இந்திய தேசிய இயக்கத்தின் தந்தை எனப் போற்றப்படும் பால கங்காதர திலகரை பயங்கரவாதத்தின் தந்தை (Father of terrorism) என எட்டாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலக் கல்வி வாரியத்தின் கீழ் தனியார் ஆங்கிலப் பள்ளிகள் இயங்கிவருகின்றன. ஆங்கில வழிக் கல்வி எட்டாம் வகுப்புப் பாடப் புத்தகத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் பால கங்காதர திலகரை பயங்காரவாதத்தின் தந்தை என குறிப்பிடப்பட்டுள்ளது.
“சுதந்திரம் எனது பிறப்புரிமை. அதை அடைந்தே தீருவோம்” என முழக்கமிட்ட திலகர் ‘இந்திய தேசிய இயக்கத்தின் தந்தை’யாகக் கருதப்படுகிறார்.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தின் எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் ஆங்கில வழிக் கல்வி புத்தகத்தில், “திலகர், தேசிய இயக்கத்திற்கான பாதையை ஏற்படுத்திக்கொடுத்ததால் அவர் பயங்கரவாதத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்" என பகுதி 22இல் 267ஆம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் கெஞ்சுவதன் மூலம் எதையும் சாதித்துவிட முடியாது என நம்பிய அவர் நாட்டு மக்களிடையே விழிப்புணர்வைத் தூண்டினார். சுதந்திரத்திற்கான மந்திரத்தை மக்களிடையே ஏற்படுத்தினார். இதனால், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் கண்களுக்கு அவர் ஒரு முள்செடி போன்றே தெரிந்தார் என பாடப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்தப் பள்ளியின் முதலவர் அஜ்மீர் கூறுகையில், சில நாட்களுக்கு முன்புதான் பணியில் சேர்ந்தேன், அதனால்,இந்த விஷயம் குறித்து எனக்கு தெரியாது. ஆனால், கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனியார் பள்ளிக் கழக இயக்குநர் கைலாஷ் சர்மா கூறுகையில், ”திலகரை பயங்கரவாதத்தின் தந்தை என குறிப்பிட்டுள்ளது கண்டனத்திற்குரியது. பாடப் புத்தகங்களில் இடம்பெறும் வாசகங்களை எழுதுவதற்கோ அல்லது தயார் செய்வதற்கு முன்போ இத்தகைய சர்ச்சைக்குரிய வாசகங்களை மாற்ற வேண்டும். வரலாற்றாளர்களிடம் முதலில் கலந்து ஆலோசித்த பிறகு பள்ளிப் புத்தகங்களை அச்சிட வேண்டும்” என்று கூறினார்.
குழப்பம் ஏற்பட்டது எப்படி?
பாடப் புத்தகங்களில் இந்தியப் பண்பாடு, தேசத் தலைவர்கள் உள்ளிட்டவற்றைக் குறிப்பிடும்போது பல சர்ச்சைகள் ஏற்படுவது வழக்கமாகிவிட்டது.
சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் தீவிரவாதிகள், மிதவாதிகள் என இரு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டார்கள். சுய உரிமைகளுக்கான விண்ணப்பங்கள், பேச்சுவார்த்தைகள் ஆகியவற்றை நம்புபவர்கள் மிதவாதிகள் எனப்பட்டார்கள். வேண்டிப் பெறுவது அல்ல சுதந்திரம், போராடிப் பெறுவது போக்குள்ளவர்களைத் தீவிரவாதிகள் எனப்பட்டார்கள். ஆங்கிலத்தில் Extremists and moderates என இவர்களை அழைப்பார்கள். மிதவாதிகளின் கை 1885 முதல் 1905வரை ஓங்கியிருந்தது. தீவிரப் போக்கு கொண்ட சுதந்திரப் போராட்டக்காரர்களின் கை 1905 முதல் 1920வரை ஓங்கியிருந்தது. அதன் பிறகு காந்தியத்தின் காலம் தொடங்கியது.
Extremists என்னும் சொல்லை Terrorists என்னும் சொல்லோடு குழப்பிக்கொண்டதுதான் மேற்படிப் பாடப் புத்தகத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடிக்குக் காரணமாக இருந்திருக்க வேண்டும். அதனால்தான் தீவிரவாதிகளின் தந்தை என்பதற்குப் பதில் பயங்கரவாதிகளின் தந்தை எனத் திலகர் குறிப்பிடப்பட்டிருக்கிறார். தீவிரவாதம் என்பதும் சுதந்திரப் போராட்டக் காலத்தில் கொண்டிருந்த பொருள் வேறு, இன்றைக்கு அது தரும் பொருள் வேறு என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.
வரலாற்றை எழுதும்போது அதன் பின்புலத்தையும் சேர்த்துப் புரிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட வேண்டும். ஒரு சொல் கால மாற்றத்தில் எத்தகைய பொருளைத் தருகிறது என்பதையும் கணக்கில் எடுத்துக்கொண்டு எழுதப்பட வேண்டும் என்பதையே இது காட்டுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக