புலித்தேவனின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ள சென்ற அதிமுக ஆதரவு எம்.எல்.ஏ-வும், முக்குலத்தோர் புலிப்படை தலைவருமான கருணாஸின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் திருவாடனை தொகுதியில் நின்று வெற்றிபெற்றவர் முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ், தொடர்ந்து அதிமுகவுக்கு ஆதரவளித்து வந்த கருணாஸ் சமீபத்தில் தன்னுடைய ஆதரவு தினகரனுக்கு என்பதை சூசகமாக தெரிவித்தார். மேலும் ஒரே நாளில் அதிமுக கூட்டணி எம்.எல்.ஏ-க்களான தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோருடன், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தினகரன், ஸ்டாலின் என எதிர் எதிர் துருவங்களாகிய மூவரையும் சந்தித்து பேரறிவாளனுக்கு பரோல் கிடைத்ததற்காக நன்றி தெரிவித்தார்.
இந்த சூழ்நிலையில் இன்று (செப்டம்பர்-1) சங்கரன் கோவிலை அடுத்த நெற்கட்டும் செவலில் ஆங்கிலேயரை எதிர்த்த புலித்தேவனின் 302வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, மாஃபா பாண்டியராஜன்,ராஜலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் கலந்துகொள்ள இவர்களுடன் வராமல் தன்னுடைய ஆதரவாளர்களுடன் தனியாக வந்தார் அதிமுக கூட்டணி எம்.எல்.ஏ-வான நடிகர் கருணாஸ். அங்கு அரசியல்வாதிகளின் கார்களை நிறுத்தி நடந்து செல்வதற்கென்று காவல்துறையினர் தனியாக ஒரு இடத்தை கொடுத்திருந்தனர். ஆனால் கருணாஸின் கார் அதைவிட முன்னோக்கி சென்றதால் அங்கிருந்த வாலிபர்கள் கருணாஸ் காரின் பின்பக்க கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்தனர்.இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டதால் காவல்துறையினர் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். ஏற்கனவே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற நடிகர் சங்க பொதுக்குழு கூட்ட மோதலிலும் கருணாஸின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக