தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையப் போகும் இடம் மதுரையா, தஞ்சாவூரா என்பது பற்றி எந்த நேரத்திலும் மத்திய அரசு அறிவிப்பை வெளியிடலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
2015ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காகத் தஞ்சாவூரில் செங்கிப்பட்டி, மதுரையில் தோப்பூர், ஈரோட்டில் பெருந்துறை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கல்பட்டு மற்றும் புதுக்கோட்டை ஆகிய ஐந்து இடங்களை மத்திய அரசிடம் மாநில அரசு பரிந்துரைத்திருந்தது.
தமிழகத்தில் எய்ம்ஸ் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்து மூன்றாண்டுகள் ஆகியும் இன்னும் எய்ம்ஸ் அமைப்பதற்கான இடத்தை மத்திய அரசு தேர்வு செய்யாமல் இருக்கிறது என்று பல்வேறு புகார்கள் எழுந்தன. மேலும், இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் அமைக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.
இந்த நிலையில், மதுரையில் உள்ள தோப்பூர் மற்றும் தஞ்சாவூரில் உள்ள செங்கிப்பட்டி ஆகிய இரண்டு இடங்களில், ஏதாவது ஓர் இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்றும், உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் வரும் 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக