கடலில் எண்ணெய் கசிவுகளை அகற்ற உதவும் வகையில் சென்சாருடன் எளிதில் இயக்கக்கூடிய கருவி ஒன்றைக் கண்டுபிடித்ததற்காக மதுரை லக்ஷ்மி பள்ளியைச் சேர்ந்த சாகித்திய நிருபன், முத்து ஐஷ்வர்யா மற்றும் எல்.கோமதி ஆகியோர் அடங்கிய குழுவுக்கு இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கான முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் கராக்பூர் ஐஐடியில் இளம் கண்டுபிடிப்பாளர்கள் என்ற தலைப்பில் தேசிய அளவிலான போட்டி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மதுரை மாணவர்கள் முதல் பரிசினை வென்றுள்ளனர்.
“சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது குறித்து ஒரு செயல் திட்டத்தை உருவாக்க நினைத்தோம். சமீபத்தில் எண்ணூர் துறைமுகத்தில் இரு கப்பல்கள் மோதிய விபத்தில் கச்சா எண்ணெய் கடலில் கலந்தது. இதைத் தொழில்நுட்பம் மூலம் அகற்ற முடியாமல் ஊழியர்கள் வாளியாலும், கைகள் மூலமும் அகற்றினர். இந்தச் செயல் அபாயகரமானது. எனவே இதைத் தடுக்கும்விதமாகத் தானியங்கி எண்ணெய் சேகரிக்கும் இயந்திரத்தை உருவாக்கத் திட்டமிட்டோம்” என்று மாணவி கோமதி கூறினார்.
“சென்சாருடன் கூடிய இந்த இயந்திரம் நகர்வதற்காக இரு சக்கரங்கள் பொருத்தப்பட்டிருக்கும். 1.25 லிட்டர் திறன் கொண்ட சரிவகத் தொட்டி உள்ளது. இயந்திரத்தில் உள்ள மோட்டார் சர்கியூட்ஸ் இரண்டு கடல் மைல்கள் வரை நீரில் மிதக்க உதவும்.
இதை நீரில் செயல்படுத்தும்போது, சென்சார் எண்ணெயைக் கண்டு பிடிக்கும். அவ்வாறு கண்டுபிடித்துவிட்டால், மோட்டார் எண்ணெய் கலந்த நீரை உறிஞ்சி தொட்டியினுள் நிரப்பும். தொட்டியின் கொள்ளளவு நிரம்பிவிட்டால் சக்கரங்கள் பின்னோக்கிச் சுழன்று கரையை வந்தடையும். நீரை விட எண்ணெய் அடர்த்தியானது என்பதால் அது தொட்டியின் அடியினுள் தங்கிவிடும். கடலில் ஆழமான இடத்தில் இருக்கும்போது எண்ணெயைத் தொட்டியில் இருந்து பிரித்தெடுப்பது கடினம். எனவே ஆழமற்ற இடத்துக்குக் கொண்டு வரப்பட்டு எண்ணெயைப் பிரித்தெடுக்கும் வகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது” என்று ஐஷ்வர்யா விளக்கமளித்தார்.
500 பங்கேற்பாளர்கள் கலந்துகொண்ட இந்தப் போட்டியில் மதுரை மாணவர்கள் குழு முதலிடத்தைப் பிடித்துள்ளது.
“இறுதிச் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு அணிகளில் நாங்களும் இடம் பிடித்திருந்தோம். மூன்று மாதங்கள் இரவும் பகலும் வேலை செய்து வென்றுள்ளோம். அலுமினிய கம்பிகள், அக்ரிலிக் ஷீட்ஸ், பழைய பொருள்கள் மற்றும் பெயின்ட் ரோலர்ஸ் ஆகியவற்றை வைத்து மட்டுமே இந்த மாதிரி இயந்திரத்தை உருவாக்கினோம். இதற்கு ரூ.8,000 மட்டுமே செலவானது” என்று நிருபன் கூறினார்.
“பல அறிவியல் விதிகள் மற்றும் கோட்பாடுகளைப் பயன்படுத்துவதற்கு முன்னர் மாணவர்கள் நிறைய ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர்” என்று லக்ஷ்மி பள்ளியின் ஆசிரியரான கிரியா தெரிவித்தார். மேலும், “நான் அடிப்படையில் ஒரு பொறியாளர். என்னால் மாணவர்களுக்கு உதவ முடிந்தது மகிழ்ச்சியாக உள்ளது. இந்தச் செயல் திட்டத்திற்காகக் கடைசி வரை போராடினோம்” என்று கூறினார்.
லட்சுமி பள்ளியின் தலைமை ஆசிரியர் சாந்தி மோகன், “பள்ளிக்கும், மாநகராட்சிக்கும் பெருமை வாய்ந்த விஷயம் இது. பொதுவாக 10ஆம் வகுப்பு மாணவர்கள் போட்டிகளில் கலந்து கொள்ளாமல் இருக்கிறார்கள். ஆனால், இந்தக் குழு கடுமையாக உழைத்தது சாதனை படைத்துள்ளது” என்று தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக