பொது விநியோகத் திட்டத்தில் சிறு தானியங்களை மக்களுக்கு வழங்கிட மத்திய அரசு முடிவு செய்துள்ளதைத் தமிழகத்தைச் சேர்ந்த பாரம்பரிய வேளாண் ஆர்வலர்கள் பெருமகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர்.
கிராமப் பகுதிகளில் பிரபலமான கம்பு, சோளம், கேழ்வரகு போன்ற சிறு தானிய வகைகள் தற்போது நகர்வாழ் பகுதிகளிலும் பிரபலமாகி வருகின்றன. ஆனால், வரகு, சாமை, திணை, குதிரைவாலி போன்றவை இன்னமும் பெரும்பகுதி மக்களிடையே சென்றடையவில்லை. அதனால் இவற்றை நாடு முழுவதும் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் மக்களுக்கு வழங்கிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை இதற்கான அறிவிப்பைக் கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி மத்திய அரசிதழில் வெளியிட்டிருக்கிறது.
இதுகுறித்து இயற்கை வேளாண் ஆர்வலர் அறச்சலூர் செல்வம், செய்தி ஊடகத்திடம் பேசுகையில், “நெல்லும் கோதுமையும் மட்டுமே உணவு என வேளாண் துறையினர் இதுவரை தீவிரக் கவனம் செலுத்தி வந்துள்ளனர். சிறு தானியங்களைப் பயிரிடும் விவசாயிகளுக்குக் கூடுதல் ஊக்கம் அளித்து, வேளாண் துறை தேவையான உதவிகளை அவர்களுக்கு வழங்க வேண்டும். நல்ல வருமானம் கிடைக்கும் என்ற செய்தியை விவசாயிகளிடையே கொண்டு செல்ல வேண்டும். மேலும், உலகில் சர்க்கரை நோயில் முதலிடத்தைப் பிடித்துள்ள இந்தியாவுக்கு, மத்திய அரசு தற்போது எடுத்துள்ள முடிவு மிகவும் அவசியமானது” என்று தெரிவித்தார்.
மேலும், இயற்கை வேளாண் அறிஞர் நம்மாழ்வாரின் 'வானகம்' உயிர்ச்சூழல் மையத்தின் செயலர் மருதம் குமார் உள்ளிட்டோரும் இத்திட்டத்துக்கு வரவேற்புத் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக