கல்வியின் தரத்தை உறுதி செய்யவும் பள்ளிக் கண்காணிப்புப் பணிகளை மேம்படுத்திடவும் பள்ளிக் கல்வித் துறை நிர்வாகம் சீரமைக்கப்பட்டு பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப்யாதவ் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அரசாணை:
தமிழகத்தில் உள்ள 37,112 அரசுப் பள்ளிகள், 8,403 அரசு உதவி பெறும் பள்ளிகள், 12,419 சுயநிதிப்பள்ளிகள் ஆகியற்றை ஒழுங்குபடுத்தவும், கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளவும் நிர்வாக ரீதியாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் (ஐஎம்எஸ்), ஆங்கிலோ இந்தியன் பள்ளி ஆய்வாளர் (ஐஏஎஸ்), மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்கள் மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு நிகராக மாற்றம் செய்யப்படுகிறது.
அதன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் சமமான கல்வி மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு பள்ளிகள் ஒதுக்கீடு செய்யப்படும்.
இதைத் தொடர்ந்து தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, நர்சரி பள்ளி, தனியார் பள்ளி என அனைத்துப் பள்ளிகளையும் ஆய்வு செய்யும் அதிகாரம் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்படுகிறது.
அதேபோன்று உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்கள் வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களாக மாற்றம் செய்யப்படுகிறது.
இந்த அலுவலர்கள் தங்களது எல்லைக்குட்பட்ட எந்தப் பள்ளியை வேண்டுமானாலும் ஆய்வு செய்யும் அதிகாரம் வழங்கப்படுகிறது.
இதுவரை ஒழுங்கு நடவடிக்கை, நிர்வாக அதிகாரங்கள் மாநில அளவிலான இயக்குநர்கள், இணை இயக்குநர்களிடம் அதிகளவில் இருந்தது.
இனி இந்த ஒழுங்கு நடவடிக்கை, நிர்வாக அதிகாரங்கள் மாவட்ட அளவிலான அலுவலர்களுக்குப் பிரித்து வழங்கப்படுகிறது.
இதற்கு முன்பு இந்தப் பணியிடங்கள் தனித்தனியாக இருந்ததால் பள்ளிகளை ஆய்வு செய்தல், ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளுதல் போன்றவற்றில் சில பிரச்னைகள் ஏற்பட்டன.
தற்போது நிர்வாகச் சீரமைப்பு செய்யப்பட்டதன் மூலம் ஆய்வு, கண்காணிப்புப் பணிகள் மேலும் மேம்பட்டு கல்வியின் தரத்தை உறுதி செய்ய முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக