இது தொடர்பாக இந்திய மருத்துவக் கவுன்சில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது
புதிய நெக்ஸ்ட் தேர்வு முறை அடுத்த ஆண்டிலிருந்து அமலுக்கு வருகிறது. முன்னதாக,வெளிநாட்டில் மருத்துவப் படிப்பு படித்து விட்டு வரும் பட்டதாரிகள் இந்தியாவில் பணியாற்ற வேண்டும் என்றால் அதற்கு கட்டாயம் எஃப்எம்ஜிஇ (Foreign Medical Graduates Exam)எனப்படும் தேர்வு எழுத வேண்டும். தற்போது எஃப்எம்ஜிஇ தேர்வும் நெக்ஸ்ட் தேர்வும் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் எஃப்எம்ஜிஇ தேர்வுக்குப் பதிலாக நெக்ஸ்ட் (National Exit Test -NEXT) தேர்வை எழுதுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டிலிருந்து வரும் மருத்துவப் பட்டதாரிகள் முதலில் நீட் தேர்வை எழுத வேண்டும் அதனைத் தொடர்ந்து நெக்ஸ்ட் தேர்வும் எழுத வேண்டும். நெக்ஸ்ட் தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் இந்திய மருத்துவக் கவுன்சில் நமது நாட்டில் பணிபுரிய தகுதிச் சான்றிதழ் வழங்கும்.
இதுவரை வெளிநாட்டிற்கு படிக்கப் போவதற்கு முன்னதாகவே மாணவர்கள் நீட் தேர்வு எழுத வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது புதிய விதிகளின்படி, அவர்கள் வெளிநாட்டில் மருத்துவப் படிப்பு முடித்து விட்டு இந்தியாவுக்கு வரும்போது அவர்கள் முதலில் நீட்டும் அதில் தகுதி பெற்ற பின்னர் நெக்ஸ்ட்டும் எழுத வேண்டும்.
மத்திய அரசு கொண்டுவரும் தேசிய மருத்துவ ஆணைய மசோதா 2018இன் ஒரு பகுதியாகவே நெக்ஸ்ட் தேர்வு முறை அமல்படுத்தப்பட உள்ளது. இந்தப் புதிய மசோதா நாடாளுமன்றத்தின் பருவகால அமர்வின்போது அவையில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
நாடாளுமன்றத்தின் சுகாதாரத்திற்கான நிலைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் மசோதாவில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாடு முழுவதும் எம்பிபிஎஸ் பட்டப்படிப்பை ஒரே மாதிரி தரப்படுத்தும் நோக்கில் இம்மசோதா அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக இந்திய மருத்துவக் கவுன்சில் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் சுகாதார அமைச்சகத்தின் தகவலின் படி, 2015-16இல் வெளிநாட்டில் மருத்துவ படிப்பு படித்த 5863 பட்டதாரிகளில் 610 பேரே இந்திய மருத்துவ கவுன்சில் நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். எஃப்எம்ஜிஇ தேர்வில் 50 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றால்தான் தகுதி பெற்றவராக இந்திய மருத்துவக் கவுன்சில் சான்றிதழ் வழங்கும். தற்போது அறிமுகப்படுத்தப்படவுள்ள நெக்ஸ்ட் தேர்வில் எவ்வளவு தகுதி மதிப்பெண்கள் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக