- STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad


சிபிஎம் பிளவு: யெச்சூரி மூன்றாம் முறை எம்.பி?

சிபிஎம் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியை ராஜ்ய சபா எம்.பி-யாக மூன்றாவது முறை நியமிக்கப்பட வேண்டுமா என்பது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சிக்குள் கருத்து பேதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை சீதாராம் யெச்சூரி நிராகரித்தார் என்றபோதிலும் மேற்கு வங்க சிபிஎம் அவரை நியமிக்க வேண்டும் என்ற நெருக்கடி கொடுத்து வருகிறது. டெல்லியில் வரும் 24, 25 தேதிகளில் இதுகுறித்து விவாதிக்கக் கட்சியின் மத்தியக் குழு கூடுகிறது. அப்போது இதுகுறித்த முடிவு எடுக்கக்கூடும். மேற்கு வங்க சிபிஎம், கட்சியின் பொதுச் செயலாளர் யெச்சூரியை மூன்றாவது முறையாக ராஜ்ய சபா எம்.பி-யாக நியமிக்க வேண்டும் என்ற கருத்தைக்கொண்டிருந்தது. மேற்கு வங்க சிபிஎம் கடந்த ஜூன் மாதத்தில் மூன்றாவது முறையாக ராஜ்ய சபா எம்.பி-யாக யெச்சூரி நியமிக்க வேண்டும் என்று முன்மொழிந்தது. ஏற்கெனவே கட்சியின் பொலிட்பீரோ கட்சியின் பொதுச் செயலாளரை மீண்டும் தேர்வு செய்வதை நிராகரித்திருந்தது. தேர்தல் ஆணையம் அறிவித்தபடி, ஜூலை 28ஆம் தேதி வேட்பாளர்களுக்கு வேட்புமனு தாக்கல் செய்யப்படும் கடைசி தேதி. மேற்கு வங்கத்தில் இருந்து ஆறு இடங்கள் உள்ளன. அதற்கு ஆகஸ்ட் 8ஆம் தேதி தேர்தல்கள் நடத்தப்பட உள்ளன.

“கட்சியின் மத்தியக் குழு 24, 25ஆம் தேதிகளில் கூட உள்ளது. அப்போது மேற்கு வங்கத்திலிருந்து வந்துள்ள முன்மொழிவு குறித்து விவாதிக்கப்படும். இதுகுறித்து இறுதி கட்ட முடிவும் எடுக்கப்படும். கட்சியின் தலைவரை மூன்றாவது முறையாக ராஜ்ய சபா எம்.பி வேட்பாளராகத் தேர்ந்தெடுப்பது கட்சி விதிமுறைகளுக்கு எதிரானது” என்றார் தன் பெயரை வெளியிட விரும்பாத சிபிஎம் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர்.

ஒருவரை மூன்றாவது முறையாக ராஜ்யசபா எம்.பி-யாக நியமிக்க சிபிஎம் கட்சியின் விதிமுறை தடையாக உள்ளது. கட்சியில் உள்ள இளைய உறுப்பினர்களுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கில் அந்த விதிமுறை உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த மாதத்தில் ஒருநாள் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி இந்த விவகாரம் குறித்துப் பேசும்போது, “நான் ஒருபோதும் கட்சியின் விதிமுறைகளை மீற மாட்டேன்” என்று பேசியிருந்தார்.

“மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் இடதுசாரிக் கட்சிகளுடன் ஒரு புரிந்துணர்வுடன் போட்டியிட்டது காங்கிரஸ் கட்சி. ஆனால் மேல்சபை தேர்தலில் யெச்சூரிக்கு ஆதரவளிக்கத் தயாராக உள்ளது. 2016ஆம் ஆண்டுக்கான சட்டமன்றத் தேர்தலில் சிபிஎம் 26 இடங்களை வென்றது. ஓர் உறுப்பினரை ராஜ்ய சபாவுக்கு நியமிப்பதற்கு அவசியமான சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. மாநிலச் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 44 இடங்களை வென்றது. இடது முன்னணியில் 32 உறுப்பினர்கள் உள்ளனர். சீதாராம் யெச்சூரியின் முகம் இந்தியாவில் நன்கு அறியப்பட்டது. அவர் கடந்த இரண்டு முறையும் நாடாளுமன்றத்தில் 236 விவாதங்களில் பங்கேற்றுள்ளார். 44 கேள்விகளை எழுப்பியுள்ளார். சீதாராம் யெச்சூரி 87 சதவிகிதம் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்திருக்கிறார். இந்நிலையில்தான் யெச்சூரிக்கு மீண்டும் ராஜ்ய சபா எம்.பி-யாகும் வாய்ப்பு கிட்டியிருக்கிறது. இந்த வாய்ப்பை அவர் ஏற்றால் அது கட்சியின் விதிமுறை மீறலாகுமாம்” என்கிறார்கள் மூத்த கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள். கட்சி விதிமுறையை யெச்சூரி மீறுவாரா... இல்லை, தான் கூறியது போல் இந்த வாய்ப்பை நிராகரிப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here