நெல்லை: செங்கோட்டை - புனலூர் அகல ரயில் பாதையில் முறையாக திறப்பு விழா நடத்திவிட்டு வரும் ஜூன் மாதத்தில் புதிய ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் இருந்து கொல்லத்திற்கு பாசஞ்சர் ரயில் இயக்குவது குறித்து ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். தமிழகம்- கேரள எல்லைகளை இணைக்கும் செங்கோட்டை - புனலூர் ரயில் பாதை மொத்தம் 51 கிலோ மீட்டர் தூரம் கொண்டதாகும். இந்த மீட்டர் கேஜ் பாதையை அகற்றி விட்டு அகல ரயில் பாதைக்காக கடந்த 2010ம் ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி ரயில் சேவை நிறுத்தப்பட்டது. 8 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்ட பணிகள் கடந்த டிசம்பரில் நிறைவு பெற்றன. அதை தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் சோதனை ஓட்டமும் நடத்தி முடிக்கப்பட்டது. இந்நிலையில் மார்ச் இறுதியில் ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி மார்ச் 31ம் தேதி முதல் தாம்பரத்தில் இருந்து கொல்லம் வரை வாரம் இருமுறை சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டு தற்போது இயக்கப்பட்டு வருகிறது. அதை தொடர்ந்து புதிய ரயில்கள் இயக்கப்படும் என எதிர்பார்த்த பயணிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. ஏனெனில் இந்த வழித்தடத்தில் இன்று வரை முறையான திறப்பு விழாவை அதிகாரிகள் நடத்தவில்லை.இந்நிலையில் புதிய ரயில்களை இயக்குவதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டு தெற்கு ரயில்வேக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி தற்போது இயக்கப்பட்டு வரும் தாம்பரம்- கொல்லம் ரயிலை தினசரி ரயிலாக இயக்கிட கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பாலக்காட்டில் இருந்து புனலூர் வரை செல்லும் பாலருவி எக்ஸ்பிரசை நெல்லை வரை இயக்கிட அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்.
தூத்துக்குடி- கொல்லம் புதிய பாசஞ்சர் ரயிலை நெல்லை வழியாக இயக்கிட அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். இரு துறைமுகங்கள் இணைப்பின் வழியாக சரக்குகள் வேகமாக செல்லும் என்பதால் இத்தகைய ரயிலை இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருகின்றன. திருவனந்தபுரம் கொச்சுவேலியில் இருந்து கொல்லம், செங்கோட்டை வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.செங்கோட்டை- புனலூர் மார்க்கத்தில் தென்மலை உள்ளிட்ட சுற்றுலாதலங்கள் உள்ளன. அவற்றை பார்வையிட வசதியாக கோடைகாலத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என எதிர்பார்த்த பயணிகளுக்கு இன்று வரை ஏமாற்றமே மிஞ்சுகிறது. கேரள எம்.பி.க்களின் கோரிக்கையான விஸ்டாடம் பெட்டிகள் இவ்வழியாக செல்லும் ரயில்களில் இடம் பெற்றால் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக இருக்கும். அதற்கான முயற்சிகளை கேரள ரயில்வே அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். வரும் ஜூலை மாதத்திற்குள் செங்கோட்டை- புனலூர் ரயில் மார்க்கத்தில் 5க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக