மகாத்மா காந்தி கொலை: அந்த நான்காவது குண்டு யாருடையது? - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

மகாத்மா காந்தி கொலை: அந்த நான்காவது குண்டு யாருடையது?


மகாத்மா காந்தியின் உயிரைக் காப்பாற்றுவதற்காக அமெரிக்கா முயற்சித்ததா என்பது குறித்து அறிந்துகொள்ள உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

தேசப்பிதா காந்தியடிகள் கடந்த 1948ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் தேதி நாதுராம் கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கோட்சே, நாராயணன் ஆப்தே ஆகியோருக்குக் 1949 நவம்பர்15ஆம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. குற்றச்சாட்டு நிரூபணமாகாததால் சந்தேகத்தின் அடிப்படையில் வினாயக தாமோதர சாவர்க்கர் விடுவிக்கப்பட்டார்.

காந்தியைக் காப்பாற்ற அமெரிக்கா முயற்சித்ததா என்பதை அறிந்துகொள்ளும் பொருட்டு பங்கஜ் பத்னிஸ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். காந்தி கொலை குறித்துக் கடந்த 20 ஆண்டுக்கு மேலாக ஆராய்ச்சி செய்து வருபவர்தான் இந்த பங்கஜ் பத்னிஸ். வரலாற்று ஆராய்ச்சியாளரான பங்கஜ் ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில், காந்தி மீது 4 குண்டுகள் பாய்ந்ததாகவும், அதில் 3 குண்டுகள் கோட்சேவால் சுடப்பட்டது என்றும், 4ஆவது குண்டு யாருடையது என்றும் சந்தேகத்தை எழுப்பி இரண்டு மனுக்கள் தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

காந்தியைக் காப்பாற்ற அமெரிக்கா முயற்சித்ததா என்ற கேள்விக்கு விடைபெறும் பொருட்டு பொதுநல வழக்கை மும்பை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கானது கடந்த ஆண்டு ஜூன் மாதம் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து பங்கஜ் பத்னிஸ் தற்போது உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கைத் தொடுத்திருக்கிறார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: மகாத்மா காந்தி கொல்லப்பட்ட அன்றைய தினம், (30.1.1948) டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்திலிருந்து வாஷிங்டன் வெள்ளை மாளிகைக்கு 3 தந்திகள் அனுப்பப்பட்டுள்ளன. ஹெர்பர்ட் டாம் ரெய்னர் என்ற அதிகாரி காந்தி சுடப்பட்ட நேரத்தில், சம்பவ இடத்தில் இருந்துள்ளார். தப்பி ஓடிய கோட்சேவைப் பிடித்துக் கொடுத்ததும் அவர்தான். தூதரகத்துக்குத் திரும்பியதும் அன்று மாலையே தனது அறிக்கையைத் தந்தியாக அமெரிக்க அரசுக்கு அவர் தெரியப்படுத்தியுள்ளார். அதில், ‘இந்தியப் பாதுகாவலர்கள் உதவியுடன் காந்தி படுகொலை செய்யப்பட்டார்’ என்ற தகவலை ரெய்னர் குறிப்பிட்டுள்ளார். தனது 3ஆவது தந்தியில் காந்தியை யார் யார் சுட்டனர் என்ற தகவலையும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அந்தத் தந்தி ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. காந்தி கொலை விஷயத்தில் உண்மையான குற்றவாளிகள் யார் என்ற உண்மையை வெளிக்கொண்டு வரவும், இந்த விஷயத்தில் வெளிநாட்டுச் சதி இருந்துள்ளதா என்பதை அறியவும் ரெய்னரின் ரகசியத் தந்தியை பொதுவில் வெளியிட உத்தரவிட வேண்டும். இது தொடர்பாக அமெரிக்க வெள்ளை மாளிகைக்கும் மனு அனுப்பி உள்ளேன். அதேபோல், காந்தி கொலை தொடர்பான கபூர் கமிஷன் பல்வேறு உண்மைகளை வெளிக்கொண்டு வரவில்லை. எனவே, மீண்டும் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறி உள்ளார். இந்த மனு வரும் 6ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. மின்னம்பலம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here