அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்களின் பாதுகாப்புக்கு உறுதி: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அடுத்த தாம்பரம் அருகே சேலையூரில் உள்ள தனியார் (சியோன்) பள்ளியில், 2-ஆம் வகுப்பு படித்து வந்தவர் மாணவி ஸ்ருதி. இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு ஜூலை 25 இல் பள்ளிக்கு சொந்தமான பேருந்தில் இருந்த ஓட்டை வழியே கீழே விழுந்து பஸ் சக்கரத்தில் அடிபட்டு உயிரிழந்தார். இதனை தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு ஒன்றை பதிவு செய்தது. இதையடுத்து, பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்லும் பேருந்துகளை இயக்குவது தொடர்பாக நீதிபதிகளின் உத்தரவின்பேரில், தமிழக அரசு சிறப்பு விதிமுறைகளை வகுத்தது. அதில், ஒவ்வொரு பேருந்திலும் எவ்வளவு எண்ணிக்கையில் இருக்கைகள் அனுமதிக்கப்பட்டுள்ளதோ, அதற்கு அதிகமாக எண்ணிக்கையில் குழந்தைகளை ஏற்றக் கூடாது. பேருந்திலும் முதல் படியின் உயரம் (தரையில் இருந்து) 250 மி.மீ.க்கு குறையாமலும் 300 மி.மீ.க்கு மிகாமலும் இருக்க வேண்டும். ஓட்டுநர் பகுதியை தனியாக பிரிக்கும் வகையில் இரும்பு தடுப்புகள் அமைக்க பட வேண்டும் என்பன உள்ளிட்ட விதிமுறைகள் கொண்டு வரப்பட்டன.இந்த விதிமுறைகள் நடைமுறைக்கு உகந்தது அல்ல என்று பள்ளிகள் தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், புதிய சிறப்பு விதிமுறைகளை ரத்து செய்ய கோரி, தமிழ்நாடு கத்தோலிக்க கல்வி நிறுவனங்களின் சங்கம் மற்றும் தனியார் பள்ளிகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி குலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி டீக்காராமன் ஆகியோர் அடங்கிய முதல் டிவிசன் பெஞ்ச் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, தனியார் பள்ளிகள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சேவியர் அருள்ராஜ், அரசு பேருந்துகளில் காலை மாலை நேரங்களில் பயணிப்போரில் மூன்றில் இரண்டு பங்கு பேர் மாணவர்கள் என்றும், அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய எந்த ஒரு நிபந்தனைகளும் விதிக்கப்படவில்லை ஆனால் தனியார் பள்ளிகள் முறையாக பராமரிப்பு செய்து வருவதாக தெரிவித்தார். இதையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள், அரசு பேருந்தில் பயணிக்கும் மாணவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டுமென்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். அதேசமயம் ஏற்கனவே 3 மாதங்களுக்கு ஒருமுறை வாகனங்களை சிறப்பு அதிகாரி முன் தனியார் பள்ளிகள் ஆய்வுக்கு கொண்டு செல்லவேண்டுமென்ற நிபந்தனையை 6 மாதத்துக்கொருமுறை என மாற்றி அமைக்கப்படுகிறது.
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
ஆனால் தனியார் பள்ளிகள் பேருந்துகள் விதிகள் தொடர்பாக உயர் நீதிமன்றம் விதித்த மற்ற நிபந்தனைகளை தளர்த்த முடியாது என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக