ப்ளஸ் ஒன் பொதுத் தேர்வைக் கட்டாயமாக்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குக்குத் தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
வரும் கல்வியாண்டு முதல் ப்ளஸ் ஒன் வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்றும் இந்தத் தேர்வில் தோல்வி அடைந்தால் அதைக் கல்லூரிகளில் நடைபெறும் அரியர் தேர்வு போல் ஜூன், ஜூலையில் நடக்கும் இடைநிலைத் தேர்வில் தேர்வு எழுதலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி ப்ளஸ் ஒன் வகுப்பில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்று தமிழக அரசு கடந்த மே 23ஆம் தேதி அரசாணை வெளியிட்டது.
இதை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கே.கே.ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு ஜூலை 19ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது மனுவை விசாரித்த நீதிமன்றம் இதுகுறித்து பதிலளிக்குமாறு பள்ளிக் கல்வித்துறைச் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பி வழக்கை விசாரணையை ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது
இந்த நிலையில் இந்த மனு மீதான விசாரணை நேற்று ஆகஸ்ட் 8ஆம் தேதி நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக, அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில் ப்ளஸ் ஒன் வகுப்பு பாடத்தை படிக்காததால் மாணவர்கள் உயர்கல்வி பயிலும்போது, கல்லூரி முதலாம் ஆண்டில் பெரும்பாலான பாடங்களில் தேர்ச்சி அடைவதில்லை. நீட் தேர்வில் கேட்கப்பட்ட வினாத்தாளில்கூட 40% கேள்விகள் ப்ளஸ் ஒன் வகுப்பு பாடங்களில் இருந்தே கேட்கப்பட்டது. ப்ளஸ் ஒன் வகுப்பு பொதுத் தேர்வை கட்டாயமாகுவதன்மூலம் நீட் உள்ளிட்ட போட்டி தேர்வுகளைத் தமிழக மாணவர்களால் எளிமையாக எதிர்கொள்ள முடியும்.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர்களிடம் கலந்தாலோசித்த பிறகே ப்ளஸ் ஒன் வகுப்பு பொதுத் தேர்வை கட்டாயப்படுத்தி அரசாணை வெளியிடப்பட்டது. இதன்மூலம், தமிழக மாணவர்களின் கல்வித் தரம் உயரும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் ப்ளஸ் ஒன் வகுப்பில் தோல்வியடைவோருக்குச் சிறப்பு வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், தோல்வியடைந்தாலும் அவர்கள் ப்ளஸ் டூ வகுப்புக்கு செல்ல அனுமதி உண்டு எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதை விசாரித்த நீதிபதிகள் வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக