின் கற்றல் திறன் மட்டுமின்றி சிந்திக்கும் திறனும் பாதிக்கப்படுகிறது.

கடந்த நான்காண்டுகளுக்கு முன்பு, இக்குறைபாடுகளுக்கு போதியளவு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. ’ஆல்பாஸ்’ முறையினால், இவ்வாறு கற்றலில் பின்தங்கும் மாணவர்கள் குறித்தும் பெரிதானதொரு விழிப்புணர்வு இல்லை. இதனால், பொதுத் தேர்வு வகுப்புகளில், மாணவர்களுக்கு அடிப்படை வாசித்தல் மற்றும் எழுதுதல் திறன் இல்லாமல், தேர்ச்சி விகிதம் சரிந்தது.

இக்குறைபாடுகளை துவக்கத்திலேயே கண்டறிந்து, அதற்கு முறையே பயிற்சி அளித்து, அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த, கல்வித்துறை பல்வேறு தேர்வுகளை, நடத்த துவங்கியது. மாணவர்களின், கல்வித்திறன் மட்டுமின்றி, பல்வேறு இணை செயல்பாடுகள் மூலம், அவர்களின் சிந்திக்கும் ஆற்றல் அளவிடப்படுகிறது. இந்த அளவுகளைக் கொண்டு, அம்மாணவர் கற்றல் குறைபாடுள்ளவரா என்பதை ஆசிரியர் பயிற்றுனர்கள் பதிவு செய்தனர்.

ஒருங்கிணைந்த கோவை, அனைவருக்கும் கல்வி இயக்கத்துக்குட்பட்ட, 22 வட்டாரங்களில் கடந்த 2014-15 கல்வியாண்டில் 40, 2015-16 ல் 39, நடப்பு கல்வியாண்டில், 43 குழந்தைகளும், கற்றலில் பின்தங்கியவர்களாக உள்ளனர்.

மாவட்ட திட்ட அலுவலர் ஒருவர் கூறுகையில், ”இதுவரை, ஆசிரியர் பயிற்றுனர்கள், மாணவர்களுக்கு அளித்த பயிற்சி அடிப்படையில், கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளை கண்டறிந்தனர்.

ஆனால், அதிகாரப்பூர்வமாக இதுவரை, கற்றல் குறைபாடுள்ள மாணவர்கள் பட்டியல் தயார்படுத்தப்படவில்லை. ஒரு மாணவர் நுாறு சதவீதம் கற்றல் குறைபாடுள்ளவரா என்பதை துல்லியமாக கண்டறிய, ’சிறப்பு செயல்திறன் பயிற்சியை, கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு சில மாவட்டங்களில் இதன்படி, குழந்தைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

நடப்பு கல்வியாண்டுக்குள் அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைக்கு வருமென கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதில், மாணவர்களுக்கு எழுத்து தேர்வு, செயல்திறன் என பல்வேறு தேர்வுகள் நடத்தப்படுகிறது, ” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here