டிகே சிவகுமார் பேட்டி
கர்நாடக அரசியல் களத்தில் இப்போது பரபரப்பாக பேசப்படும் நபர் டிகே சிவக்குமார். குதிரை பேர முயற்சிகளுக்கு ஆட்படாமல் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏ.க்களைக் கோழிக் குஞ்சுபோல் பாதுகாத்து, நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் முன்பே எடியூரப்பா முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய முக்கியக் காரணம் சிவகுமார்தான். காங்கிரஸின் ஆபத்பாந்தவன் என்று அழைக்கப்படும் இவர் தற்போதைய கர்நாடக, தேசிய அரசியல் பற்றி தி இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு அளித்த பேட்டியின் தமிழாக்கம்...
உங்கள் அரசியல் அனுபவத்தில் கடந்த வார நாட்கள் எப்படி இருந்தது?
காங்கிரஸுக்கென்று தெளிவான மக்கள் தீர்ப்பு கிடைக்கவில்லை என்பது உண்மை. ஆனாலும் கர்நாடகத்தில் மதச்சார்பற்ற அரசு மலரவேண்டும் என்பதில் எங்கள் தலைவர் ராகுல் காந்தி தெளிவாக இருந்தார். அவர்தான் இந்த ஆபரேஷன் முழுமையும் இயக்கினார், அவர்தான் வழிகாட்டினார். ஒவ்வொரு திட்டங்களும் ராகுல் காந்தியால்தான் செயல்படுத்தப்பட்டன. நல்ல வேளையாக எங்களின் முயற்சிக்கு மதச்சார்பற்ற ஜனதா தளம் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்தது. அவர்களும் பல அழுத்தங்களுக்கு ஆட்பட்டிருந்தனர். ஆனாலும் தேசிய நலன் கருதி, தேச நலன் கருதி இரு கட்சிகளும் ஒன்று சேர்ந்து மதச்சார்பற்ற அரசு அமைக்க முடிவு செய்து அமைத்தோம்
இந்த இடத்தில் ஒன்றை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். பிரதமர் மோடி வெளிப்படையாக காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளை ஒன்று சேர்ந்து அரசு அமைக்க அனுமதிக்க மாட்டேன் என்று பேசியிருக்கிறார். அவர் தனிப்பட்ட மோடியோ பாஜகவின் மோடியோ அல்ல, அவர் இப்போது பிரதமர் மோடி,. எல்லா அரசியலுக்கும் அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும் பிரதமர். ஆனால் அவர் அவ்வாறு இல்லை.
குஜராத் சட்டமன்றத் தேர்தலில் எங்களுக்குத் தேவையான நம்பர்கள் கிடைக்காத போது நாங்கள் அரசு அமைக்க முயலவில்லை. சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தோம். ஆனால் பாஜக கோவாவில் அப்படி செய்யவில்லை. தனிப்பெரும் கட்சியான எங்களுக்கு எதிராக மற்ற கட்சிகளைத் திரட்டி ஆட்சி அமைத்தது. ஆனால் அதே சூத்திரம் கர்நாடகத்துக்குப் பொருத்தமற்றது என்று பாஜக கூறுகிறது. நல்ல வேளை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் எங்களுக்கு நீதி கிடைத்திருக்கிறது. இந்த குறுகிய அவகாசத்திலேயே அவர்கள் எங்களது இரண்டு எம்.எல்.ஏ.க்களை கடத்தி விட்டார்கள். ஆனாலும் நாங்கள் அவர்களை மீட்டோம்.
குமாரசாமி பதவியேற்ற பிறகு நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பின்போதும் இத்தகைய பிரச்சினைகள் இருக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்?
பாஜகவினர் இனிமேலும் அதுமாதிரியான முயற்சிகளில் இறங்கக்கூடும். ஏனெனில் அவர்களுக்கு இமேஜ் பற்றி பிரச்சினை இல்லை. அவர்கள் நாட்டைப் பற்றி அதிகம் கவலைப்படக்கூடியவர்கள் அல்ல. கர்நாடகத் தேர்தல் முடிவுகளுக்குப் பின் அவர்கள் நடந்துகொண்ட விதத்தை வைத்து பாஜகவின் இமேஜ் தேசிய அளவில் சரிந்து போயிருக்கிறது. ஆனால் அதேநேரம் குமாரசாமியின் பதவியேற்பு விழாவில் மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, சரத்பவார், மாயாவதி என்று மதச்சார்பற்ற தலைவர்கள் அத்தனை பேரும் கலந்துகொள்ள இருக்கிறார்கள். இது மதச்சார்பற்ற சக்திகளின் எழுச்சியாகப் பார்க்கப்படுகிறது.
காங்கிரசுக்கும் மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கும் இடையிலான உறவு என்பது ஏற்கனவே அவ்வளவு சுமுகமானதாக இருந்ததில்லை. காங்கிரஸ் இதை எப்படிக் கையாள இருக்கிறது?
நாங்கள் இப்போது சூழலின் பாதையில் நடந்துகொண்டிருக்கிறோம். நான் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் கடுமையான எதிரி என்பது என்னை அறிந்தவர்களுக்குத் தெரியும். ஆனால் தலைவர் ராகுல் காந்தி கட்சியின் நலன் கருதி ஒரு முடிவெடுக்கிறார் என்கிறபோது என் பிரச்னைகளைத் தள்ளிவைத்துவிட்டு தலைவரின் முடிவுப்படி நடப்பது என் கடமை. தனிநபரின் தேவையை விட இந்த நாட்டின் தேவை முக்கியமானது அல்லவா? மேலும், கடந்த காலங்களில் இருந்து நாங்கள் பாடம் படித்திருக்கிறோம். அதனால் மதச்சார்பற்ற அரசை மிக கவனமாகக் கொண்டுசெல்வோம்.
குமாரசாமி தெற்கு கர்நாடகாவைச் சேர்ந்த தலைவர். அவர் முதல்வரான பின்னர் அவரது செல்வாக்கு மேலும் உயரும்., அதே தெற்கு கர்நாடகாவைச் சேர்ந்த உங்களின் அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கருதுகிறீர்கள்?
நான் இந்தக் கேள்வியை கட்சியின் தலைமைக்கே விட்டுவிடுகிறேன். என் கடுமையான உழைப்புக்கு காங்கிரஸ் தலைமை தக்க பரிசு வழங்கும் என்று நம்புகிறேன். பத்திரிகையாளர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் என்னையும் எனது செயல்பாடுகளையும் கவனித்து வருகிறார்கள்.காங்கிரஸ் தலைமை கவனிக்காமல் இருக்குமா? இருக்காது. ராகுல் காந்தியும் காந்தி குடும்பமும் என்னைக் கைவிட மாட்டார்கள்.
கர்நாடகத்தில் உருவான இந்த கூட்டணி வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
நிச்சயம் ஏற்படுத்தும். இந்த விஷயத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட்டு உள்ளன. மதச்சார்பற்ற சக்திகள் அனைத்தும் ஒன்றாகியிருக்கிறோம். அவர்கள் இந்த மெகா கூட்டணியில் பங்கேற்க விருப்பமாக இருக்கிறார்கள். எனவே இது நிச்சயம் வரும் நாடாளுமன்றத்தில் எதிரொலிக்கும்.
நாடாளுமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் -காங்கிரஸ் கூட்டணி தொடருமா?
இதைச் சொல்லக் கட்சிக்குள் சில விவாதங்கள் நடந்தாக வேண்டும். அதன் பின் முறைப்படி கட்சி இது பற்றி அறிவிக்கும். பாஜகவை அப்புறப்படுத்துவதே எங்கள் நோக்கம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக