தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றியபோது நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அவருக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த அவரை, கோவையில் மேற்கு வங்க போலீசார் கைது செய்தனர். ஆறு மாத சிறைவாசத்திற்குப் பிறகு கடந்த டிசம்பரில் அவர் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், கொல்கத்தாவில், பல்வேறு மனித உரிமை அமைப்புகள் ஏற்பாடு செய்த மாநாட்டில் நேற்று (மே 16) அவர் கலந்துகொண்டார். அப்போது அவர் ‘ஊழலுக்கு எதிரான கட்சி' (Anti-Corruption Dynamic Party)’ என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றைத் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளார். மேலும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் எனவும் பெண் வேட்பாளர்களை மட்டுமே தனது கட்சியின் சார்பில் களமிறக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கட்சிக்கு அங்கீகாரம் வழங்கக் கோரி தேர்தல் ஆணையத்தை அணுகிவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக நான் களமிறங்க வேண்டும் என்று என் கட்சியினர் கோரிக்கை வைக்கின்றனர். எனினும் பெண் வேட்பாளர் ஒருவருக்கே வாய்ப்பு வழங்கப்படும்.
நாடு முழுவதும் சிறுபான்மையினர், தலித்துக்கள், பார்சிகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தப்படுகின்றன. அவர்களைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்” என்று கூறினார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவி சமூக ஆர்வலர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக