சிவகாசி : சிவகாசி பகுதியில் பட்டாசு, தீப்பெட்டி, காகித ஆலைகள் ஏராளமாக இயங்கி வருகின்றன. இங்கு தயாரிக்கப்படும் பட்டாசுகள், தீப்பெட்டிகள், பிரிண்டிங் பொருட்களை சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், டெல்லி, மும்பை, ஐதரபாத், மைசூர் உள்ளிட்ட பல்வேறு வெளிமாநிலங்களைச் சேர்ந்த நகரங்களுக்கும் தினசரி நுாற்றுக்கணக்கான லாரிகளில் ஏற்றிச் செல்கின்றனர்.
இதேபோல, வெளிமாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து பேப்பர் லோடுகளை சிவகாசிக்கு கொண்டு வந்து இறக்குகின்றனர். இவ்வாறு வரும் சில லாரிகளில் ஓவர்லோடு ஏற்றுவதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. கூடுதல் வாடகைக்கு ஆசைப்பட்டு, கூடுதல் லோடு ஏற்றி வரும் லாரிகள், சிலநேரங்களில் விபத்துகளில் சிக்குகின்றன. கூடுதல் லோடு ஏற்றிச் செல்லும் லாரிகளில், அதிகாரிகளுக்கு கொடுப்பதற்காக வாடகையோடு தனியாக பணமும் கொடுத்து அனுப்பப்படுகிறது.
ஓவர் லோடு ஏற்றிச்செல்லும் லாரிகளில், சரியாக தார்ப்பாய் போட்டு மூடாததால் லோடு சரிந்து விழுகிறது. இதனால், லாரியின் பின்வரும் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் ஏற்படுகிறது. எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஓவர் லோடு ஏற்றும் லாரிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து சமூக ஆர்வலர் ஜெயக்குமார் கூறுகையில், ‘வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் அறிவுறுத்தப்படும் லோடுகளை மட்டுமே ஏற்றிச்செல்ல வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால், சிலர் செலவு, நேரமின்மை ஆகியவற்றை காரணமாகக்கூறி, ஏற்ற வேண்டிய அளவை விட கூடுதல் பொருட்களை அதிகளவு ஏற்றி அனுப்புவது தொடர்கதையாகி வருகிறது. விதிகளை காற்றில் பறக்க விடுவதால், விபத்துகள் அதிகளவில் நடக்கின்றன’ என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக