இந்திய விடுதலை போரும் #தேவேந்திரகுலவேளாளர்களும்.
(பகுதி - 4)
யார் இந்த மேஜர் சரவணன்?
10.8.1972-ம் ஆண்டு ராமேஸ்வரத்தில் தேவேந்திர குல வேளாளர் சமுகத்தில் பிறந்த சரவணன், திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் பட்டம் பெற்று, சென்னை அலுவலர்கள் பயிற்சி அகாடமியில் சேர்ந்து பயின்றார். 11.3. 1995-ம் ஆண்டு, பீகார் ரெஜிரென்ட்டில் நியமிக் கப்பட்டார்.
எவ்வகை கஷ்டமான சூழ்நிலையிலும் மறுபேச்சில்லாமல் கடமையாற்றும் அந்த வீரர்களின் சேவை இந்திய ராணுவத்துக்குக் கிடைத்தது. அத்தகைய வீரப் படைப் பிரிவுக்கு அதிகாரியாக நியமிக்கப்பட்டவர்தான் சிங்கத் தமிழன் சரவணன்.
தனது பணியில் சிறந்து விளங்கியதால், விரைவில் பதவி உயர்வு பெற்று கேப்டனாகி, 1999-ம் ஆண்டு மேஜர் ஆனார்.
இந்நிலையில்தான் கார்கில் யுத்தம்...
மேஜரும் அவர் படைவீரர்களும் தாங்கள் முகாமிட்டிருந்த அஸ்ஸாமிலிருந்து அவசரகதியாக பதாலிக் வந்தடைந்தனர். அப்போது அஸ்ஸாம் மாநிலத்தில் வெயில் காலம். வறுக்கும் வெக்கை. அங்கிருந்து திடீரென்று பதாலிக்வந்த துருப்புகளை குளிரின் கொடுமை பொளேரென்று தாக்கியது. அதோடு எதிரி யார் என்றே தெரியாமல் துப்பாக்கி ஏந்தி நிற்கும் சூழ்நிலை, கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் இருந்தது!.
பதாலிக் பகுதி. அது வடகாஷ்மீர் எல்லை. கார்கில் யுத்தத்தின் ஆரம்ப நிலை... ஊடுருவியவர்கள் தீவிரவாதிகளா அல்லது பாகிஸ்தான் ராணுவமா என்று இந்திய ராணுவம் குழம்பிய நேரம். பல்வேறு படைப் பிரிவுகள் காஷ்மீர் பகுதிக்கு அவசரகதியாக அனுப்பப்பட்டு வந்தன.
இரவு நேரம்...
''மேஜர்! துருப்புகளுடன் சென்று, இருள் சூழ்ந்த நேரத்தில்... ஜுபார் மலைப் பகுதியில் ஊடுருவியுள்ளவர்களது பங்கர்களை தாக்க வேண்டும்!'' உயர் அதிகாரி சொல்ல,
''எஸ் சார்... உடனடியாகச் செய்கிறோம்!'' தயங்காமல் சொல்லிவிட்டு, மேஜர் ஒரு சல்யூட்டோடு விடை பெற்றார்.
இட்ட பணியோ கிட்டத்தட்ட முடியாத வகை. ஏனெனில், 14,229 அடி உயரத்திலுள்ள எதிரிகளின் பங்கர்களை அதுவும் இருள் சூழ்ந்த கடுங்குளிர் நேரத்தில் பிடிப்பது மிகக் கடினம்! நம் எதிரிகள் பாகிஸ்தான் படைவீரர்களா அல்லது பயிற்சி பெற்ற தீவிரவாதிகளா என்று தெரியாத நிலையில்... பெரிய வகை பீரங்கிகளின் துணையில்லாமல் அந்தத் தாக்குதல் நடத்துவது மிகமிக ஆபத்தானது.
ஆனாலும், அதிகாலை 4மணியளவில் தாக்குதல் ஆரம்பமானது. 'ட... ட... ட...'வென எதிரிகளின் மெஷின்கன் முழங்க, குண்டு மழையின் ஊடாக பீகார் படைப் பிரிவு முன்னேறியது. மேஜர் சரவணன் ராக்கெட் உந்து துப்பாக்கியால் எதிரி பங்கரை நோக்கி சுட, இரு எதிரிகள் சாய்ந்தனர்! மீண்டும் உயரே இருந்த பகுதியில் மறைந்தபடி எதிரிகள் சரமாரியாக சுட... 'சுரீர் சுரீரென்று மேஜரின்உடலில் குண்டுகளின் பாய்ச்சல்... குண்டு உதிரிகள் மேஜரின் உடலைத் துளைத்து ரத்தம் கசிய ஆரம்பித்தது. கூட வந்த பல வீரர்களும் எதிரிகளின் தோட்டாக்களுக்கு பலியாக... மேஜர் தொடர்ந்து மேலே சென்று கொண்டிருந்தார்.
''செங்கிஸ்கான் திரும்பி வா...'' வயர்லெஸ்ஸில் உயர் அதிகாரி முழங்கினார். மேஜர் சரவணனுக்கு வயர்லெஸ் ரகசியப் பெயர் செங்கிஸ்கான்.''சாரி சார்... இப்போது திரும்புவது சரியாக இருக்காது. கிட்டத் தட்ட நமது இலக்கை அடைந்து விட்டோம்!'' என்று சொல்லியபடியே பங்கரில் குதித்து தாக்குதல் நடத்தி இன்னும் இரு எதிரிகளை கொன்றொழித்தார் சரவணன். அப்போது அந்தக் கொடுமை நடந்தே விட்டது! எதிரிகளின் குண்டு ஒன்று அவர் தலையில் புக, அவ்வீரத்திருமகன் கீழே சாய்ந்தார். பனி போர்த்திய மண்ணில் அவர் திருவுருவத்தை பாரதத் தாய் தாங்கிப் பிடித்தாள். தாக்குதலுக்குச் சென்றவர்களைப் பற்றிய ஒரு தகவலும் கிடைக்காமல் பீகார் படைப் பிரிவு முகாம் குழப்பத்தில் இருக்க... நாட்கள் மெள்ள நகர்ந்தன. பல இடங்களில் எதிரி களுடன் துருப்புகள் போரில் தீவிரமாக மோதின.
மேஜருடன் சென்ற நாயக் சத்ருகன் காயமடைந்த நிலையில், பல நாட்கள் ஊர்ந்தே நகர்ந்து முகாம் வந்தடைந்தார். மேஜர் சரவணன் தலைமையில் தாங்கள் நடத்திய செயற்கரிய செயல்களை அவர் விவரிக்க விவரிக்க... கண்ணீரில் மூழ்கிய பீகார் படைப் பிரிவு வீரர்கள், சிலிர்த்த இதயத்தோடு ஒரு வீரசபதம் அங்கே எடுத்தனர்.
''ஜெய் பஜ்ரங் பாலி!'' என்ற போர்க் குரலுடன், ''எங்கள் தலைவனைக் கொன்றவர்களை நாங்கள் பழி வாங்குவோம். அவர் உடலை மீட்டு வருவோம்!'' என்ற ஆவேசக் குரலோடு கிளம்பினார்கள். ஆக்ரோஷமாகப் போரிட்டு, மேஜரின் உடலை மீட்க 41 நாட்கள் ஆயின. ஜூலை 8, 1999 அன்றுபெரும் போருக்குப் பின் எதிரிகளை விரட்டியடித்துவிட்டு அவருடைய திருவுடலை படைப் பிரிவு வீரர்கள் மீட்டனர். அத்துடன் சிகரம் 4058 மற்றும் ஜுபார் மலைக் குன்றை மறுபடி பாரதத் தாயின் சொத்தாகவே மீட்டுக் காவல் போட்டனர். வெற்றிக்குப் பின், பல நூறு படை வீரர்களுடன் அந்தப் பகுதிக்குச் சென்று பார்த்த ராணுவ உயர் அதிகாரிகள் வியந்து நின்ற விஷயம் - ''இத்தனை நூறு வீரர்கள், 40 நாள் போராடி மீட்ட சிகரத்தை, சரவணன் எப்படி அந்த ஒரே இரவில் வந்தடைந்து போர்புரிந்தார் என்பது! இன்னமும் இந்திய ராணுவ வட்டாரங்களை அவருடைய வீரச் செயல் சிலிர்க்க வைத்துக் கொண்டே இருக்கிறது. 'அதிவீரம்' என்ற வார்த்தையில் அதைப் புகழ்கின்றனர். அவருடைய பணியைப் பாராட்டி அவருக்கு உயரிய விருதான 'வீர சக்ரா' வழங்கப்பட்டது. மட்டுமின்றி, அவரை 'பதாலிக் கதாநாயகன் ' என்ற பெருமைமிகு பெயராலேயே குறிப்பிடுகின்றனர்.
''இந்த யுத்தத்தில் முதல் அதிகாரியாக உயிரை அர்ப்பணம் செய்தது என் மகன். ஆனால், யுத்தம் முடியும் வரை காத்திருந்து பாரதம் மறுபடி வென்று விட்ட செய்தியோடு, அவன் கடைசி ஆளாகத்தான் வீடு திரும்பினான்!'' என்று பரவசத்தோடு அந்தத் தியாகத்தைக் குறிப்பிட்டார் சரவணனின் தாய் அமிர்தவல்லி மாரியப்பன்.
அவரது தந்தையும் நாட்டுக்காக ராணுவத்தில் இருந்து உயிர் துறந்தவர். கணவன், ஒரே மகன் என இருவரையும் தேசத்திற்கு அர்ப்பணித்த அந்த தியாகத்தாய் மூவரையும் போற்றுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக