கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ஐபிஎல்லின் இறுதிப் போட்டி இன்று இரவு 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களைப் பிடித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இரு அணிகளின் பலம் மற்றும் பலவீனங்கள்
சென்னை அணி பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் சமநிலையில் உள்ளது. ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு வீரர் பேட்டிங்கில் விஸ்வரூபம் எடுக்கின்றனர். தொடக்கவீரர்கள் வாட்சன்; ராயுடுவை விரைவில் வெளியேற்றாவிட்டால் ஹைதராபாத்தின் நிலைமை திண்டாட்டம் தான். தீபக் சஹார், லுங்கி ங்கிடி, ஷரத்துல் தாக்கூர் ஆகியோரின் பந்துவீச்சு அந்த அணிக்குக் கூடுதல் பலமாகும்.
சென்னையுடன் ஒப்பிடுகையில் ஹைதராபாத்தின் பேட்டிங் சற்று மந்தம் தான். கேப்டன் வில்லியம்சன், ஷிகர் தவன் இருவர் மட்டுமே நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இருப்பினும் இன்றைய போட்டியில் ஹைதராபாத் வெற்றிபெற மிடில் ஆர்டர் வீரர்களின் பங்களிப்பும் அவசியமானதாகும்.
லீக் போட்டியில் தொடர்ச்சியாக நான்கு தோல்விகளை சந்தித்துத் துவண்டு போயிருந்த அந்த அணிக்கு ப்ளே ஆஃபில் கொல்கத்தா உடனான வெற்றி சற்று தெம்பு அளித்திருக்கும். ரஷித் கான் பந்துவீச்சு மட்டுமின்றி பேட்டிங்கிலும் சிறப்பாக ஆடி வருகிறார்.
இரு அணிகளும் ஐபிஎல்லில் இதுவரை 9 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் சென்னை ஏழு ஆட்டங்களிலும், ஹைதராபாத் 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்த சீசனில் இவ்விரு அணிகள் மோதிய மூன்று போட்டிகளிலும் சென்னையே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிறப்பம்சங்கள்
இன்று சென்னை அணி ஏழாவது முறையாக இறுதிபோட்டியில் ஆடுகிறது. ஹைதராபாத்துக்கு இது இரண்டாவது முறையாகும்.
சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு இது எட்டாவது இறுதிப்போட்டியாகும். சென்னை அணியில் 6 முறையும், புனே அணியில் ஒரு முறையும் இறுதிப்போட்டியில் ஆடியிருக்கிறார்.
தோனி இன்னும் 7 ரன்கள் எடுத்தால் ஐபிஎல்லில் அதிகபட்ச ரன்கள் எடுத்த அவரது முந்தைய சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது. இந்த சீசனில் இதுவரை 15 ஆட்டங்களில் விளையாடி 455 ரன்கள் எடுத்துள்ளார்.
ஐபிஎல்லில் இதுவரை நடந்துள்ள 10 இறுதிப்போட்டியில் 7 முறை முதலில் பேட் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது.
இரண்டு ஆண்டுகள் தடைக்கு பின் களமிறங்கி இறுதிபோட்டிவரை சென்றுள்ள சென்னை அணி, இம்முறை கோப்பையை வெல்ல ஆவலுடன் இருக்கும். அதே சமயம் முதன் முறையாக கேன் வில்லியம்சன் தலைமையில் களமிறங்கும் ஹைதராபாத் அணியும் வெற்றிக்காக கடுமையாகப் போராடும். எனவே இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்குப் பஞ்சம் இருக்காது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக