19 ம் நூற்றாண்டில் வாழ்ந்த கார்ல் மார்க்ஸ், தனது நண்பர் பிரெடெரிக் எங்கெல்ஸ் உடன் சேர்ந்து, உலகத்தையும், மனித சமூகத்தையும் ஆய்வு செய்து எழுதிய கோட்பாடுகள் மார்க்சியம் என்று அழைக்கப் படுகின்றன. மனித இனமானது மாற்றங்களை கண்டு வருவதையும், அந்த மாற்றங்கள் சில விதிகளுக்கு ஏற்றவாறு நடப்பதையும் கண்டறிந்தனர்.
சமூக விஞ்ஞான பாரவையுடன் மானிடவியல், மதங்கள், வரலாறு ஆகிய அனைத்தையும் ஆய்வுக்கு உட்படுத்தினார்கள். இதன் காரணமாக மார்க்சியமும் ஒரு விஞ்ஞானம் ஆகும். அது ஒரு சித்தாந்தம் அல்ல. அதாவது முடிந்த முடிவு அல்ல.
விஞ்ஞானம் என்பது முழுமை பெறாத கோட்பாடுகளை கொண்டது. அதே மாதிரி மார்க்சியமும் முழுமை பெற்றதாக கருதப் பட முடியாதது. பிற்காலத்தில் வந்த அறிஞர்கள் தமது அனுபவங்களையும், ஆய்வுகளையும் சேர்த்துக் கொண்டனர். உதாரணத்திற்கு, லெனின், மாவோ ஆகியோர், மார்க்ஸ் சொல்லியிராத பல விடயங்களையும் இணைத்துக் கொண்டனர்.
மார்க்ஸ் தான் வாழ்ந்த காலத்தில் ஆதிக்கம் செலுத்திய, முதலாளித்துவத்தை பற்றி தீவிரமாக ஆய்வு செய்திருந்தார். இலாபம், கூலி போன்ற பல விடயங்களை வெறுமனே பொருளியல் ரீதியாக பார்க்காமல், அதில் வரலாறு, சமுதாயம் என்பன ஏற்படுத்திய தாக்கம் என்ன என்பதை ஆராய்ந்தார்.தமிழ் இணைய செய்திகள். அதன் விளைவாக தொழில் வழங்குனர்களும், தொழிலாளர்களும் பற்றிய தெளிவு கிடைத்தது.
மார்க்சியம் என்பது எந்த வித அங்கீகாரத்தையும், மதம் போன்றதொரு நம்பிக்கையையும் கோரவில்லை. அது உண்மைகளை நிறுவுவதை அடிப்படையாகக் கொண்ட விஞ்ஞானம் ஆகும். இன்றைக்கும் மனித இனத்தை பாதிக்கும் தீங்குகள், அவலங்களில் இருந்து மனிதர்களை விடுவித்து, சமுதாயத்தின் நாகரிக வளர்ச்சிக்கு இட்டுச் செல்வதை நோக்கமாகக் கொண்டது.
மன்னராட்சிக்கு எதிரான முதலாளிய வர்க்கத்தின் எழுச்சி
உலக வரலாறு முழுவதும் யுத்தங்கள் நடந்துள்ளன.http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com அவற்றைப் பற்றிப் பாடிய புலவர்கள், மன்னர்களின் மகிமையையும், தளபதிகளின் வீரத்தையும் புகழ்ந்து எழுதியுள்ளனர். இவ்வாறான வரலாற்றுப் பார்வை குறித்து மார்க்சியம் திருப்திப் படவில்லை.
மார்க்சியம் மக்களின் கோணத்தில் இருந்து வரலாற்றைப் பார்க்கிறது. உண்மையான வரலாறு தனி நபர்களை விட்டு, மக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். புலவர்களால் புகழ்ந்து பாடப்பட்ட மன்னர்கள் போன்ற தனிநபர்களும், ஏதோ ஒரு வகையில் மக்களின் அபிலாஷைகளை பிரதிபலித்துள்ளனர்.
ஆகையினால், மார்க்சியமானது மனித வரலாறு நெடுகிலும் காணப்படும் இயற்கையின் விதிகளை ஆராய்கின்றது. இந்த நோக்கிற்காக அது தனிநபர்களை தவிர்த்து மக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. அந்த வகையில் மக்களின் குறிப்பிட்ட பிரிவினர் வரலாற்றின் உந்துசக்தியாக இருந்ததை கண்டறிகின்றது. அத்தகைய மக்கட் பிரிவுகள் வர்க்கங்கள் என்று அழைக்கப் படுகின்றன.
வர்க்கம் என்றால் என்ன? ஒரே மாதிரியான வாழ்க்கைத்தரம் கொண்ட மக்கட் குழுவினர் என்பது சாமானியர்களின் புரிதல். நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில், ஒரு நாட்டின் நிலம் முழுவதும் மன்னர் அல்லது நிலப்பிரபுக்களுக்கு சொந்தமாக இருந்தது. அந்த நிலங்களை உழுது பயிரிட்ட பண்ணையடிமைகள் செலுத்திய கப்பத்தில் வாழ்ந்து வந்தனர்.http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
மேலதிக வளங்கள், செல்வத்தை பெருக்கிக் கொள்ளும் நோக்கில் மன்னர்கள் பிற நாடுகள் மீது படையெடுத்து நிலங்களை விஸ்தரித்தார்கள். அதே நேரம் நிலங்களில் வேலை செய்த பண்ணையடிமைகள், விளைச்சலில் திறை செலுத்துவது போக, தமக்கான பங்கை அதிகரிப்பது பற்றிக் கவலைப் பட்டனர். இத்தகைய சமுதாயத்தில், நிலப்பிரபுக்கள் (மன்னர் உட்பட) ஒரு வர்க்கமாகவும், பண்ணையடிமைகள் இன்னொரு வர்க்கமாகவும் காணப்பட்டனர். அவர்களது நலன் சார்ந்து வர்க்க முரண்பாடும் வளர்ந்து வந்தது.
நிலப்பிரபுக்களுக்கும், பண்ணையடிமைகளுக்கும் இடையிலான முரண்பாடுகள் சிலநேரம் மோதல்களாக வெடித்துள்ளன. தனிநபர்கள் மட்டுமல்ல, குழுக்களாகவும் கலகம் செய்தனர். தமது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக, பெருமளவில் நடந்த பண்ணையடிமைகளின் எழுச்சிகள் வரலாற்றில் பதிவாகியுள்ளன. உதாரணத்திற்கு, இங்கிலாந்தில், 1381 ம் ஆண்டு, Jon Ball, Wat Tyler ஆகிய இருவரின் தலைமையில் ஒரு கிளர்ச்சி நடந்தது. இது பற்றி H. Fagan எழுதிய Nine Days that Shook England எனும் நூலில் வாசிக்கலாம்.
நிலவுடைமையாளர்களின் நிலங்களில் வேலை செய்தவர்களில் தொழில்நுட்ப அறிவு பெற்ற கைவினைஞர்களும் இருந்தனர். அதே நேரம் வியாபாரத்தில் ஈடுபட்டோரும் இருந்தனர். தூர தேசத்திற்கு சென்று பொருட்களை விற்று வந்த வியாபாரிகளுக்கு, பண்ணையடிமைகள் மேலதிகமாக உற்பத்தி செய்யும் விளைபொருட்கள் அதிகமாக தேவைப்பட்டன. அந்த வகையில் சந்தையில் விற்பதை நோக்கமாகக் கொண்ட தொழில் பட்டறைகள் தொடங்கப் பட்டன.
சிற்பக் கலைஞர்கள், தச்சர்கள், கொல்லர்கள் போன்ற தொழிற்துறை நிபுணர்கள் பலர், ஏற்கனவே விடுதலைப் பத்திரம் வாங்கிக் கொண்ட பண்ணையடிமைகள் ஆவர். காலவோட்டத்தில் நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்பினுள் சுதந்திரமாக இயங்கிய கைவினைஞர்களின் எண்ணிக்கை பெருகியது.
மத்திய கால இங்கிலாந்தில் "ஜெர்னிமன்"
(Journeyman) என்ற பிரிவினர் இருந்தனர். அவர்கள் நாள் சம்பளத்திற்கு வேலை செய்யும் தொழில் பயிலுனர்கள். உண்மையில் அது Journee என்ற பிரெஞ்சு சொல்லின் திரிபடைந்த ஆங்கில வடிவம்.
ஜெர்னிமன் என்பதை தமிழில் நாட்கூலிகள் என்று சொல்லலாம். ஜெர்னிமன் கைவினைஞர்களில் பாண்டித்தியம் பெற்ற திறமைசாலிகள் தொழில் வழங்குனர்கள் ஆனார்கள். அவர்களுக்கு கீழே இருந்த தொழில் பெறுநர்கள் சம்பளத்திற்கு வேலை செய்தனர்.
இவ்வாறு தான் நவீன கால முதலாளி, தொழிலாளிகளின் முன்னோடிகள் உருவானார்கள். 16 ம் நூற்றாண்டுக்குப் பிறகு உருவான தொழிற்துறை முதலாளிகளின் வர்க்கமானது, தம்முடன் நிழல் போல தொடர்ந்த உழைக்கும் வர்க்கத்தையும் கொண்டிருந்தது.
நகரங்களில் மட்டுமல்லாது, கிராமங்களிலும் உருவான முதலாளிய வர்க்கமானது, வந்தவுடனே மன்னராட்சியை ஒழித்து விடவில்லை. அதற்கு மாறாக, மன்னர்களின் ஆளுகையின் கீழ் முதலாளித்துவம் மன்னர்களுக்கு சேவை செய்யும் தொழிற்துறையாக இயங்கியது.
விடுதலைப் பத்திரம் வாங்கிய பண்ணையடிமைகளின் வம்சாவழியினர் கைவினைஞர்களாகி பணக்காரர்களாக மாறியிருந்தனர். இருப்பினும் தாங்கள் உண்மையிலேயே சுதந்திரமானவர்கள் அல்ல என்பதை உணர்ந்து கொண்டனர். அவர்களது வர்த்தக முயற்சிகளுக்கு பல்வேறு தடைகள் போடப் பட்டிருந்தன. http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com வர்த்தகத்தை விரும்பிய வடிவில் வளர்க்க முடியவில்லை. மேலும் அவர்கள் மீது பல வகையான வரிகள் சுமத்தப் பட்டன.
நாடு முழுவதும் மன்னரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த படியால், அவர் சொன்னதே சட்டமாக இருந்தது. இராணுவம், நீதிபதிகள், சிறைச்சாலைகள் எல்லாம் மன்னரின் கீழ் இயங்கின. ஆதி கால முதலாளிய வர்க்கம், நிலப்பிரபுத்துவ வர்க்கத்திற்கு எதிராக போராட வேண்டியிருந்தது. இந்தப் போராட்டமானது பல நூறாண்டுகளாக தொடர்ந்தது.
பிரித்தானியாவில் இருந்த முதலாளிய வர்க்கம் ஆயுதமேந்திய புரட்சி மூலம் மன்னராட்சியை தூக்கியெறிந்தது. 17 ம் நூற்றாண்டில் குரொம்வெல் தலைமையில் அந்தப் புரட்சி நடந்தது.
குரொம்வெல் ஒரு கிறிஸ்தவ மத அடிப்படைவாதியாக இருந்த படியால், அன்று நடந்த போரானது புரட்டஸ்தாந்து பிரிவினரின் எழுச்சியாக வரலாற்றில் பதிவு செய்யப் பட்டது. கத்தோலிக்க மன்னருக்கு எதிராக புரட்டஸ்தாந்து படையினர் தொடுத்த போராக குறிப்பிடப் படுகின்றது.
இருப்பினும், அன்றைய பிரித்தானியாவில் முதலாளிய வர்க்கம் கடும் வரிச் சுமைகளால் பாதிக்கப் பட்டிருந்தது. 17ம் நூற்றாண்டில் சுமத்தப்பட்ட வரிகளின் அளவு பல மடங்கு அதிகரித்திருந்தது. வர்த்தகம் விரிவடைய முடியாதவாறு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டன. இந்தக் கட்டுப்பாடுகளை நீக்குமாறு முதலாளிகள் அரசனிடம் தயவாக கேட்டுக் கொண்டனர். மனுக்களை அனுப்பினார்கள். வரி கட்ட மாட்டோம் என்று மிரட்டினார்கள்.
முதலாளிகளின் கோரிக்கைகள் யாவும் மன்னரால் உதாசீனம் செய்யப்பட்டன. பலமான அரசு இயந்திரத்தை எதிர்த்து சமாதானமாக போராட முடியாது என்பதை அறிந்து கொண்டு, மக்களை அணிதிரட்டி ஆயுதமேந்திய புரட்சியை நடத்தினார்கள்.
கண்மூடித்தனமான வரிகள் மக்களையும் கிளர்ந்தெழச் செய்திருந்தன. அன்று நடந்த ஆயுதமேந்திய புரட்சியின் பின்னர் தான், முதலாளிய வர்க்கம் ஆட்சியுரிமையை கைப்பற்றியது. அதன் பிரகாரம் தனது நலன்களுக்கேற்ற சட்டங்களை பிறப்பித்தது.
பிரித்தானியாவில், மீண்டும் மன்னராட்சி ஏற்பட்டு புரட்சியாளர்கள் சிறைப்பிடிக்கப் பட்டிருந்தனர். இருப்பினும், அந்த நாட்டில் 1689 ம் ஆண்டு நடந்த புரட்சியின் பின்னர் முதலாளிய வர்க்கம் ஆட்சியதிகாரத்தில் பங்கெடுத்துக் கொண்டது.
பிரான்ஸ் நாட்டில், நூறு வருடங்களுக்குப் பின்னர், அதாவது 1789 ம் ஆண்டில் தான் முதலாளிய வர்க்கம் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றியது. இந்தப் புரட்சிகளின் விளைவாக பழைய நிலப்பிரபுத்துவ சமூகக் கட்டுமானம் பெருமளவில் அழித்தொழிக்கப் பட்டது. இருப்பினும் புரட்சியில் தப்பிப் பிழைத்த நிலப்பிரபுக்கள், முதலாளித்துவ நிலவுடைமையாளர்களாக மாற்றமடைந்தனர்.
பொருளியல் சார்ந்த உறவுமுறை மனிதர்களின் கருத்துக்களை தீர்மானிக்கிறது
வர்க்கங்களுக்கு இடையிலான போராட்டமே மனித குலத்தின் நாகரிக வளர்ச்சிக்கு உந்துசக்தியாக உள்ளது என்பது வரலாறு பற்றிய மார்க்சிய அணுகுமுறை. விஞ்ஞானத்தின் வளர்ச்சியுடன் வர்க்கப் போராட்டம் சமாந்தரமாக சென்று கொண்டிருக்கும். வாழ்க்கைக்கு அவசியமானவற்றை உற்பத்தி செய்யும் மனிதனின் வல்லமையும், இயற்கையின் மீதான் ஆளுமையும் கூடவே இருக்கும்.
அது மட்டுமல்லாது, மிகப் பெரும் சக்தி படைத்த இயந்திரங்களின் உருவாக்கம், அதனுடன் போட்டியிட முடியாத சிறுதொழில் துறையையும் அழித்து விடும். உதாரணத்திற்கு, பெருமளவில் துணிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், நெசவுத் தறிப் பட்டறைகளை இல்லாதொழித்து விட்டன. இதனால் சிறு கைத்தொழில் முனைவோர் இருந்த இடத்தில், இரண்டு பெரும் சமூகப் பிரிவுகள் தோன்றின. இயந்திரங்களின் உரிமையாளர்கான முதலாளிகள், அவர்களுக்காக சம்பளத்திற்கு வேலை செய்யும் தொழிலாளிகள் ஆகியோரே அந்தப் பிரிவுகள்.
இந்த மாற்றமானது எவராலும் திட்டமிடப் படாமல் நடந்துள்ளது. ஒரு சிலரது அறிவு அவர்களது நலன் சார்ந்த உற்பத்திக்கு பயன்படுத்தப் பட்டதால் உண்டான நேரடி விளைவு. சமூகத்திற்கு அதனால் ஏற்படப் போகும் பாதிப்புகள் பற்றி அவர்கள் உணர்ந்திருக்கவில்லை.
சித்தாந்தங்களும், அவற்றை முன்னெடுக்கும் நிறுவனங்களும் எவ்வாறு உருவாகின்றன? ஆதி கால இனக்குழு முறை, முன்னைய நிலப்பிரபுத்துவ முறை, நவீன கால முதலாளித்துவ அமைப்பு எதுவாக இருந்தாலும், சமுதாயத்தின் உறுப்பினர்கள் அனைவரும் பொருள் உற்பத்தியில் தங்கியுள்ளனர்.
சமூக நிறுவனங்கள், சட்டங்கள், ஒழுங்கு விதிகள், பழக்க வழக்கங்கள் எல்லாம் உற்பத்தி சார்ந்தே உருவாகின்றன. ஆகையினால், பொருள் உற்பத்தி மாற்றமடையும் பொழுது, சமூக மாற்றங்களும் உண்டாகின்றன. உதாரணத்திற்கு, நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் இருந்து முதலாளித்துவத்திற்கு மாறியதும், சமூக நிறுவனங்கள், சமூகப் பழக்க வழக்கங்களும் மாறின. ஒரு காலகட்டத்தில் ஒழுக்கமாக கருதப் படுவது, இன்னொரு காலகட்டத்தில் ஒழுக்க சீர்கேடாக கருதப் படலாம்.
முதலாளித்துவ பொருள் உற்பத்தி முன்னுக்கு வருவதற்காக, நிலப்பிரபுத்துவத்துடன் முரண்பட்டு மோதிக் கொண்டது. அதன் விளைவாக கடவுளின் பெயரால் கோரப் பட்ட உரிமைகளை ஏற்றுக் கொள்ளவில்லை. பிரதிநிதித்துவம் இல்லாமல் வரி கட்டுவதில்லை என்ற முடிவு. சுதந்திரமாக வர்த்தகம் செய்வதற்கான உரிமை. இது போன்று பல மாற்றங்கள், நிலப்பிரபுத்துவம், முதலளைத்துவம் இரண்டுக்கும் இடையில் நடந்த போராட்டத்தின் விளைவாக ஏற்பட்டன.
நடைமுறையில் உள்ள கருத்து, கொள்கை, கோட்பாடு எல்லாம், குறிப்பிட்ட ஒரு இடத்தில், குறிப்பிட்ட ஒரு நேரத்தில் தோன்றிய நிறுவனங்களின் பிரதிபலிப்புகள் தான். அவை எப்போதும், எந்தக் காலத்திற்கும் பொருந்துவதும் இல்லை. அதாவது, "இன்று எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப் பட்ட கருத்து" என்பது, உலகம் முழுவதும் எல்லாக் காலத்திலும் இருந்ததில்லை.
உதாரணத்திற்கு, பண்டைய கிரேக்க நாகரிகத்தில், ஜனநாயக அமைப்பு, மனிதர்களுக்கு சம உரிமை போன்ற விடயங்கள் இருந்தன என்று சொல்வார்கள். ஆனால், பண்டைய கிரேக்க நாடுகளில், அந்த "சம உரிமை", "ஜனநாயகம்" என்பன அடிமைகளுக்கு இருக்கவில்லை.
அதே மாதிரி, "சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்" போதித்த பிரெஞ்சுப் புரட்சி பற்றியும் பலர் புகழ்வதுண்டு. ஆனால், உண்மை நிலைமையோ வேறு. முதலாளித்துவ வர்க்கத்திற்கு சுதந்திரம் கொடுப்பது பற்றியே பிரெஞ்சுப் புரட்சி பேசியது. பிரெஞ்சுக் காலனிகளில் வாழ்ந்த (கறுப்பின) அடிமைகளுக்கு சுதந்திரம், சமத்துவம் எதுவும் கிடைக்கவில்லை. அதே போன்று, அடித்தட்டு பிரெஞ்சு மக்களும் புறக்கணிக்கப் பட்டனர்.
ஆகையினால், பெரும்பாலான சமூகம் சார்ந்த கருத்துக்கள் யாவும் வர்க்கக் கருத்துக்கள் என்று நாம் சொல்ல முடியும். சமுதாயத்தில் ஆதிக்கம் செலுத்தும் வர்க்கமானது, தன்னிடமுள்ள பிரச்சார இயந்திரங்கள் மூலம் மக்கள் மீது திணிக்கப் படுகின்றன. அது கல்வி மீதும் ஆதிக்கம் செலுத்துகின்றது. எதிர்க் கருத்துக்களை அடக்குவதற்காக நீதிமன்று போன்ற நிறுவனங்களையும் கொண்டிருக்கிறது.
அதன் அர்த்தம், அந்தக் கருத்துக்கள் எல்லாம் மாயைகள் என்பதல்ல. நிஜ வாழ்வில் இருந்து தான் கருத்துக்கள் உருவாகின்றன. ஒரு மன்னர் அல்லது தொழிற்துறை முதலாளி, தங்களை உயர்வாக காட்டிக் கொள்வதற்கு ஏற்ற பொருளாதார வளங்களை உருவாக்கிக் கொள்கிறார்கள்.
ஒருவர் "மேன்மை பொருந்தியவர்" என்று கூறும் பொழுது, அதை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆதிக்க வர்க்கம் எதிர்பார்க்கிறது. அதை ஏற்றுக் கொள்ள மறுப்பவர்கள் அதிகாரத்தை மீறியவர்களாக கருதப் படுவர். ஆதிக்க வர்க்கமானது, "அபாயகரமான சிந்தனைகளை" தடுப்பதற்கு முயற்சி செய்யும்.
இங்கே ஒரு கேள்வி எழலாம். பொருளியல் உற்பத்தியால் ஏற்படும் மாற்றங்கள் முதன்மையானவை. கருத்துக்கள் இரண்டாம்பட்சமானவை என்றால், அபாயகரமான சிந்தனைகள் எவ்வாறு தோன்ற முடியும்? இதற்கான பதிலானது, ஒரு குறிப்பிட்ட பொருளியல் உற்பத்தி நடைமுறைக்கு வந்த பின்னர், அது தொடர்பான கருத்துக்களும் தோன்றிக் கொண்டிருக்கும்.
உதாரணத்திற்கு, கூலி உழைப்பாளிகளால் வளர்ந்து வந்த தொழிற்துறை, மேலதிக இலாபத்திற்காக பெருமளவு விளை பொருட்களை விற்க வேண்டியிருந்ததால், நிலப்பிரபுத்துவத்துடன் மோதல் ஏற்பட்டது. அதனால், கட்டுப்பாடுகளை மீறும் சுதந்திரம், வரியை ஸ்திரப் படுத்தல் போன்ற கருத்துக்களும் தோன்றின. அந்தக் காலத்தில் முதலாளித்துவ சமுதாயம் தோன்றியிருக்கவில்லை. ஆனால், அதற்கான சூழ்நிலை எழுந்தது. அதிலிருந்து முதலாளித்துவ கருத்துக்கள் தோன்றின.
இதே விதிகள் சோஷலிசத்திற்கும் பொருந்தும். முதலாளித்துவம் பெருமளவில் பொருட்களை உற்பத்தி செய்து குவிக்கும். அளவுக்கு மிஞ்சிய உற்பத்தி காரணமாக தேக்கம் ஏற்பட்டு பொருளாதார நெருக்கடிகள் உண்டாகும். அப்போது முதலாளித்துவம் சமூக வளர்ச்சியை தடுத்து நிற்கும். அதற்கான சூழ்நிலைகள் சோஷலிசத்திற்கான நிபந்தனைகளை தோற்றுவிக்கும். அப்போது, சோஷலிச கருத்துக்களும் மக்களை பற்றிக் கொள்ளும்.
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
Post Top Ad
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Subscribe Here
Author Details
One of the most popular education website in tamilNadu. Get Latest Padsalai, Kalvi seithi, kalvi news, tamilnadu education news kalvimalar kalvisolai and updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக