‘100 ஆண்டுகள் அதிமுக ஆட்சி நீடிக்கும் என்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கூற்றை நிரூபிக்கும் வகையில் செயல்படுவோம்’ என்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் சார்பில் மாவட்டந்தோறும் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நேற்று (ஜூலை 22) எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. விழாவை தமிழகச் சபாநாயகர் தனபால் மற்றும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்வில் அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதில் எம்.ஜி.ஆரின் அரசியல், கலை என அவருடைய வாழ்க்கை குறிப்புகள் அடங்கிய காணொளிகளும், எம்.ஜி.ஆர். புகைப்படக் காட்சியும் நடைபெற்றது.
விழாவில் சிறப்புரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “கொடிகாத்த குமரன் பிறந்த திருப்பூரில் நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஏழைகளின் பசியைப் போக்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அம்மா உணவகத்தைக் கொண்டுவந்தார். தற்போது சத்துணவு திட்டத்துக்கு இணையாக அம்மா உணவகத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தை பிற மாநிலங்களும் பின்பற்றுகின்றன.
திரையுலகில் உச்சத்தைத் தொட்டதுபோல அரசியலிலும் உச்சத்தைத் தொட்டவர் எம்.ஜி.ஆர். உலகிலேயே மக்களின் நலனுக்காக திரைத்துறை ஊடகத்தைப் பயன்படுத்தியவர் எம்.ஜி.ஆர்.தான் தற்போதைய நிலையில் அதிமுக இரும்புக் கோட்டையாக திகழ்ந்து வருகிறது. எனக்கு பிறகும் 100 ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சியில் இருக்கும் என்ற ஜெயலலிதா கூறிய கூற்றை நிரூபிக்கும் வகையில் செயல்படுவோம். தலைமைக்குக் கட்டுப்பட்டு நடந்தால் பதவிகள் தானாக தேடி வரும் திருப்பூரில் கட்டப்படும் மேம்பாலத்தின் பணிகள் இந்த ஆண்டு இறுதியுடன் நிறைவுபெறும். எப்போதும் உழைப்பவர்கள் திருப்பூர் வந்தால், அவர்களுக்கு வேலை உறுதியாக கிடைக்கும்.
மேலும் அத்திக்கடவு - அவினாசி திட்டத்துக்கு நடப்பு ஆண்டில் 250 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. திட்டம் இன்னும் 30 மாதத்துக்குள் முடிக்கப்படும்” என்று தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக