தெலங்கானா மாநிலக் கைத்தறித் துறையினர் தங்களது தயாரிப்புகளை இணைய வர்த்தக முறையில் விற்பனை செய்வதற்கும், அத்துறையினருக்குப் பயிற்சியளிப்பதற்கும் அமேசான் நிறுவனத்துடன் அம்மாநில கைத்தறி மற்றும் ஜவுளித் துறை ஒப்பந்தம் செய்துள்ளது.
இது குறித்து அமேசான் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த ஒப்பந்தம் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.
“தெலங்கானா மாநிலத்தின் போச்சம்பள்ளி, வாராங்கால், கட்வால், நாராயண்பேட் மற்றும் சித்திபேட் ஆகிய பகுதிகளில் கைத்தறித் தொழில் சிறப்பாக உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் கைத்தறிப் பொருட்களுக்கான தேவை நகர்ப்புறங்களில் அதிகமாக இருக்கிறது. இம்மாநிலத்தைச் சேர்ந்த கைத்தறிக் கலைஞர்களுக்கு எங்களது நிறுவனம் சிறந்த வகையில் பயிற்சி வழங்கி, அவர்களது தயாரிப்புகளை ஆன்லைன் வாயிலாக விற்பனை செய்து அதிக லாபம் பெற வழிவகை செய்கிறது.
தெலங்கானா மாநிலக் கைத்தறி மற்றும் ஜவுளித் துறையுடன் இணைந்து பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்தவும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எங்களது நிறுவனம் கைத்தறிப் பொருட்களை ஆன்லைன் வாயிலாக விற்பனை செய்வதில் உதவுவதோடு மட்டுமல்லாமல் அக்கலைஞர்கள் சிறந்த வகையில் மேம்பட்ட தரத்தில் பொருட்களைத் தயாரிப்பதற்கான பயிற்சி உள்ளிட்ட பேராதரவும் வழங்கப்படும். இதன் மூலம் கைத்தறிக் கலைஞர்களின் தொழில் மேம்படுவதோடு அவர்களது வருவாயும் அதிகரிக்கும்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக