காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, திருச்சியில் மே 8ஆம் தேதி விவசாயிகள் இணைந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்த இருப்பதாக விவசாயிகளின் சங்கங்கள் அறிவித்துள்ளன. விவசாயிகள், பொதுமக்கள், அரசியல் கட்சிகள் எனப் பல்வேறு தரப்பில் இருந்து வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. ஆனால் மத்திய அரசு உரிய காலத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல், இன்னும் மூன்று மாதங்கள் அவகாசம் கேட்டது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த நிலையில் நேற்று (மே 3) உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு காவிரி வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்யாமல், வரும் 16ஆம் தேதி வரை அவகாசம் கேட்டுள்ளது. இதற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் காவிரி தொடர்பாக மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை வரும் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இதுதொடர்பாக, “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் விவசாயிகளை மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. இது தமிழக விவசாயிகளுக்கும், மக்களுக்கும் இழைக்கப்படும் பெரும் துரோகம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களையும் நடத்தியும் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. இந்த நிலையில் மே 8ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்” என்று திருச்சி விவசாயச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு மத்திய அரசு காலம் தாழ்த்திக்கொண்டிருந்தால், மாபெரும் போராட்டங்கள் நடத்துவோம் என்று அரசியல் கட்சி தலைவர்களும் தெரிவித்து வருகிறார்கள்.
காவிரி வரைவுத் திட்டத்தைத் தாக்கல் செய்ய மேலும் பத்து நாள்கள் மத்திய அரசு அவகாசம் கோரியதையடுத்து, உச்ச நீதிமன்ற வளாகத்தின் முன்பு கூடியிருந்த விவசாயிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒரு விவசாயி மரத்தின் மீது ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக