வடகொரியா அரசு தொடர்ந்து ஏவுகணைச் சோதனைகளை நடத்தி, அமெரிக்காவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் நடந்துவருவதால், இதுவரை உலக நாடுகள் பார்த்திராதபடி கடும்
நடவடிக்கைக்கு ஆளாக வேண்டிவரும் என்று வடகொரியா அரசுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வடகொரியாவின் ஏவுகணைச் சோதனைகளுக்கு தென்கொரியா, அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான் உள்பட உலகின் பல்வேறு நாடுகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. ஆனால், அதைச் சற்றும் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து அணு ஆயுதச் சோதனைகளை வடகொரிய அரசு செய்துவருகிறது. அதையடுத்து கொரியா தீபகற்பத்தில் பெரும் பதற்றம் நிலவிவருகிறது. ஏவுகணைக்குள் அணு ஆயுதத்தைப் பொருத்தி, குறிப்பிட்ட இலக்கைத் தாக்குவதற்கான புதிய ஏவுகணையைக் கடந்த சில நாட்களுக்கு முன்பு வடகொரியா அரசு வெற்றிகரமாக ஏவியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலமாக, அமெரிக்காவைத் தாக்கக்கூடிய வல்லமை தனக்கு இருப்பதாக வடகொரியா நிரூபணம் செய்துள்ளது அமரிக்க அரசை எரிச்சலூட்டியது. மேலும், அமெரிக்கா ராணுவத்தளம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்த வடகொரியா திட்டமிட்டுள்ளதாகவும் அமெரிக்க அரசு புகார் கூறியது. அதையடுத்து, கடந்த சனிக்கிழமை, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வடகொரியா மீது புதிய பொருளாதார தடைவிதிக்கும் தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்தது. அமெரிக்காவின் பொருளாதாரத் தடைவிதிப்பால், வடகொரியாவின் ஆண்டு வருமானத்தில் 3 பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்படும் என்று தெரியவருகிறது.
இதற்குப் பதில் தெரிவிக்கும் வகையில், புதிய தடைகள் நாட்டின் இறையாண்மையைப் பாதித்துள்ளதாக வடகொரியா குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்காவின் எந்த ஒரு ராணுவ நடவடிக்கைக்கும் அணு ஆயுதம் மூலம் ஆயிரம் மடங்கு திருப்பி பதிலடி கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவின், நியூ ஜெர்சி மாகாணம் பெட்மின்ஸ்டரில் உள்ள தேசிய கோல்ப் கிளப்பில் அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று (ஆகஸ்ட் 8) செய்தியாளர்களிடம் பேசுகையில், அமெரிக்காவுடன் மோதல் போக்கை வடகொரியா தொடர்ந்து கடைப்பிடித்துவருகிறது. அமெரிக்காவை மிரட்டும் வகையில், வடகொரியா செயல்பட்டால் உலக நாடுகள் இதுவரை கண்டிராத கடும் நெருக்கடியை வடகொரியா சந்திக்க நேரிடும். அதனால் அமெரிக்காவுடன் மோதுவதை வடகொரியா நிறுத்திக் கொள்ள வேண்டும். மேலும், அந்நாட்டின்மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய காலகட்டம் நெருங்கியுள்ளது என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக