நாட்டின் 13-வது துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று ஆகஸ்ட் 11ஆம் தேதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் முடிந்ததையடுத்து புதிய துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் தேர்வு செய்யப்பட்டார். அதையடுத்து, நாட்டின் 13-வது துணை ஜனாதிபதியாக, வெங்கைய்யா நாயுடு இன்று பதவி ஏற்றார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
முன்னதாக டெல்லியின் ராஜ் காட்டில் உள்ள காந்தி நினைவிடத்திற்குச் சென்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து, தீன தயாள் உபத்யாய் சிலைக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
டெல்லியில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் உள்பட பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் தற்போது நிலவிவரும் நீட் தேர்வு பிரச்னை தொடர்பாக மருத்துவ படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கையில், மாநில பாட திட்டத்தின் கீழ் படித்தவர்களுக்கு 85 சதவீத இட ஒதுக்கீடு செய்வது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள நிலையில் இன்று பிரதமர் மோடியை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து பேசினார். அப்போது, அதிமுக-வின் எடப்பாடி அணி மற்றும் ஓ.பி,எஸ்.அணிகளின் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தையும் நடைபெற்றதாக தெரியவருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக