இந்தியாவின் முன்னணி ஆறு தொலைத் தொடர்பு நெட்வொர்க் நிறுவனங்களுக்குக் கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ.61,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய பொது கணக்காளர் அறிக்கை தெரிவிக்கிறது.
ஏர்டெல், வோடஃபோன், ஐடியா உள்ளிட்ட நாட்டின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளாகவே கடன் சுமையில் மூழ்கி வருகின்றன. அரசிடம் ஸ்பெக்ட்ரம் பெற்றதற்கான தொகையைச் செலுத்துவதிலும் கூட இந்நிறுவனங்களுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதில் இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான ஏர்டெல், அரசுக்கு ரூ.2,602.24 கோடி பாக்கி வைத்துள்ளது. இது உரிமம் பெறுதல் மற்றும் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகளுக்கான தொகை ஆகும். மேலும், வட்டியாக ரூ.1,245.91 கோடியும் சேர்த்து செலுத்தவேண்டியுள்ளது.
அதைத் தொடர்ந்து வோடஃபோன் நிறுவனம் உரிமம் மற்றும் ஸ்பெக்ட்ரம் தொகையாக ரூ.3,331.79 கோடியும், வட்டியாக ரூ.1,178.84 கோடியும் அரசுக்குச் செலுத்தவேண்டியுள்ளது. ஐடியா நிறுவனத்துக்கு ரூ.1,136.29 கோடி உரிமம் மற்றும் ரூ.657.88 கோடி வட்டியும் பாக்கியுள்ளது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்துக்கு மொத்தமாக ரூ.1,911.17 கோடி, ஏர்செல் நிறுவனத்துக்கு ரூ.1,226.65 கோடி மற்றும் எஸ்.எஸ்.டி.எல். நெட்வொர்க் நிறுவனத்துக்கு ரூ.116.71 கடன் பாக்கி இருக்கிறது.
ஏற்கனவே கடனில் தத்தளிக்கும் நெட்வொர்க் நிறுவனங்களுக்கு ரிலையன்ஸ் ஜியோவின் வருகை மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்காக ஜியோவுக்குப் போட்டியாகக் குறைந்த விலையில் சேவைகளை அறிவிப்பதால் வருவாய் இழப்பை இந்நிறுவனங்கள் சந்தித்து வருகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக