தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் குற்றாலம் மாநில செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட 21 முக்கிய தீர்மானங்கள் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் குற்றாலம் மாநில செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட 21 முக்கிய தீர்மானங்கள்

தீர்மானம் : 1

உடல்நலக்குறைவால் இயற்கை எய்திய தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்
கழகத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் திரு.சுப்பையா, தமிழ்நாடு
ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலச் செயலாளர்
திருமதி.ப.கோகிலாம்பாள் அவர்களின் தாயார் திருமதி.கிருஷ்ணவேணி அம்மாள்
ஆகியோரின் மறைவிற்கு மாநிலச் செயற்குழு ஆழ்ந்த இரங்கலைத்
தெரிவித்துக்கொள்கிறது.

தீர்மானம் : 2

2017 ஜனவரி முதல் 2017 மார்ச் முடிய இயக்க வரவு-செலவு, 30.06.2017 முடிய
6-வது மாநில மாநாட்டு நிதி வரவு மற்றும் நிலுவை விவரம், 31.03.2017 முடிய
உறுப்பினர் சந்தா வரவு விவரம், 2015 மற்றும் 2016 டைரி வரவு மற்றும்
நிலுவை விவரம் (30.06.2017 முடிய) ஆகிய வரவு-செலவு விவரங்கள்; மாநிலப்
பொருளாளரால் எழுத்துமூலமான அறிக்கைகளாகச் சமர்ப்பிக்கப்பட்டு ஏகமனதாக
ஏற்பு செய்யப்பட்டது.

தீர்மானம் : 3

தமிழக அரசு மத்திய அரசின் ஊதிய விகிதங்களை தனது ஊழியர்களுக்கும்
ஆசிரியர்களுக்கும் அமல்படுத்துவதற்கு அமைத்த எட்டாவது ஊதிய மாற்றக்குழு
தனது அறிக்கையை நிறைவு செய்து அரசிடம் சமர்ப்பிக்கத் தயார் நிலையில்
இருந்தும், அதைப் பெற்றுக்கொண்டால் ஊதியக்குழுவின் பரிந்துரைகளை உடனடியாக
நிறைவேற்ற வேண்டிய சூழல் ஏற்படும் என்பதால் அதைத் தவிர்ப்பதற்காக ஊதிய
மாற்றக் குழுவின் பதவிக் காலத்தை நீட்டித்து உத்தரவிட்ட தமிழக அரசின்
செயல் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த தமிழக அரசு ஊழியர்கள் மற்றும்
ஆசிரியர்கள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தையும் அதிருப்தியையும்
ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு அறிவித்துள்ள ஊதிய விகிதங்களை மாநில அரசு
ஊழியர்களுக்கு அமல்படுத்துவது என்பதுதான் நடைமுறை. எனவே, இதில் குழு
அமைத்து நீண்ட காலம் பரிசீலனை செய்வது என்பது தேவையற்றது என்பதைத் தமிழக
அரசு கருத்தில் கொண்டு உடனடியாக மத்திய அரசு ஊதியக் குழுவின்
பரிந்துரைகளை மாநில அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும்
நடைமுறைப்படுத்திட இம்மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்திக்
கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் : 4

கடந்த ஊதியக்குழுவில் தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய
ஊதிய இழப்பை 01.01.2006 முதல் சரிசெய்து அதன் தொடர்ச்சியாக மத்திய
அரசுக்கு இணையான ஊதியத்தை புதிய ஊதியக்குழுவின் மூலம் தமிழக இடைநிலை
ஆசிரியர்களுக்கு வழங்கிட வேண்டும் என தமிழக அரசை இம்மாநிலச் செயற்குழு
வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் : 5

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் எதிர்காலத்தை அழித்துவிட்ட
தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்
திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின்
பதவிக்காலம் மூன்று முறை நீட்டிக்கப்பட்ட நிலையில், அக்குழுவின்
அறிக்கையைப் பெற்று பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்
படுத்துவதற்குரிய எவ்வித முயற்சியையும் தமிழக அரசு மேற்கொள்ளாமல்
இருப்பது தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை ஏமாற்றும் செயலாக
உள்ளது. எனவே, தமிழக அரசு தனது ஊழியர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு
இனிமேலும் காலதாமதம் செய்யாமல் உடனடியாகத் தன்பங்கேற்பு ஓய்வூதியத்
திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வுதியத் திட்டத்தை
நடைமுறைப்படுத்திட இம்மாநிலச் செயற்குழு வலியுறுத்திக்
கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் : 6

மேற்கண்ட 3,4,5 தீர்மானங்களில் கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி
தமிழகத்தில் உள்ள போர்க்குணமிக்க ஆசிரியர் அமைப்புகள் மற்றும் அரசு
ஊழியர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளை இணைத்துக் கொண்டு விரிவடைந்த
ஒற்றுமையை உருவாக்கி போராட்டக்களம் அமைப்பதற்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி
ஆசிரியர் கூட்டணி முன் முயற்சி எடுப்பது என இம்மாநிலச் செயற்குழு ஏகமனதாக
முடிவாற்றுகிறது.

தீர்மானம் : 7

பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கையின்போது நாடே திரும்பிப் பார்க்கும்
வகையிலான 41 அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று மாண்புமிகு தமிழக
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் அவ்வப்போது அறிவித்துக் கொண்டிருந்த
நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த ஆசிரியர்கள் மற்றும்
பொதுமக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை தரும் வகையில் பள்ளிக்கல்வித்துறை
அமைச்சரின் 37 அறிவிப்புகள் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது என்பதைச்
சுட்டிக்காட்டுவதோடு, 37 அறிவிப்புகளில் வரவேற்கத்தக்க ஒருசில
அறிவிப்புகள் இருந்தாலும் தமிழகத்தின் பொதுக் கல்வியைக் பாதுகாக்கக்கூடிய
வகையிலும், அரசுப் பள்ளிகளை பாதுகாக்கக்கூடிய வகையிலுமான முக்கிய
அறிவிப்புகள் வெளியிடப் படவில்லை என்பதை இம்மாநிலச் செயற்குழு
சுட்டிக்காட்டுகிறது. எனவே தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கும், கல்வி
நலனுக்கும் உகந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் எதிர்பார்ப்புகளை
நிறைவேற்றக்கூடிய அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட வேண்டும் என
இம்மாநிலச் செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் : 8

தமிழகத்தின் பொதுக்கல்வியைப் பாதுகாத்திடவும், அரசுப் பள்ளிகள் மற்றும்
அரசு உதவிபெறும் பள்ளிகளைப் பாதுகாத்திடவும் தமிழகத்தில் புற்றீசல்கள்
போல விதிகளுக்குப் புறம்பாகத் துவக்கப்பட்டுள்ள சுயநிதிப் பள்ளிகளின்
அங்கீகாரத்தை ரத்து செய்திடவும், புதிதாக சுயநிதி பள்ளிகள் துவக்கிட
தமிழக அரசு தடை விதித்திடவும் இம்மாநிலச் செயற்குழு தமிழக அரசை
வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் : 9

தமிழக சட்டப்பேரவையில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள்
தனது அறிவிப்பில் டு.மு.பு.இ ரு.மு.பு வகுப்புகள் அங்கன்வாடி  மையங்களில்
துவங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளதை மறுபரிசீலனை
செய்து, முன்பருவக் கல்வியை அரசு ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில்
துவக்கிடவும், அவ்வாறு துவக்கும்போது பயிற்சி பெற்ற ஆசிரியர்களை அதற்கு
நியமித்திட வேண்டும் எனவும் இம்மாநிலச் செயற்குழு தமிழக அரசை
வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் : 10

தமிழகத்தில் ஆசிரியர் சங்கங்கள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம்
தெரிவித்துள்ள கருத்துக்கள் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 19க்கு முரணானது
என்பதால் அக்கருத்துக்களை சென்னை உயர்நீதிமன்றம் திரும்பப்பெற வேண்டும்
என இம்மாநிலச் செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் : 11

தமிழகத்தில் இந்திமொழித் திணிப்பை உடனடியாகக் கைவிட மத்திய அரசை
இம்மாநிலச் செயற்குழு ஏகமனதாகக் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் : 12

கீழடி அகழ்வாராய்ச்சி தொடர்ந்து நடைபெறவும், அதன்மூலம் தமிழர்களின்
தொன்மை, நாகரிகம், பண்பாட்டுச்சிறப்பை வெளிக்கொணரவும் மத்திய, மாநில
அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள இம்மாநிலச் செயற்குழு ஏகமனதாகக்
கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் : 13

நாமக்கல் மாவட்டத்தில் 24.05.2017 மற்றும் 25.05.2017 ஆகிய தேதிகளில்
நடைபெற்ற ஒன்றியப்பள்ளி ஆசிரியர்களுக்கான மாவட்ட உபரிப் பணியிட நிரவல்
மாறுதலில் விதிகளை மீறி முறைகேடாக வழங்கப்பட்டுள்ள பணிநிரவல் மாறுதல்
ஆணைகளை முழுமையாக ரத்து செய்துவிட்டு மறுகலந்தாய்வு நடத்திட
தொடக்கக்கல்வித்துறையை மாநிலச் செயற்குழு ஏகமனதாக கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் : 14

தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் அரசு உதவிபெறும்
பள்ளிகளில் உபரி ஆசிரியர்களுகு;கு எவ்விதமான விதிகளையும்
கடைப்பிடிக்காமல் விருப்பு வெறுப்புடன் விதிகளுக்குப் புறம்பாக பணிநிரவல்
ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. அவ்வாணைகள் ரத்து செய்யப்பட தொடக்கக் கல்வி
இயக்குநர் அவர்கள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள இம்மாநிலச் செயற்குழு
கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் : 15

புதிய காப்பீட்டுத் திட்டத்தின் (Nர்ஐளு) கீழ் மருத்துவ சிகிச்சை பெறும்
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சிகிச்சைக்குரிய கட்டணத்
தொகையை முழுமையாக வழங்காமல், 4 லட்சம் செலவு செய்த ஒரு ஊழியருக்கு வெறும்
30 ஆயிரம் ரூபாயை மட்டும் காப்பீட்டு நிறுவனம் வழங்கி வருவது மிகுந்த
கண்டனத்திற்கு உரியதாகும். காப்பீட்டு நிறுவனத்தின் இச்செயல்
இத்திட்டத்தின் நோக்கத்தை முழுவதும் சிதைப்பதாக உள்ளது. எனவே, இது
தொடர்பாக தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு புதிய காப்பீட்டுத்
திட்டத்தின் பலன் தமிழக அரசு ஊழியர்களுக்கு முழுமையாகக் கிடைத்திடவும்,
கட்டணமில்லா சிகிச்சையை உறுதிப்படுத்திடவும் தமிழக அரசை இம்மாநிலச்
செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் : 16

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கரூர் மாவட்டச் செயலாளர்
திரு.பா.பெரியசாமி, கரூர் மாவட்டப் பொருளாளர் திரு.இரா.ரஞ்சித் குமார்,
மாநிலத் துணைத்தலைவர் திரு.எம்.ஏ.இராஜா ஆகியோர் தொடர்ந்து இயக்க விரோத
நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாலும், 70மூ பெண் ஆசிரியர்களை
உறுப்பினர்களாகக் கொண்ட நமது இயக்கத்தில் பெண்களை மிகவும் கண்ணியமாகவும்,
கௌரவமாகவும் நடத்தவேண்டும் என்ற நமது இயக்கத்தின் உயரிய மாண்புக்கு
எதிராகச் செயல்பட்டு வருவதாலும் இயக்கத்தின் நற்பெயருக்கும்,
நன்மதிப்பிற்கும், நற்புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில்
செயல்பட்டு வருவதாலும், கோஷ்டி மனப்பான்மையுடன் செயல்பட்டு வருவதாலும்,
தொடர்ந்து இயக்கத்தின் மேலமைப்பு முடிவுகளுக்குக் கட்டுப்படாமல் நடந்து
வருவதாலும் இயக்க நலன் கருதி மேற்படி பொறுப்பாளர்கள் மூவரையும்
இயக்கத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து
பொறுப்புகளிலிருந்தும் இன்று (02.07.2017) முதல் நீக்குவதென இம்மாநிலச்
செயற்குழு ஏகமனதாகத் தீர்மானிக்கிறது.

தீர்மானம் : 17

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கரூர் மாவட்டக்கிளை
தொடர்ந்து அமைப்பு விதிகளுக்குப் புறம்பாகவும், மேலமைப்பின்
முடிவுகளுக்குக் கட்டுப்படாமலும், மேலமைப்பு எழுத்து மூலமாகவும்,
வாய்மொழியாகவும் வழங்கும் வழிகாட்டுதல்களை நிராகரித்தும், மேலமைப்பின்
முடிவுகளை நடைமுறைப்படுத்தாமல் கோஷ்டி மனப்பான்மையுடனும் செயல்பட்டு
இயக்க நலன்களுக்கு ஊறுவிளைவித்து வருகிறது.  மேலும், இயக்கத்தில்
பெண்களைக் கண்ணியமாகவும், உயர்வாகவும், உரிய முக்கியத்துவத்தோடும்
நடத்திட வேண்டும் என்ற நமது இயக்கத்தின் உயரிய மாண்புக்கு எதிரான
செயல்பாட்டிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. மேற்கண்டவாறான கரூர்
மாவட்டக் கிளையின் இயக்க விரோத நடவடிக்கைகள் தொடர்பாக மாநில
செயற்குழுவால் அமைக்கப்பட்ட விசாரணைக்குழு தனது அறிக்கையில் கரூர்
மாவட்டக் கிளையைக் கலைத்துவிட பரிந்துரை செய்துள்ளதன் அடிப்படையில்,
அக்குழுவின் பரிந்துரையை முழுமையாக ஏற்றுக்கொண்டு இன்று (02.07.2017)
முதல் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கரூர் மாவட்டக்
கிளையைக் கலைத்து இம்மாநிலச் செயற்குழு ஏகமனதாக தீர்மானிப்பதோடு, கரூர்
மாவட்டத்தில் மாவட்ட அமைப்புக் குழுவை உரிய நேரத்தில் அமைத்திட மாநில
மையத்திற்கு அதிகாரம் அளித்தும் ஏகமனதாக முடிவாற்றுகிறது.

தீர்மானம் : 18

தலைமை ஆசிரியர் பணியிடம் அனுமதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ள 42 தரம்
உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடம் உட்பட
தமிழகத்தில் காலியாக உள்ள நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்,
ஆரம்பப்பள்ளித் தலைமை ஆசிரியர், தமிழாசிரியர், பட்டதாரி ஆசிரியர்,
இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை பள்ளிகள் திறந்து ஒரு மாதமாகிவிட்ட
நிலையிலும் நிரப்பாமல் காலம் தாழ்த்துவது அரசுப்பள்ளிகளில் தங்கள்
குழந்தைகளைச் சேர்த்த பெற்றோர்கள் மத்தியில் கடுமையான அதிருப்தியை
ஏற்படுத்தியுள்ளது. எனவே, தொடக்கக் கல்வித்துறை காலிப்பணியிடங்களை
உடனடியாக இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தி பதவி உயர்வு மற்றும்
மாறுதலகள்; மூலம் நிரப்பிட உடனடி நடவடிக்கை மேற்கொள்ள மாநிலச் செயற்குழு
வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் : 19

லஞ்சம், ஊழல், அதிகார மீறல் மற்றும் ஆசிரியர் விரோத, மாணவர் விரோத
நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சில உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்கள் மீது
இயக்கம் அளித்த புகார்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளாமல்
தொடக்கக்கல்வித்துறை காலம் தாழ்த்துவது என்பது சம்பந்தப்பட்ட
அலுவலர்களுக்கு ஊக்கம் தருவதாக அமைந்துள்ளது. எனவே, தொடக்கக்கல்வித்துறை
இனியும் காலம் தாழ்த்தாமல் இதில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள இம்மாநிலச்
செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் : 20

தமிழகம் முழுவதும் உள்ள நமது இயக்கத்தின் வட்டார, நகர, மாவட்டக்
கிளைகளுக்குச் சொந்தமான சொத்து விவரங்களை சேகரித்து ஆவணப்படுத்திட
கீழ்க்கண்ட மூவர்குழுவை மாநிலச் செயற்குழு நியமனம் செய்கிறது.

1) திரு.தோ.ஜாண் கிறிஸ்துராஜ், மாநில துணைத்தலைவர்
2) திரு.கோ.வீரமணி, மாவட்டச் செயலாளர், திருவாரூர் மாவட்டம்
3) திரு.சு.செல்வராஜ், மாவட்டச் செயலாளர், தூத்துக்குடி மாவட்டம்

தீர்மானம் : 21

இயக்க அமைப்பு விதிகளின்படி மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நமது
இயக்கத்தின் அமைப்புத் தேர்தல்களை கீழ்க்கண்ட கால அட்டவணைப்படி நடத்திட
மாநிலச் செயற்குழு தீர்மானிக்கிறது.

வட்டார, நகரக் கிளைகள் -2017 ஜுலை, ஆகஸ்ட் செப்டம்பர்.
மாவட்டக் கிளைகள்- 2017 அக்டோபர், நவம்பர்.
மாநில அமைப்பு- 2018 ஜனவரி.

ஃ  உண்மை நகல் ஃ

(மாநிலச் செயற்குழு முடிவின்படி)         *செ.பாலசந்தர்,பொதுச்செயலாளர்,தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here