நமது ஓய்வூதியத்தை பறித்திட முயற்சிக்கும் எதிரிகள் யார்? நண்பர்கள் யார்? ⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕ - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

நமது ஓய்வூதியத்தை பறித்திட முயற்சிக்கும் எதிரிகள் யார்? நண்பர்கள் யார்? ⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕

இந்திய நாடாளுமன்றத்தில் கடந்த 24-03-2011 அன்று ஓய்வூதிய நிதி முறைப்படுத்துதல் மற்றும் வளர்ச்சி ஆணைய மசோதா (PFRDA Bill, 2011), இடதுசாரிக் கட்சிகளின் வலுவான எதிர்ப்பினையும் மீறி ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகள் மற்றும் பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சி ஆகியவற்றின் ஆதரவோடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பொதுவாக ஒட்டு மொத்த உழைப்பாளி மக்களுக்கும், குறிப்பாக அரசு ஊழியர்-ஆசிரியர்களுக்கும் ஏற்கனவே உள்ள ஓய்வூதிய உரிமையைப் பறிக்கும் வித்த்தில் 2003 முதல் இந்த புதிய ஓய்வூதியத் திட்டத்தை சட்டமாக்க பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும் தொடர்ந்து முயற்சித்து வந்துள்ளன.

எனினும், நாடாளுமன்றத்திற்குள் இடதுசாரி கட்சிகளின் வலுவான எதிர்ப்பும், நாடாளுமன்றத்திற்கு வெளியே நாடு தழுவிய உழைப்பாளி மக்களின் ஒன்றுபட்ட போராட்டங்களும், இந்த மசோதாவை சட்டமாக்க விடாமல் தடுத்து வந்துள்ளன.
https://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
எனினும், ஐ.எம்.எப்., உலக வங்கி, பன்னாட்டு நிதி மூலதனம் மற்றும் இந்திய நாட்டின் பெரு முதலாளிகளின் நிர்ப்பந்தங்களுக்கு அடி பணிந்து மத்திய அரசு இந்த மசோதாவினை தற்போது மீண்டும் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. உழைப்பாளி மக்களுக்கு பாதகமான இந்த மசோதாவை திரும்பப் பெற வைப்பதற்கு நாடு தழுவிய அளவில் வலுவான, விடாப்பிடியான ஒன்றுபட்ட போராட்டங்கள் நடத்தப்பட வேண்டியது இன்றைய கால கட்டத்தில் உழைப்பாளி மக்களின் குறிப்பாக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் வரலாற்றுக் கடமையாக முன்னுக்கு வந்துள்ளது.

எனவே இந்த புதிய ஓய்வூதியத் திட்டம் குறித்து ஒரு அழுத்தமான புரிதலை அனைத்து பகுதி ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் மத்தியில் உருவாக்கும் கடப்பாடு நம் முன்னே உள்ளது.

ஓய்வூதியம் என்றால் என்ன?
🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑

ஒரு குறிப்பிட்ட வயது வரை பணியாற்றிய பின்பு, வயது முதிர்வின் காரணமாக பணியிலிருந்து விடுவிக்கப்படும் ஒரு ஊழியர், அதன் பின்னர் வாழ்க்கையை நடத்துவதற்கு தேவையான ஊன்றுகோலாக, ஒரு சமூக பாதுகாப்பாக, அவரது உழைப்பின் பயனை பல்லாண்டுகளாக பெற்று வரும் நிர்வாகத்தால் வழங்கப்படுவதே ஓய்வூதியமாகும்.

இந்த ஓய்வூதியம் ஒரு கருணைத் தொகையோ, இலவசமோ அல்ல என்பதை உச்ச நீதிமன்றம்     AIR 1983,SC 130 என்ற வழக்கில் வழங்கிய தீர்ப்பில் பின் வருமாறு உறுதி செய்துள்ளது.
ஓய்வூதியக் கோட்பாடு என்பது இருக்கக் கூடிய ஆதாரங்களைக் கொண்டு ஓய்வு பெற்றவர்கள் வேறு எதிர்பார்ப்பு இல்லாமல் கௌரவமான, சுதந்திரமான, சுயேச்சையான சுயமரியாதையுடன் கூடிய வாழ்க்கையை நடத்த உதவக் கூடியதாகவும், பணி ஓய்வுக்கு முன்னர் இருந்த வாழ்க்கைத் தரத்திற்கு சம்மான வாழ்க்கைத் தரத்தை உத்தரவாதம் செய்வதாகவும் அமைய வேண்டும்.

ஓய்வூதியம் என்பது கருணைத் தொகை அல்ல. அது சமூக ரீதியான சட்ட ரீதியானதொரு உறுதிப்பாடாகும். இது வேலை அளித்தவருடைய விருப்பத்தைப் பொறுத்தோ, காருண்யத்தைப் பொறுத்தோ வழங்கப்படக் கூடியதல்ல; மாறாக கடந்த காலத்தில் ஆற்றிய பணிக்கான ஊதியமாகவும், ஒரு சமூக நலத்திட்டமாகவும், சமூக பொருளாதார நீதியை உழைப்பாளிக்கு அவருடைய முதிர்ந்த காலத்தில் வழங்கக் கூடியதாகவும் அமைய வேண்டும்.

இக்கோட்பாடை நீதியரசர் இரத்தினவேல்பாண்டியன் தலைமையிலான ஐந்தாவது ஊதியக்குழு ஏற்றுக் கொண்டு அதன் அறிக்கையின் மூன்றாம் பாகம் பத்தி 127.6இல் ஓய்வூதியம் என்பது சட்ட ரீதியான, பிரிக்க முடியாத சட்டபூர்வமாக அமல்படுத்த தகுந்த உரிமை என பதிவு செய்துள்ளது.

புதிய ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன?
🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩

உலகவங்கி, ஐ.எம்.எப்., பன்னாட்டு நிதி மூலதனம் மற்றும் உள்நாட்டு பெருமுதலாளிகளின் நிர்ப்பந்தத்தின் பேரில், மத்திய அரசு தற்போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மசோதாவின் மூலம் அமல்படுத்த முயற்சிக்கும் புதிய ஓய்வூதியத் திட்டம் ’வரையறுக்கப்பட்ட பங்களிப்பு ஓய்வூதியத்திட்டம்’ (Defined Contributory Pension) என அழைக்கப்படுகின்றது.
இத்திட்டத்தின் கீழ், ஒரு சமூகப் பாதுகாப்பாக, சட்டபூர்வமான உரிமையாக வழங்கப்படக்கூடிய ஓய்வூதியம் என்பது ஒரு சந்தை சரக்காக மாற்றப்படுகிறது.

ஓய்வூதியம் பெறுவதற்காக பணியிலிருக்கும் ஊழியர் தனது பணிக்காலத்தில் ஒவ்வொரு மாதமும் அடிப்படைச் சம்பளம் மற்றும் பஞ்சப்படியில் 10 விழுக்காட்டினை ஓய்வூதிய நிதிக்கு செலுத்த வேண்டும். அரசாங்கமும் இதற்கு சமமான தொகையை இந்நிதிக்கு செலுத்தும். இவ்வாறு செலுத்தப்படக் கூடிய தொகை அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படாமல், தனியார் ஓய்வூதிய மேலாளர்கள் (Private Fund Managers) வசம் ஒப்படைக்கப்படும்.

அவர்கள் இத்தொகையை பங்குச் சந்தையில் முதலீடு செய்து, அதில் கிடைக்கும் நிதியிலிருந்து ஓய்வூதியம் வழங்கப்படும்.

புதிய பென்சன் திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள்
இந்த புதிய பென்சன் திட்டத்தால் ஊழியர்கள் ஒவ்வொரு மாதமும் 10விழுக்காடு ஊதிய வெட்டை எதிர் கொள்ள வேண்டியிருக்கும்.
இத்திட்டத்தின் கீழ், ஓய்வு பெறும் நாளில் வழங்கப்படத்தக்க ஓய்வூதியம் அவ்வப்போது பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டதாக இருக்கும்.

ஒவ்வொரு மாதமும் பெறக்கூடிய ஓய்வூதியம் உறுதியாக வரையறுக்கப்பட்ட தொகையாக இருக்காது.
இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படக்கூடிய ஓய்வூதியம் குறித்து மத்திய மாநில அரசுகள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எவ்வித உத்தரவாதமும் வழங்காது. அதாவது பங்கு வர்த்தகச் சூதாடிகளின் ஊகபேர வர்த்தக நடவடிக்கைகளுக்கு துணை போவதன்றி ஊழியர்களுக்கு இதனால் எவ்வித நன்மையும் இல்லை.

மேலும் தற்போது உள்ள ஓய்வூதியத் திட்டத்தில் பெற்று வரக்கூடிய பணிக்கொடை (Gratuity), தொகுப்பு ஊதியம் (Commutation), குடும்ப ஓய்வூதியம் (Family Pension) போன்றவை குறித்து இப்புதிய ஓய்வூதியத்திட்டத்தில் எவ்வித உத்தரவாதமும் வழங்கப்படவில்லை.
தவிரவும், ஒரு ஊழியர் எந்த வயதில் பணியை விட்டுச் சென்றாலும், அவர் பதவியிலிருந்து வயது முதிர்வின் அடிப்படையிலான பணி ஓய்வு பெறக்கூடிய நாள் முதல்தான் புதிய பென்சன் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் என்பது வழங்கப்படத்தக்கதாகும்.
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
இதனால் உண்மையில் பணியை விட்டுச் சென்ற நாள் முதல் வயது முதிர்வின் அடிப்படையிலான பணி ஓய்வு நாள் வரை ஊழியர்கள் ஓய்வூதியம் பெற முடியாது.
தற்போது கட்டாயமாக உள்ள வைப்பு நிதி, புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் விருப்புரிமை சார்ந்ததாக (Optional) மாற்றப்படுகிறது.
இந்த வைப்பு நிதிக்கு அரசின் பங்களிப்பு ஏதும் இருக்காது. இதனால் வைப்பு நிதியில் சேமிப்பு என்பது முற்றாக இல்லாமல் போகக் கூடிய அபாயமும் ஏற்படுகிறது.

ஏன் இந்தத் திட்டம் கொண்டு வரப்படுகிறது?
📍📍📍📍📍📍📍📍📍📍📍📍📍📍📍

1991 முதல் மத்திய அரசாங்கம் அமல்படுத்தி வரும் சந்தைப் பொருளாதாரம், உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் மற்றும் தனியார்மயமாக்கல் ஆகிய நாசகார கொள்கைகளின் ஒரு அம்சம்தான் இந்த புதிய ஓய்வூதியத் திட்டமாகும்.

கோடிக்கணக்கான ஊழியர்களின் வருங்கால வாழ்க்கைச் சேமிப்பிற்கான ஓய்வூதிய நிதியைத் தனியாருக்கு மடைமாற்றம் செய்வதும் அதன் மூலமாக இந்நிதியை பங்கு வர்த்தக சூதாட்டத்தில் ஈடுபடுத்தி தனியார் நிறுவனங்கள் கொள்ளை இலாபம் சம்பாதிக்க வழிவகுப்பதுமே இதன் உண்மையான நோக்கமாகும்.

இந்த அளப்பரிய சேமிப்பினை நாட்டின் வளர்ச்சி மற்றும் நலத் திட்டங்களுக்கு பயன்படுத்தாமல், தனியார் நிறுவனங்கள் கொள்ளை அடிப்பதற்கு வழி வகுத்துக் கொடுக்கும் ஒரு மோசடித்தனமே இத்திட்டத்தின் உள்நோக்கமாக உள்ளது. முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில்கிளிண்ட்டனின் முதன்மைப் பொருளாதார ஆலோசகரும், நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதையுமான ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் என்பவர்,

”ஓய்வூதிய நிதியை தனியார் மயமாக்குவது ஊழியர்க்கு உகந்ததல்ல; அரசிற்கும் ஆதாயம் தரத்தக்கதல்ல; மாறாக தனியார் நிதி மூலதனம் மேலும் மேலும் உழைப்பாளி மக்களின் சேமிப்பை சுரண்டி கொழுப்பதற்கே அது உதவும்” என்று கூறியுள்ளதினை இங்கு நினைவு கூர்வது பொருத்தமானதாக இருக்கும்.

ஆக மொத்தத்தில் கோடிக்கணக்கான உழைப்பாளி மக்களின், ஊழியர்களின் ஓய்வூதியத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதற்கே இத்திட்டம் கொண்டு வரப்படுகிறது.

இத்திட்டத்தின் பின்னணியில் இருப்பவர்கள் யார்?
🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮

உலகம் முழுவதும் தனது கொடும்கரங்களை நீட்டி வரும் நிதி மூலதனம் வளரும் நாடுகளின் செல்வாதாரங்களை கொள்ளையடிக்கப் பயன்படுத்தும் நவீன யுக்தியே உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் மற்றும் தனியார் மயமாக்கல் என்ற கோட்பாடுகள் ஆகும்.

ஏகாதிபத்தியத்தின் நலன்களைப் பாதுகாத்து வரும், அவற்றின் ஊதுகுழல்களாக செயல்பட்டு வரும் உலக வங்கி, ஐ.எம்.எப். மற்றும் உலக வர்த்தக அமைப்பு போன்றவற்றின் மூலமாக இக்கோட்பாட்டுகளைப் பின்பற்றுமாறு உலக நாடுகள் மீது கடுமையான நிர்ப்பந்தங்கள் செலுத்தப்படுகின்றன.

இந்த நிபந்தனைகள் மற்றும் நிர்ப்பந்தக்களுக்குட்பட்டு செயல்படக் கூடிய நாடுகளின் ஆட்சியாளர்கள் இத்தகைய நாசகர திட்டங்களை தங்கள் நாடுகளில் அமல்படுத்தியுள்ளனர்.
இந்தியாவிலும் இந்த புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான முயற்சிகள் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக் காலத்திலேயே தொடங்கி விட்டன.

டிசம்பர் 2003இல் பாரதிய ஜனதா கட்சி அரசு புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கான அவசரத் திட்டத்தை பிறப்பித்தது. 2004 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை அகற்றி ஆட்சி பொறுப்பேற்ற காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2005 மார்ச் மாதத்தில் புதிய பென்சன் திட்டத்திற்கான மசோதாவை தாக்கல் செய்தது.

இந்த நடவடிக்கைகளுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலும் அங்கம் வகித்திருக்கக் கூடிய தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள் தொடர்ந்து ஆதரவளித்து வந்துள்ள நேரத்தில் உழைப்பாளி மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வரும் இடதுசாரிக் கட்சிகள் மட்டுமே இத்தகைய நாசகார நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து தங்களது எதிர்ப்பினைத் தெரிவித்து வந்துள்ளன.

குறிப்பாக நாடாளுமன்றத்தில் புதிய ஊதிய திட்டத்திற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ள ஒவ்வொரு நிகழ்விலும் (2005, 2009 மற்றும் 2011) மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மசோதா தாக்கல் செய்யப்படுவதை எதிர்த்து கடுமையாகப் போராடியுள்ளனர்.
தற்போது 24-03-2011 அன்று நாடாளுமன்றத்தில் புதிய ஓய்வூதிய திட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்ட போதும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் பாசுதேவ் ஆச்சார்யா இதனை கடுமையாக எதிர்த்துள்ளார்.

அவரது தீவிரமான எதிர்ப்பு காரணமாக இம்மசோதா தாக்கல் செய்யப்படுவதற்கே நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்த வேண்டிய நிலை உருவானது. மொத்தம் உள்ள 534 நாடாளுமன்ற உறுப்பினர்களில் அன்றைய தினம் 159 உறுப்பினர்கள் மட்டுமே அவையில் இருந்துள்ளனர். இந்த வாக்கெடுப்பில் ஆளும் கட்சியான காங்கிரஸ், பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ.க. மற்றும் இவற்றின் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த 115 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இம்மசோதாவைத் தாக்கல் செய்வதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

அதே நேரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்த 43 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இந்த மசோதாவை தாக்கல் செய்வதற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

செய்ய வேண்டியது என்ன?
➖➖➖➖➖➖➖➖➖

நாடாளுமன்றத்தில் இந்த மசோதா சட்டமாக்கப்படாத நிலையிலேயே, வெறும் நிர்வாக உத்தரவு மூலமாகவே மத்திய அரசும், இதர 17 மாநில அரசுகளும் புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி நாடாளுமன்ற ஜனநாயக நடைமுறையினையே கேலிக்கூத்தாக்கியுள்ளனர்.

அதே நேரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான மேற்கு வங்கம், திரிபுரா மற்றும் கேரள மாநிலங்களில் உள்ள இடதுசாரிக் கட்சி அரசாங்கங்கள் மட்டுமே ஊழியர்களைப் பாதிக்கக்கூடிய இப்புதிய ஓய்வூதியத் திட்டத்தை தங்கள் மாநிலங்களில் அமல்படுத்துவதில்லை என்ற உறுதியான நிலையினை எடுத்துள்ளன.
இத்திட்டத்தை முதலில் அமல்படுத்துகின்ற போது 1-1-2004 முதல் அரசுப்பணியில் சேர்வோருக்கு மட்டும் எனக் கூறினர். தமிழக அரசு 1-4-2003 முதல் அமல்படுத்தப்படும் என அறிவித்தது.

ஆனால் மத்திய அரசு ஆறாவது ஊதியக் குழுவிற்கு விதிக்கப்பட்ட ஆய்வெல்லை வரையறையில் ஏற்கனவே ஓய்வு பெற்றவர்களுக்கும், 1-1-2004க்கு முன்னர் பணியில் சேர்ந்து இனிமேல் ஓய்வு பெற இருப்பவர்களுக்கும் இத்திட்ட்த்தினை விரிவுபடுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்குமாறு தெரிவித்திருந்தது.

எனவே இம்மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், அனைத்து ஊழியர்களையும் பாதிக்கக் கூடியதாக இருக்கும் என்ற எச்சரிக்கையினையும் ஊழியர்களிடத்தில் எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது.
தானடித்த மூப்பாக ஓய்வூதியத்தை தனியார் மயமாக்கும் மசோதாவை தாக்கல் செய்துள்ள காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும், இந்த மசோதாவை தாக்கல் செய்திட ஆதரவளித்த பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் சரியானதொரு பாடத்தை கற்பிப்பது என்பது இந்த தேசத்தின் குறிப்பாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் தலையாய கடமையாக முன்னுக்கு வந்துள்ளது.

இந்த மசோதாவிற்கு எதிராக நாடு தழுவிய அளவில் வலுவான ஒன்றுபட்ட போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆயத்தமாக வேண்டுமென அறை கூவி அழைக்கின்றோம்.
அது போன்றே நமது வருங்கால வாழ்க்கையை பங்கு வர்த்தக சூதாட்டத்தில் பணயம் வைக்க முற்பட்டுள்ள காங்கிரஸ், பா.ஜ.க. மற்றும் அவற்றின் கூட்டணிக் கட்சிகளுக்கு எதிராகவும்,
உழைப்பாளி மக்களின் வாழ்க்கைக்கு ஆதரவாக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் மட்டுமே தொடர்ச்சியாக ஓய்வூதியத்தை தனியார்மயமாக்கும் முயற்சிகளுக்கு எதிரான போராட்டங்களின் வாயிலாக நம்மை பாதுகாத்து வருகின்றனர் என்ற உண்மைகளை கவனத்தில் கொண்டு நமது ஓய்வு கால பாதுகாப்பினை முன்னிறுத்தி நமது நண்பர்கள் யார்? எதிரிகள் யார்? என சரியாக மதிப்பீடு செய்து, கடந்த காலம் கடந்து விட்டது,

இனி எதிர்காலத்தைப் பற்றிய கவலையுடன்
செயல்பட வேண்டியுள்ளது என்ற புரிதலோடு நம்முடைய நமது ஜனநாயகக் கடமைகளை நிறைவேற்றும் போது பயன்படுத்திட வேண்டும்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட உழைப்பாளி மக்களின் நலன்களுக்கு எதிராக ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்கள் செயல்படுவதைத் தடுத்து நிறுத்திட வேண்டுமெனில், நாம் விழிப்புணர்வுடன் இருந்திட வேண்டும்.

உள்நாட்டு, பன்னாட்டு பெருமுதலாளிகளின் நலன் காத்திடவும், பங்கு வர்த்தகச் சூதாடிகளுக்கு ஆதராவாகவும் செயல்பட்டு வரும் அரசியல் கட்சிகளை அடையாளம் கண்டு கொள்ளும் வண்ணமும், நமது ஜனநாயகக் கடமை மூலம் ஊழியர் விரோத ஆட்சியாளர்கள் யாராக இருப்பினும் தொடர்ந்து நிம்மதியாக ஆட்சியதிகாரத்தில் இருக்க முடியாது என்பதை ஆட்சியாளர்களுக்கு உணர்த்திடும் வண்ணமும் நம்முடைய செயல்பாடுகள் அமைந்திட வேண்டும்.

🛡🛡🛡🛡🛡🛡🛡🛡🛡🛡🛡🛡🛡🛡

சிந்திப்பீர்!                                                           செயல்படுவீர்!

உழைப்பதும் உழைப்பிற்கேற்ற
ஊதியம் கேட்பதும்

ஓர் பழிப்பில்லா உரிமை – அதுவும்
பாதிக்கப்பட்டால் சங்கு முழங்குதல் கடமை

போர் முகம் அஞ்சி உரிமை ஏதும்
இழப்பது கொடுமை – இழந்தும் இளிப்பது
மடமை; சிறுமை

வெளியீடு: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here