திமுக செயல்தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 26, 27ஆம் தேதிகளில் திருவாரூர் பயணம் மேற்கொண்டார். திருவாரூர் திமுக மாசெ பூண்டி கலைவாணன் மகள் திருமணத்தை நடத்தி வைத்த அவர், திருவாரூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.
திருவாரூரில் இருந்த ஸ்டாலினுடன் சசிகலாவின் தம்பி திவாகரன் அலைபேசியில் பேசியதாக ஒரு செய்தி பரவி டெல்டாவில் இருந்து டெல்லி வரை அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி டெல்டா வட்டாரங்களில் விசாரித்தோம்.
“திருவாரூர் வந்த ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, வேலு, முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவின் மகனும் மன்னார்குடி எம்.எல்.ஏவுமான டி.ஆர்.பி.ராஜா ஆகியோர்தான் எப்போதும் இருந்தனர்.
ராஜா மன்னார்குடிக்காரர். கட்சி என்ற அடிப்படையில் அவர் அதிமுகவுடன் முரண்பட்டிருந்தாலும் மன்னார்குடியில் இருக்கும் சசிகலா குடும்பத்தினர் பலருடன் ராஜாவுக்கு நல்ல தொடர்புண்டு. அந்த வகையில் திவாகரனுடனும் தொடர்பில்தான் இருக்கிறார் ராஜா. இது டெல்டாவைத் தாண்டி இருப்பவர்களுக்குத்தான் செய்தி. இங்கே இருப்பவர்களுக்கு இதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஏனென்றால் கட்சி தாண்டி சமுதாய ரீதியிலான பலத்த உறவு டெல்டாவில் எப்போதுமே உண்டு.
ஆனால், ஆச்சரியம் என்னவென்றால் திருவாரூர் வந்த ஸ்டாலினோடு டி.ஆர்.பி.ராஜாவின் ஒருங்கிணைப்பில் திவாகரன் பேசியதாக சொல்கிறார்கள். எடப்பாடி பழனிசாமியை முதல்வர் பதவியில் இருந்து அகற்றும் வரை ஓயமாட்டோம் என்று திவாகரன் பேசி வருகிறார். இந்த சூழ்நிலையில் திவாகரனின் குடும்பத்துக்கு நெருக்கமான டி.ஆர்.பி.ராஜா மூலமாக திவாகரன் - ஸ்டாலின் பேச்சு நடந்திருப்பதாகத் தெரியவருகிறது. இன்றைய அரசியல் சூழல் பற்றி அவர்கள் விவாதித்ததாகவும் சொல்கிறார்கள்” என்றனர்.
ஏற்கெனவே திமுகவுக்கும் தினகரனுக்கும் இந்த ஆட்சியை அப்புறப்படுத்துவது தொடர்பாக ரகசிய டீலிங் நடப்பதாக தகவல்கள் வரும் நிலையில், டெல்டா சூழலில் இப்படி ஒரு தகவலும் கசிகிறது. ஸ்டாலின் திருவாரூர் பயணத்தின்போது திவாகரனுடன் பேசினாரா என்று உளவுத்துறையிடம் முதல்வர் ரிப்போர்ட் கேட்டிருப்பதால் இந்த விவகாரம் அரசியல் உலகில் பெரும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. எடப்பாடி பழனிசாமி மீதான தாக்குதலை எந்த திசையில் இருந்து வேண்டுமானாலும் நிகழ்த்த தினகரன் தயாராகிவரும் நிலையில், இப்படி ஒரு பேச்சு நடந்திருந்தால் அது தமிழகத்தின் அரசியல் சூழலையே மாற்றிவிடும் என்பதே யதார்த்தம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக