இரட்டை இலை முடக்கம் பின்புலத்தில் நடந்தது என்ன? - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

இரட்டை இலை முடக்கம் பின்புலத்தில் நடந்தது என்ன?


இரட்டை இலை சின்னம் யாருக்கு?’ என்று டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தலைமையில், நடந்த பேச்சுவார்த்தையில் இரட்டை இலை சின்னம் பன்னீர்செல்வம் தரப்புக்கும், சசிகலா தரப்புக்கும் கிடையாது. இப்போதைக்குச் சின்னம் முடக்கப்படுவதாகவும், தேர்தலில் அதிமுக என்ற பெயரை யாரும் பயன்படுத்தக்கூடாது என்றும் தேர்தல் ஆணையம் தற்காலிக உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் அனுப்பிய ஒன்பது பக்க உத்தரவில் '20 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணத்தை இரு தரப்பினரும் தேர்தல் ஆணையத்தில் அளித்திருக்கிறார்கள். குறுகிய கால கட்டத்தில் அந்த ஆவணங்களைப் படித்துப் பார்க்க முடியாது. ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இந்த ஆவணங்களைப் படித்துப் பார்க்க நேரமில்லாத நிலையில் தேர்தல் ஆணையம் இருக்கிறது. 
அதனால், சின்னம் குறித்து ஒரு முடிவை எடுக்கும்வரை இரட்டை இலையை முடக்கி வைப்பதென முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு இரு அணியினரும் அதிமுக என்ற பெயரை பயன்படுத்தக்கூடாது. தேர்தல் ஆணையம் ஒதுக்கும் சுயேட்சை சின்னங்களில், ஏதாவது ஒன்றை இருவரும் தேர்வுசெய்து ஆர்.கே.நகரில் போட்டியிடலாம் என்று நஜீம் ஜைதி, ஓ.பி.ராவத், ஏ.கே.ஜோதி ஆகிய மூன்று அதிகாரிகளும் கையெழுத்திட்டு உத்தரவு போட்டுள்ளார்கள். மேலும் இதுகுறித்து உங்களது கருத்துகளை மார்ச் 23, காலை 10 மணிக்குள் தெரிவிக்க வேண்டுமென தெரிவித்தவர்கள், மேற்கொண்டு அதிமுக-வுக்கு உரிமைகோரும் நீங்கள் இருவரும் உங்களிடம் இருக்கும் ஆவணங்களை ஏப்ரல் 17ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென உத்தரவு போடப்படுகிறது’ என்று முடிகிறது தேர்தல் ஆணையத்தின் உத்தரவு.
இதுகுறித்து நம்மிடம் பேசிய டெல்லி அதிகாரி ஒருவர் 'இந்த முடிவில் ஊடகவிலயாளர்கள் உள்பட, அனைவரும் தேர்தல் ஆணையத்தைச் சந்தேகப்படுகிறார்கள். உண்மையில் தேர்தல் ஆணையத்தில், சட்டப்படி என்ன இருக்கிறதோ அதையே செய்திருக்கிறார்கள். தேர்தல் ஆணையம் என்பது ஒரு தனி அமைப்பு. இங்கு யாருடைய பேச்சும் செல்லாது. இந்த விஷயத்தில் அவசரப்பட்டு ஒரு முடிவை எடுக்காமல் சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதையே எடுத்திருக்கிறார்கள். ஏனெனில் இது சாதாரணப் பிரச்னை இல்லை. நாளை உச்சநீதிமன்றம் சென்றால் விவகாரம் வேறு மாதிரி வெடிக்கும். அதனால் என்ன இருக்கிறதோ அதையே செய்தார்கள்' என்றார் .
இந்த ஆர்டர் வெளியாவதற்கு ஒரு மணி நேரம் முன்பு கிரீன்வேஸ் சாலையில் உள்ள தென்பன்னை இல்லத்தில் பன்னீர்செல்வம், முனுசாமி, செம்மலை, நத்தம் விஸ்வநாதன், மாஃபா பாண்டியராஜன் உள்பட முக்கிய நிர்வாகிகள்,எம்.எல்.ஏ-க்கள் என அனைவரும் சந்தித்து ஆலோசனை செய்திருக்கிறார்கள். ‘சின்னம் நமக்கு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. தினகரனுக்கு கிடைக்காமல் போனது மகிழ்ச்சியே. அவர்களது கையில் சின்னம் மட்டும் கிடைத்திருந்தால் நாளை நம்மில் சிலர் மீது தினகரன் நடவடிக்கை எடுக்க காத்திருந்தார். அதிலிருந்தும் தப்பித்தோம். கட்சியும் தப்பித்தது’ என்று பேசியிருக்கிறார்கள்.
பன்னீர்செல்வமோ, ‘ஆர்.கே.நகரில் ஒவ்வொரு வீடாக செல்வோம். நம் தரப்பு உண்மைகளை சொல்வோம். கட்சியையும், சின்னத்தையும் முடக்கியது அவர்களால்தான் என்பதையும், அம்மாவின் ஆன்மாதான் அவர்களை பலி வாங்கியிருக்கிறது என்பதை ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் சொல்வோம். இறுதி முடிவை அவர்களே எடுக்கட்டும். சின்னத்தையும், கட்சியையும் மீட்க நாம் சட்டப்படி நீதிமன்றம் செல்வோம்’ என்று பேசியிருக்கிறார். இதற்கு பன்னீரின் ஆதரவு எம்.எல்.ஏ-க்களின் தரப்பில் பலத்த வரவேற்பு இருந்திருக்கிறது.
இங்கு நடந்ததற்கு மாறாக பன்னீரின் எதிரணியான சசிகலா அணியில், செய்தி கேள்விப்பட்டு தினகரன் பயங்கர அப்செட்டில் இருந்திருக்கிறார். இரவு எட்டு மணி வரை தினகரனுக்கு டெல்லியிலிருந்து சின்னம் நமக்குத்தான் என்று பல்வேறு தரப்புகளில் இருந்து செய்தி வந்திருக்கிறது. இன்றுதான் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கினால் அதையே பன்னீரின் தரப்பில் பெரியதாக ஊடகங்களில் பரப்புவார்கள். அதையே முன்வைத்து கட்சியை கலைக்கவும் செய்வார்கள் என்று தளவாய் சுந்தரத்திடம் பேசியிருக்கிறார். அதன் பிறகே தேர்தலில் போட்டியிடுவது உறுதி. ஒருபோதும் நான் பின் வாங்க மாட்டேன். நாளை காலை 11 மணிக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்யப் போகிறேன்' என்று ஊடகங்களில் உறுதியாக சொல்லியிருக்கிறார்.
இதன்பிறகு டெல்லியில் இருந்து காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் தினகரன் தரப்பில் பேசியிருக்கிறார். 'கடந்த ஒரு வாரத்துக்கு முன்பே ஆளும் தரப்பு, இலையை முடக்கப் போகிறது என்று உங்களிடம் சொன்னேன். நீங்களும் இலையை மீட்க அனைத்து முயற்சிகளும் எடுத்தீர்கள். சில வாக்குறுதிகளும் கொடுத்தீர்கள். அந்த வாக்குறுதிகளுக்கு டெல்லி மேலிடம் இசைந்து வருவதாக தகவல்கள் வந்தன. நீங்கள் பேசியவரிடம், முடிவுகள் எடுக்கும் நபர் ஒரு சில விஷயங்களை கறாராக சொல்லியிருக்கிறார். தமிழகத்தில் அவர்களது ஆட்சியை கொண்டுவர இந்தச் சூழலைவிட்டால் வேறு வாய்ப்பு கிடைக்காது. மத்தியில் பவர் இருக்கும்போதே தமிழகத்தில் நாம் ஆட்சியைப் பிடிக்காவிட்டாலும், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாகவாவது மாற வேண்டும் என்று அவர்களது தரப்பில் நினைக்கிறார்கள். அதனால், இந்த வாய்ப்பை அவர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். கவலைப்பட வேண்டாம் நீதிமன்றம் சென்று பார்த்துக் கொள்ளலாம்' என்று பேசியிருக்கிறார் அந்த நபர்.
28 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் இரட்டை இலையை தேர்தல் ஆணையம் முடக்கியிருக்கிறது. எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு , 1989-ல் அதிமுக இரண்டாக பிரிந்து, எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி தலைமையில் ஓர் அணியும், ஜெயலலிதா தலைமையில் ஓர் அணியும் கட்சியின் சின்னமில்லாமல் சுயேட்சையாக மோதியது. அந்த நிலைமை மறுபடியும் அதிமுக-வுக்கு வந்திருக்கிறது. அப்போது முடங்கிய இரட்டை இலையை ராஜீவ்காந்தி மீட்டுக் கொடுத்தார். இப்போது இலையை மீட்கப் போவது யார்?
- சண் சரவணக்குமார்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here