*காவிரி நீரை திசைத் திருப்பி திருடும் கர்நாடகம்: தடுக்க நடவடிக்கை தேவை!*
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
குப்புறத் தள்ளிய குதிரை குழியும் பறித்த கதையாக, பாசனத்திற்காக காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க மறுத்துவிட்ட கர்நாடக அரசு, இப்போது இயற்கையாக தமிழகத்திற்கு காவிரியில் வரும் தண்ணீரையும் திசைத் திருப்பி தொழிற்சாலைகள், குடியிருப்புகள் ஆகியவற்றின் பயன்பாட்டுக்கு அனுப்பி வருகிறது. இதை தமிழக ஆட்சியாளர்கள் கண்டும், காணாமலும் இருப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டிலும், கர்நாடகத்திலும் என்ன தான் கடுமையான வறட்சி நிலவினாலும் ஓகனேக்கல் மலைப் பகுதியில் ஓரளவு வருவது வழக்கம். கர்நாடக அணைகளில் இருந்து வெளியேறும் குறைந்த அளவிலான தண்ணீரும், தமிழகத்திற்கும், கர்நாடக அணைகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் கிடைக்கும் தண்ணீரும் தான் இதற்கு காரணமாகும். இப்போதும் கூட கர்நாடகத்தில் ஹேமாவதி அணையிலிருந்து 150 கன அடி, கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து 873 கன அடி, கபினி அணையிலிருந்து 100 கன அடி, ஹாரங்கி அணையிலிருந்து 9 கன அடி வீதம் மொத்தம் வினாடிக்கு 1132 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த அளவுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டால் ஓகனேக்கல் பகுதியில் அருவி அளவுக்கு தண்ணீர் கொட்டாவிட்டாலும் கண்ணுக்கு தெரியும் அளவுக்காவது தண்ணீர் கொட்டும்.
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
-ஆனால், கடந்த சில வாரங்களாகவே ஓகனேக்கலில் ஒரு சொட்டுக்கூட தண்ணீர் வரவில்லை. இதற்கான காரணம் குறித்து ஆராய்ந்த போது தான் காவிரி நீரை கர்நாடகம் கிணறுகள் அமைத்து திருடுவது தெரியவந்திருக்கிறது. மாதேஸ்வரன் மலையிலிருந்து கொள்ளேகால் செல்லும் பாதையில் சரியாக 18-ஆவது கிலோமீட்டரில் பண்ணூர் என்ற இடம் உள்ளது. கர்நாடக எல்லையில் உள்ள இந்த ஊரில் காவிரி ஆறு சற்று வளைந்து செல்லும். அந்த இடத்தில் காவிரியை ஒட்டிய வனப்பகுதியில் 80 மீட்டர் (266 அடி) விட்டமும், 60 அடி ஆழமும் கொண்ட 6 கிணறுகளை வெட்டியுள்ள கர்நாடக அதிகாரிகள், காவிரியில் வரும் தண்ணீரை இந்தக் கிணறுகளுக்கு திருப்பி விட்டுள்ளனர். அவற்றில் 3 கிணறுகளில் சேரும் தண்ணீர் கொள்ளேகால் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இரு கிணறுகளில் சேரும் தண்ணீர் அங்குள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கும், ஒரு கிணற்றின் நீர் கொள்ளேகால் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கும் அனுப்பப் படுகிறது. வழக்கமாக வனப்பகுதியில் கிணறு தோண்ட வேண்டுமானால் வனத்துறையிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால், அத்தகைய அனுமதியை பெறாமலேயே கர்நாடகம் கிணறுகளை வெட்டியுள்ளது.
பிலிகுண்டுலு பகுதிக்கு முன்பாக உள்ள கர்நாடகப் பகுதிகள் பயனடைய வேண்டும் என்பதற்காக தண்ணீரை திறந்து விடும் கர்நாடக அரசு, கர்நாடகப் பகுதிகளின் தேவை தீர்ந்த பிறகு மீதமுள்ள நீர் கூட தமிழகத்திற்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக கிணறு வெட்டி திருப்பி விடுகிறது. தமிழகத்திற்கு வந்து சேர வேண்டிய தண்ணீரை தமிழகத்தின் அனுமதி பெறாமல் கர்நாடக அரசு கிணறு வெட்டி திருப்பி விடுவது தண்ணீரை திருடுவதற்கு ஒப்பானதாகும். அதுமட்டுமின்றி, ஏப்ரல் மாதத்தில் காவிரியில் தமிழகத்திற்கு 2.5 டி.எம்.சி தண்ணீர் தரவேண்டும் என்ற நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கும், காவிரி வழக்கில் மறு உத்தரவு வரும்வரை வினாடிக்கு 2000 கன அடி தண்ணீர் தர வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கும் இது எதிரானதாகும். கர்நாடகத்தின் தண்ணீர் திருட்டு கடந்த சில வாரங்களாகவே நடந்து வரும் நிலையில் இதுகுறித்து மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று இந்த அநீதியை தமிழக அரசு தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். ஆனால், மூடப்பட்ட மதுக்கடைகளை திறப்பதையே முதன்மைப் பணியாகக் கொண்டிருக்கும் தமிழக அரசுக்கு, அவை குறித்தெல்லாம் அக்கறை இல்லாததால் கர்நாடகத்தின் தண்ணீர் கொள்ளை தொடர்கிறது. இதனால் காவிரி மேலும் காய்ந்து கொண்டிருக்கிறது.
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு காவிரியும் முக்கியக் காரணியாகும். எனவே, மதுக்கடைகளை திறப்பதை விட்டுவிட்டு, காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிணறுகளை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் வரும் ஆண்டிலாவது குறுவை, சம்பா, தாளடி போன்ற 3 போகங்களும் நன்றாக விளையும் அளவுக்கு கர்நாடகத்திடமிருந்து காவிரியில் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி தண்ணீர் பெறுவதற்கான நடவடிக்கைகளையும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான பணிகளையும் தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் http://www.sivakasiteacherkaruppasamy.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக