பெங்களூரு சிறையில் சசிகலாவுக்குச் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதாகப் பொய் குற்றச்சாட்டைச் சுமத்தியதற்காக டி.ஐ.ஜி. ரூபா மீது மான நஷ்ட வழக்குத் தொடரப்போவதாக எம்.எல்.ஏ. வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் பரப்பன அக்ரஹாரச் சிறைத்துறை டி.ஐ.ஜி-யாக பொறுப்பேற்ற ரூபா, ஜூலை 10ஆம் தேதி சிறையில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது, சசிகலாவுக்குத் தனி சமையலறை அமைத்துச் சமைப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்தார். சசிகலாவுக்குச் சலுகைகள் வழங்க கர்நாடகச் சிறைத்துறை டி.ஜி.பி 2 கோடி லஞ்சம் பெற்றதாகவும் அவர் தெரிவித்தார். இந்தக் குற்றச்சாட்டை டி.ஜி.பி. மறுத்துள்ளார். மேலும், டி.ஐ.ஜி. ரூபா ஜூலை 17ஆம் தேதி அதிரடியாக பணியிடை மாற்றம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், டி.டி.வி.தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேல், பெங்களூரு சிறையில் விதிகளை மீறி சசிகலாவுக்கு எந்த வசதிகளும் செய்து தரப்படவில்லை. பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் யாருமே இல்லாத அறையைக் காட்டி சசிகலாவின் அறை என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும். மேலும், டி.ஐ.ஜி. ரூபா கூறியுள்ள எந்தக் குற்றச்சாட்டுகளுக்கும் ஆதாரமில்லை. ஒருவேளை டி.ஐ.ஜி. ரூபாவிடம் குற்றச்சாட்டுக்கான ஆதாரம் இருந்தாலும் அதை அவர் நீதிமன்றத்தில்தான் சமர்ப்பிக்க வேண்டும். சசிகலா பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் ரூபா மீது மான நஷ்ட வழக்கு தொடர வழக்கறிஞர்களுடன் ஆலோசனை செய்து வருகிறேன். நான் மாவட்டச் செயலாளர் மட்டுமல்ல, சட்டமன்ற உறுப்பினரும்கூட, அதனால் சசிகலாவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் டி.ஐ.ஜி. மீது நான் தனிப்பட்ட முறையில் வழக்குத் தொடர்வேன். சசிகலாவுக்கு நீதிபதி டி.குன்ஹா வழங்கப்பட்ட தண்டனைபடி அவர் சொந்த உடை அணிந்து கொள்ளலாம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தியும் டி.ஐ.ஜி. ரூபா மீது மான நஷ்ட வழக்குத் தொடரப்போவதாக தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக