ஆளுநர் உடனடியாக முடிவு எடுக்க தொல். திருமாவளவன் கோரிக்கை - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

ஆளுநர் உடனடியாக முடிவு எடுக்க தொல். திருமாவளவன் கோரிக்கை

*அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு ஆளுநர் உடனடியாக முடிவெடுக்கவேண்டும்*
*தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்*
~~~~~
தமிழ்நாட்டில் பெரும்பான்மை ஆதரவுபெற்ற நிலையான ஆட்சியை அமைப்பதற்கு தமிழக பொறுப்பு ஆளுநர் அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கின் விசாரணை இன்னும் சில நாட்களில் உச்சநீதிமன்றத்தில் துவங்கவுள்ளது. அதில் தமிழகத்தின் நியாயத்தை முன்வைத்து வாதாடவேண்டும்; ’நீட்’ நுழைவுத் தேர்வு தொடர்பாகத் தமிழக அரசு நிறைவேற்றியுள்ள சட்டங்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்படவில்லையென்றால் இலட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்; வறட்சியின் காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது தொடர்கதையாக இருக்கிறது. அவர்களுக்கான வறட்சி நிவாரணம் உடனடியாக வழங்கப்படவேண்டும். இந்தக் கடமைகளையெல்லாம் சிறப்பாகச் செய்வதற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையானதொரு அரசாங்கம் தமிழ்நாட்டில் இல்லையென்றால் மாபெரும் இழப்பைத் தமிழகம் சந்திக்க நேரிடும். இது ஆளுநருக்குத் தெரியாததல்ல. எனவே அவர் தமிழ்நாட்டில் பெரும்பான்மை ஆதரவின் அடிப்படையில் நிலையான ஆட்சி அமைவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். முதலமைச்சராகவோ அமைச்சராகவோ பதவி ஏற்பதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் என்ன வழிகாட்டுதல் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதைப் பின்பற்றுவதுதான் ஆளுநரின் கடமை. அதற்கு மாறாக, தாமதம் செய்வது தேவையற்ற குதிரை பேரங்களுக்கு இடமளிப்பதாக அமைந்துவிடும். அப்படியான பேரங்களுக்கு ஊக்கமளிப்பதும், அரசியல் குழப்பநிலையை ஏற்படுத்துவதும் பாராளுமன்ற ஜனநாயகத்தைப் படுகொலைசெய்வதற்கு ஒப்பாகிவிடும் என்பதையும் ஆளுநரின் மேலான கவனத்துக்கு சுட்டிக்காட்டுகிறோம்.

இவண்
தொல்.திருமாவளவன்,
தலைவர், விசிக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here