நள்ளிரவுப் போராட்டம்: காங்கிரஸ் அகமது பட்டேல் வெற்றி - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

நள்ளிரவுப் போராட்டம்: காங்கிரஸ் அகமது பட்டேல் வெற்றி


பலத்த சர்ச்சைகளுக்கும், போராட்டங்களுக்கும் நடுவே நேற்று ஆகஸ்டு 8 ஆம் தேதி நடந்த குஜராத் ராஜ்ய சபா தேர்தலில்...காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் வலதுகரமும் அரசியல் செயலாளருமான அகமது பட்டேல் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இத்தகவல் நேற்று நள்ளிரவு தாண்டியே உறுதியாகியிருக்கிறது.

பாஜக தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோர் நிச்சயிக்கப்பட்ட வெற்றியைப் பெற்ற நிலையில்... பல்வேறு போராட்டங்களைக் கடந்து அகமது பட்டேல் ஐந்தாவது முறையாக ராஜ்யசபாவுக்கு செல்கிறார்.

 நேற்று மாலை ஆறு மணியளவில் முடியவேண்டிய வாக்கு எண்ணிக்கை பாஜக தரப்பினரின் மூவ்களால் நள்ளிரவினைத் தாண்டிவிட்டது.

அமித் ஷா, ஸ்மிருதி இரானி ஆகிய இருவரும் முதல் இரு வேட்பாளர்கள் என்பதால் எளிதாக வெற்றி பெற்றனர். காங்கிரஸ் மூன்றாவதாக அகமது பட்டேலை நிறுத்தியது. ஆனால் பாஜக இந்த தேர்தலை சிக்கலாக்கும் நோக்கோடு... சமீபத்தில் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்த பல்வந்த் சிங் ராஜ்புத் என்ற தலைவரை நான்காம் வேட்பாளராக களம் இறக்கியது.

எப்படியாவது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி சோனியாவின் வலது கரமான அகமது பட்டேலை தோற்கடித்துவிட வேண்டும் என்பதே பாஜகவின் ஒரே திட்டம்.

இதன் ஒரு பகுதியாகத்தான் கடந்த மாதம் காங்கிரஸின் 51 எம்.எல்.ஏ.க்களில் 6 பேர் பதவி விலகினார்கள். மிச்சமிருக்கும் தனது எம்.எல்.ஏ.க்களில் ஒருவர் மறுத்துவிட மீதி 44 பேரை காங்கிரஸ் தலைமை பெங்களூரு கொண்டு சென்று ஹோட்டலில் வைத்து பாதுகாத்தது. அவர்களுக்கு பதினைந்து கோடி ரூபாய் வரை பாஜக தரப்பில் இருந்து பேரம் பேசப்பட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது.

இந்நிலையில் க்ளைமாக்ஸாக நேற்று நடந்த தேர்தலில்... இரு எம்.எல்.ஏ.க்கள் தாங்கள் வாக்களித்த பேலட் பேப்பர்களை அமித் ஷாவிடம் காட்டினர். இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. டெல்லியில் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டது. உடனடியாக பாஜகவும் பிரதமர் மோடிக்கு அடுத்த நிலையில் இருக்கும் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியது.

இருதரப்புப் புகார்களுக்குப் பிறகு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நேற்று இரவு வெளியிட்டுள்ள எட்டு பக்க அறிக்கையில்...

’’ஆகஸ்டு 8 ஆம் தேதி மாலை 5.19 மணிக்கு குஜராத் மாநிலங்களவை தேர்தல் அலுவலர்... ’காங்கிரஸ் கட்சியின் ஏஜெண்ட் சைலேஷ் பாய் பர்மர் தனக்கு எழுத்துபூர்வமான புகார் அளித்துள்ளதாக குறிப்பிட்டார். அப்புகாரில், ‘போலா பாய் கோஹில், ராகவ்ஜி பாய் பட்டேல் ஆகிய இரு எம்.எல்.ஏ.க்கள் தேர்தல் நடத்தை விதி 1961-ன் பிரிவு 39 AA வை மீறிவிட்டனர். அவர்கள் தங்களது பேலட் பேப்பர்களை தங்களது ஏஜெண்ட் தவிர்த்த மற்றவர்களிடம் காட்டியிருக்கிறார்கள். எனவே அவர்களது ஓட்டுகளை செல்லாதது என அறிவிக்க வேண்டும்’ என புகார் கொடுத்திருக்கிறார். இதை தான் நிராகரித்துவிட்டதாகவும் வாக்கு எண்ணிக்கையை தொடங்க அனுமதிக்கும்படியும் தேர்தல் அலுவலர் தேர்தல் கமிஷனிடம் கேட்டார்.

இந்நிலையில் மாலை 5.30 மணியவில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுர்ஜிவாலா,ஆர்.பி.என். சிங் ஆகியோர் அடங்கிய குழுவினர் டெல்லியில் தேர்தல் கமிஷனுக்கு வந்து, ‘எங்கள் புகாரை தேர்தல் அலுவலர் நிராகரித்தது சட்ட விரோதமானது. தேர்தல் கமிஷன் எங்கள் புகார் மீதான வீடியோ ஆதாரத்தை சரிபார்த்து அந்த இரு ஓட்டுகளை செல்லாததாக அறிவிக்கவேண்டும்’ என்று கோரினர். வேட்பாளர் அகமது பட்டேலும் தேர்தல் கமிஷனுக்கு மின்னஞ்சல் மூலம் புகார் அனுப்பினர்.

இந்நிலையில்... அருண்ஜெட்லி, ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் அடங்கிய பாஜக குழுவினர் தேர்தல் கமிஷனுக்கு வந்து, ‘ரிட்டனிங் ஆபீசர் எனப்படும் தேர்தல் அலுவலருக்குதான் ஓட்டுகளை பற்றி முடிவெடுக்க முழு அதிகாரம் உண்டு. எனவே ரிட்டனிங் ஆபீசரின் முடிவில் தலையிட தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம் இல்லை’ என்று புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து குலாம் நபி ஆசாத் தலைமையிலான குழுவினர் வந்து காங்கிரஸ் சார்பில் ஏற்கனவே கொடுத்த புகாரை மீண்டும் வலியுறுத்தினர். அருண் ஜெட்லி குழுவினர் மீண்டும் தேர்தல் கமிஷனுக்கு வந்து மீண்டும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி வாக்கு எண்ணிக்கையை தொடங்குமாறு கோரினர்.

இந்நிலையில் தேர்தல் ஆணையம் மக்கள் பிரதிநித்துவ சட்டப்படியும், உச்சநிதிமன்றத் தீர்ப்புப் படியும், தொடர்புடைய வீடியோ ஆதாரங்களின்படியும் ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்தது.

தேர்தல் நடத்தை விதிகள் 39 A, 39 AA ஆகியவற்றின்படி ராஜ்யசபா தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர் தனது வாக்குச் சீட்டை வாக்குப் பெட்டிக்குள் போடும் முன்பு தனது கட்சியின் அதிகாரபூர்வ ஏஜெண்டிடம் மட்டுமே காட்ட வேண்டும். மற்றவர்களிடம் அதை எக்காரணம் கொண்டும் காட்டிடக்கூடாது என்று தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது.

மேலும், மக்கள் பிரநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 66-ன்படி தேர்தல் நடத்தும் அலுவலர் தேர்தல் கமிஷனின் அறிவுறுத்தலுக்கு இணங்கவே செயல்பட வேண்டும்.

இந்நிலையில் அரசியல் சாசனம், சட்டம், நீதிமன்றத் தீர்ப்புகள், கள ஆதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் போலா பாய் கோஹில், ராகவ்ஜி பாய் பட்டேல் ஆகிய இரு எம்.எல்.ஏ.க்களின் வாக்குகள் செல்லாதது என்று அறிவிக்கப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட வேண்டும்’’ என்று தெரிவித்தது தேர்தல் கமிஷன்.

இதையடுத்து நேற்று இரவு 11 மணிக்கு மேல்தான் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

இதையடுத்து காங்கிரஸ் தரப்பு உற்சாகமானது. இரு ஓட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால்... மொத்த ஓட்டுகள் 176ல் இருந்து 174 ஆக குறைந்தன. இதனால் ஒவ்வொரு வேட்பாளரும் 44 ஓட்டுகள் பெற்றால் வெற்றி என்ற நிலை வந்தது. இதில் அகமது பட்டேல் காங்கிரஸ் கட்சியின் 43ஓட்டுகள், வெளியில் இருந்து ஒரு ஓட்டு என்று மொத்தம் 44 ஓட்டுகள் பெற்று மூன்றாவது வெற்றியாளர் ஆகிறார்.

பாஜக தலைவர் அமித் ஷா தான் வெற்றி பெற்றுவிட்டபோதும் அகமது பட்டேலை தோற்கடிக்க வேண்டும் என்று எண்ணி... வாக்கு எண்ணும் மையத்திலேயே இரவு நெடுநேரம் அமர்ந்திருந்தார். தேர்தல் ஆணையத்தின் உத்தரவைக் கேட்டதும் அவர் அதிருப்தி அடைந்தார்.

அகமது பட்டேல் ஆகஸ்டு 9 ஆம்தேதி இரவு 1.23 க்கு வெளியிட்டுள்ள ட்விட்டரில், ‘’இது என் வெற்றி அல்ல. ஆள் பலம், அதிகார பலம், மாநில அரசு இயந்திரத்தை வைத்துக் கொண்டு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற குஜராத் பாஜக அரசுக்குக் கிடைத்த தோல்வி’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், ‘’பாஜகவின் இந்த நிலைப்பாடு அவர்களின் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி, அரசியல் பயங்கரவாதத்தைக் காட்டுகிறது. பாஜகவின் இந்த சர்வாதிகார போக்குக்கு விரைவில் வருகிற குஜராத் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்’’ என்றும் ட்விட் செய்திருக்கிறார்.

இதற்கிடையில் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, ‘’தேர்தல் கமிஷனின் இந்த முடிவு ஏற்கத் தக்கது அல்ல. நாங்கள் இதை சட்ட ரீதியாக சந்தித்து எங்களுக்கான நீதியைப் பெறுவோம்’’ என்று தெரிவித்திருக்கிறார்.

எனவே இந்த விவகாரத்தை பாஜக நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்வது உறுதியாகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here