பள்ளி மாணவர்களுக்கு விரைவில் ஸ்மார்ட் அட்டை: அமைச்சர் செங்கோட்டையன்
அரசு, தனியார் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் தன் விவரங்கள் அடங்கிய ஸ்மார்ட் அட்டை வழங்கப் பரிசீலிக்கப்பட்டு வருகிறது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். தமிழக அரசின் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் சார்பில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கான மேற்படிப்பு, வேலைவாய்ப்பு சார்ந்த ஆலோசனைக் கருத்தரங்கம் சென்னையில் உள்ள 10 மையங்களில் கடந்த இரு நாள்களாக நடைபெற்றது.
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
சென்னை மயிலாப்பூரில் உள்ள செயின்ட் பீட்ஸ் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் மாணவர்களுக்கு ஆலோசனைக் கையேட்டை வழங்கி பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியது:
வேலைவாய்ப்புக்கான உத்தரவாதம்: அரசுக் கல்லூரிகள், அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் சுமார் 1.21 கோடி மாணவர்கள் படித்து வருகின்றனர். அவர்களின் மேற்படிப்பு, வேலைவாய்ப்புகள், எதிர்காலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்தக் கையேடு வெளியிடப்பட்டுள்ளது. இதில் 278 பாடங்கள் குறித்த விவரம், கல்வி நிறுவனங்களின் முகவரி, மேற்படிப்புகளுக்கான சலுகைகள், விண்ணப்பிக்கும் முறை உள்பட பல்வேறு தகவல்கள் உள்ளன. இதன் மூலம் குறிப்பிட்ட 14 பாடங்களை மட்டுமே கற்றுவரும் மாணவர்களின் மனநிலையில் மாற்றம் ஏற்படும்.
ஸ்மார்ட் அட்டை வழங்கப் பரிசீலனை: வேலைவாய்ப்புக்கான உத்தரவாதத்தை அளிப்பதே இந்தக் கையேட்டின் நோக்கம். தமிழகத்தில் ஆசிரியர் பணியிடங்கள் அதிகமாகவே உள்ளன. குறிப்பாக தென் மாவட்டங்களில் 5 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் கூடுதலாக உள்ளன. குறிப்பாக ஒரு வகுப்புக்கு 2 ஆசிரியர்கள் என்ற நிலை உள்ளது. அது சரி செய்யப்படும். அதற்காகத்தான் ஸ்மார்ட் அட்டை திட்டத்தைச் செயல்படுத்தவுள்ளோம். இதன் மூலம் ஒரு வகுப்பில் எவ்வளவு மாணவர்கள் படிக்கின்றனர், எவ்வளவு ஆசிரியர்கள் தேவை எனத் தெரியும்.
தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் ஸ்மார்ட் அட்டை விரைவில் வழங்கப்படும். இதில் மாணவரின் பெயர், பிறப்பு, பள்ளி சேர்க்கை, தேர்ச்சி நடத்தை, ரத்த வகை, பெற்றோர் வருமானம், ஆதார் எண் உள்பட தன் விவரங்கள் இடம் பெறும். மருத்துவ சிகிச்சைத் திட்டம்: மாணவர்கள் பெற்றோரை எப்படி நடத்த வேண்டும் என்பது குறித்தும், தேசப்பற்று குறித்தும் அவர்களுக்கு சொல்லித்தரும் திட்டம் உள்ளது.
மாணவர்களுக்கோ அவர்களது பெற்றோருக்கோ விபத்து ஏற்பட்டால் மருத்துவச் சிகிச்சை அளிக்கும் திட்டம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கையின்போது இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக