சென்னை, எண்ணூரில் அமைந்துள்ள காமராஜர் துறைமுகம் அதன் விரிவாக்கப் பணிகளுக்காக ரூ.640 கோடி (10 கோடி டாலர்) கடன் பெற்றுள்ளது.
இதுகுறித்து காமராஜர் துறைமுக தலைவர் எம்.ஏ.பாஸ்கராச்சார் கூறும்போது, “மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, ‘துறைமுகங்கள் வாயிலான, அந்நியச் செலாவணி வருவாயை அதிகரிக்க, குறைந்த வட்டியில் கடன் பெற வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார். இதையடுத்து, கடனுக்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டன. இதில் பங்கேற்ற வங்கிகளில் ஆக்சிஸ் வங்கி மிகவும் குறைவாக 3.15 சதவிகித வட்டியில், 5 ஆண்டுகளில் திரும்ப அளிக்கும் வகையில் 10 கோடி டாலர் கடன் வழங்குவதாக தெரிவித்திருந்தது. அதை துறைமுக நிர்வாகம் ஏற்றுக்கொண்டது.
தற்போது பெறப்படும் கடன் தொகையைக்கொண்டு 16 மீட்டராக உள்ள துறைமுகத்தின் ஆழம் 18 மீட்டராக உயர்த்தப்படும். இதன்மூலம் பெரிய சரக்குக் கப்பல்களை துறைமுகத்துக்குக் கொண்டுவர முடியும். இதனால் சரக்கு கையாளும் செலவு குறையும். இத்துடன், தமிழக மின் வாரியத்துக்காக, புதிய நிலக்கரி இறக்குமதி தளம், பொதுவான சரக்கு தளம் மற்றும் 3 லட்சம் கார்களை கையாளக்கூடிய, இரண்டாவது வாகன ஏற்றுமதி முனையம் ஆகியவையும் அமைக்கப்படும்.” இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக