காங்கிரஸுடன் கூட்டணியா? யெச்சூரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியானது, வரும் 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில்... - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

காங்கிரஸுடன் கூட்டணியா? யெச்சூரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியானது, வரும் 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில்...


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியானது, வரும் 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எந்தவொரு அரசியல் அணியிலோ அல்லது காங்கிரஸ் கூட்டணியிலோ இணையாது என்று பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

காங்கிரஸுடன் தேர்தல் கூட்டணியோ புரிந்துணர்வோ வைத்துக்கொள்ள வேண்டாம் என்று கடந்த பிப்ரவரியில் நடந்த மார்க்சிஸ்ட் மத்தியக் குழு கூட்டத்தில் வரைவுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதனையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22 ஆவது அகில இந்திய மாநாடு கடந்த ஏப்ரலில் நடைபெற்றது. மாநாட்டின் நான்காவது நாளான ஏப்ரல் 21 ஆம் தேதி, காங்கிரஸ் கட்சியுடனான உறவு குறித்த கொள்கைகள், எல்லா வாய்ப்புகளையும் எதிர்கொள்ளும் வகையில் இருக்க வேண்டுமென்று முடிவு செய்யப்பட்டு, ஏற்கனவே மத்தியக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட வரைவுத் தீர்மானத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி இரண்டு நாள் பயணமாக ஒடிசா சென்றுள்ளார். நேற்று (மே 11) பெர்ஹம்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சீதாராம் யெச்சூரி, “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியானது வரும் 2019 ஆம் ஆண்டு மக்களைவைத் தேர்தலில் எந்தவொரு அரசியல் அணியிலோ அல்லது காங்கிரஸ் கூட்டணியிலோ இணையாது” என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

பிஜு ஜனதா தளக் கட்சியுடன் கூட்டணி வைக்கும் எண்ணம் உள்ளதா? என்ற கேள்விக்கு,

“2019 தேர்தலில் பிஜு ஜனதா தளக் கட்சியுடன் இணைந்து செயல்பட வேண்டுமா என்பது குறித்து சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு எங்கள் கட்சி ஒடிசா மாநிலக் குழு முடிவெடுக்கும். மாநிலத்தில் காங்கிரஸுடன் ஒரு புரிதலை சாத்தியமாக்கிக்கொள்ள வேண்டிய சூழல் ஒடிசாவில் இருப்பதை மறுப்பதற்கில்லை. இதற்கு பாஜகவை வீழ்த்துவதுதான் குறிக்கோள் என்ற ஒரே அணுகுமுறை தான் காரணம்” என்றும் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசுகையில், “பாஜகவின் கொள்கைகளால் ஏழைகள் மேலும் ஏழைகளாகவும் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக மாற்றப்படுகிறார்கள். 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக அரசு நிச்சயம் வீழ்த்தப்படும்” என்றும் சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here