டெல்லி: ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அவசர சட்டம் கொண்டுவந்துள்ள நிலையில் அதற்கு தடை கோருவது எப்படி என்பது குறித்து பீட்டா அமைப்பு நிர்வாகிகள் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
ஜல்லிக்கட்டு நடத்த ஏதுவாக தமிழக அரசு உருவாக்கியுள்ள அவசர சட்ட வரைவுக்கு, மத்திய சட்டம், கலாசாரம், வனத்துறை அமைச்சகங்கள் ஒப்புதல் வழங்கி குடியரசு தலைவருக்கு அனுப்பியுள்ளன.
குடியரசு தலைவர் நாளேயே சட்டத்திற்கு ஒப்புதல் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், பீட்டா அமைப்பின் இந்திய பிரிவு தலைவர் பூர்வா ஜோஷிபூரா, அளித்த பேட்டியில் 'ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கொண்டு வரும் அவசர சட்டம் குறித்து நாங்கள், எங்களது வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். சட்ட ரீதியாக உள்ள அனைத்து வழிகளும் ஆலோசனை செய்யப்படுகிறது.
விலங்குகளை காப்பாற்ற வேண்டியது பீட்டா அமைப்பின் கடமை. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பீட்டா பலிகடா ஆக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு தொடர்பாக அரசும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் நீதி நிலைநாட்டப்படும். இந்திய சட்டப்படி ஜல்லிக்கட்டு என்பதே சட்ட விரோதம். இதுபற்றி தமிழர்களுக்கு தெரியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
குடியரசு தலைவர் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கினால் உடனேயே ஜல்லிக்கட்டை நடத்த தமிழக அரசு உரிய ஆயத்தப் பணிகள் செய்துள்ளது. எனவே சட்டத்திற்கு விரைந்து தடை பெற்றுவிட என்ன செய்யலாம் என பீட்டா ஆலோசித்து வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக