கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில் வினாத்தாள் மாறிய விவகாரத்தில், பாதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு வரும் 27ஆம் தேதி மறுதேர்வு நடத்தப்படும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா கூறியுள்ளார்.
டிஎன்பிஎஸ்சி சார்பில் பொதுப்பணித் துறையின் ஐந்து பிரிவுகளுக்கான 324 உதவிப் பொறியாளர் பணியிடங்களுக்கு மே 20 ஆம் தேதி தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வு காஞ்சிபுரம் மாவட்டத்தில் 6 மையங்களில் நடைபெற்றது. இதில் மின்னணு தொடர்பியல், மின்னியல்-மின்னணுவியல், சிவில் உள்ளிட்ட பொறியல் படிப்புகளுக்கு தேர்வு நடந்தது.
காஞ்சிபுரம் எஸ்எஸ்கேவி ஆண்கள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அறை எண் 14இல் மின்னியல் பாடப் பிரிவில் தேர்வு எழுதுவோர் சுமார் 20க்கும் மேற்பட்டோருக்கு குறிப்பிட்ட பாடப் பிரிவுக்கு பதிலாக வேறு பாடப் பிரிவு வினாத்தாள் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாணவர்கள் தேர்வறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தது மட்டுமில்லாமல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட, 16 தேர்வர்களுக்கு, 27ஆம் தேதி மறுத்தேர்வு நடத்த, டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதற்கான முறையான அறிவிப்பு நாளை வெளியாகும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக