*-தமிழ் இணைய செய்திகள்-*
*_🐯🇮🇳🕊அலட்சியம் காட்டும் அதிகாரிகள் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு தாராளம்_*
*-சிவகாசி-*
பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடையிருந்தும் அதிகாரிகள் அலட்சியத்தால் விருதுநகர் மாவட்டம் முழுவதும் பிளாஸ்டிக் கேரி பை, டீ கப் தாராளமாக விற்க மற்றும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பிளாஸ்டிக், நம்மை மட்டுமின்றி இயற்கை வளங்களையும் அழித்து வரும் ஒரு விஷம பொருளாகும். இந்த காலகட்டத்தில் மனிதன் பயன்படுத்தக் கூடிய இன்றியமையாத பொருட்களில் பிளாஸ்டிக்கும் ஒன்றாகி விட்டது. அந்தளவிற்கு பால் பாக்கெட், பார்சல் சாப்பாடு, பழங்கள், மட்டன் சிக்கன் ஆகியவற்றை கேரி பையில் வாங்குவது, பிளாஸ்டிக் கப்பில் டீ அருந்துவது என அனைத்திலும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து விட்டன. வாழை இலையில் சாப்பிட்ட காலம் மாறி, தற்போது பிளாஸ்டிக் பேப்பரில் சாப்பிடும் நிலைக்கு வந்து விட்டோம். ஏன்... மனம் வீசும் பூக்களைக் கூட கேரி பையில் போட்டு தருவதால் அந்த பூக்களின் மனம் கூட நச்சுத்தன்மை உண்டாகிறது.
மக்காத இந்த குப்பை நிலத்தடியில் மழைநீர் இறங்குவதை தடுப்பதால் நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. மண் வளமும் பாதிப்பிற்குள்ளாகி இயற்கை வளமும் சீரழிந்து வருகிறது. பிளாஸ்டிக் பொருட்களை குப்பைகளோடு சேர்த்து எரிப்பதால் அதிலிருந்து வெளியேறும் நச்சுப்புகை மூச்சுத்திணறல் ஏற்படுவதும் மட்டுமில்லாமல் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட முக்கிய காரணியாக விளங்குகிறது. தவிர கால்நடைகள் பிளாஸ்டிக் பொருட்களை உண்பதால் வயிற்று பிரச்னை ஏற்பட்டு உயிரிழந்த சம்பவங்களும் நடந்துள்ளன.
பயங்கர நச்சுத்தன்மையை கொண்ட பிளாஸ்டிக் பொருட்களை சிவகாசியில் தயாரிப்பதை ஒழிக்க சுகாதாரத்துறை இதுவரை தீவிர நடவடிக்கை எடுக்காதது தான் கவலைக்குரிய விஷயம். பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்க பிளாஸ்டிக் ஒழிப்பு பிரசாரங்கள் நடத்தப்பட்டன. தடையை மீறியும் பயன்படுத்துபவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் மகளிர் குழு, தொண்டு நிறுவனங்கள் மூலம் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது. ஆனால் சிறிது நாட்கள் மட்டுமே இந்த தடை அமலில் இருந்தது. அதன்பிறகு மாவட்டத்தின் பல பகுதிகளில் வழக்கம்போல் பிளாஸ்டிக் பொருட்கள் புழக்கத்திற்கு வந்து விட்டன. குறிப்பாக, நகர் பகுதிகளில் தான் பிளாஸ்டிக் பொருட்களின் தயாரிப்பும், பயன்பாடு மிகவும் அதிகமாக உள்ளது.
எனவே பிளாஸ்டிக் ஒழிப்பை முற்றிலும் தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் கூறுகையில்: கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் காய்கறிகள் வாங்க துணிப்பை கொண்டு வருவதில்லை. நாங்களும் கேரிபை தரமறுத்தால் அந்த கடையில் தருகிறார்கள் எனக்கூறி சென்று விடுகின்றனர். வாடிக்கையாளர்கள் வரவில்லை என்றால் வியாபாரம் பாதிக்கிறது. சுகாதாரத்துறை அதிகாரிகள் அனைத்து கடைகளையும் கேரிபை பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் பிளாஸ்டிக் பொருட்கள் புழக்கம் முற்றிலும் ஒழியும் என்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக